நான் ஒரு மருத்துவன்

நான் ஒரு மருத்துவன்...
பிறர் உள்ளம் அறிந்து
கிடப்பதைக் கதைத்து
அதைக் கரைக்கத் தெரிந்தவன் ...
கூடவே... தைக்கவும்
தெரிந்தவன் ...

பலருக்கு நண்பன் ...
சிலருக்கோ விரோதி...
என் மக்களுக்கோ ... தந்தை...

இல்லத்தில் நானோ
எல்லோர் உள்ளத்திலும்...
பிறர் உள்ளத்தில்...
நானோ ... ஆழத்தில் ...


பிறருக்கு
நான் கைராசி ...
உண்மைதானா?...
என நீ யோசி!

தூரிகை பிடித்து
பிறருக்காக எழுதவும் ...
வரையவும் தெரிந்தவன்...
காரிகை... கை பிடித்ததால் ...
இப்போது ... பல கவி...
விதைக்கிறேன்...

எனக்குப் பிடித்த இடம்..
என் உள்ளம்...
அதன் பின்
என் இல்லம்...
இவை இரண்டையும்
அறிந்தவள் ...என் இல்லாள் ...
அவளில்லை எனில் ...
நானில்லை...

பலர் நலம் பேன
என் நலம்
மறந்திருக்கிறேன்...
பிறர் நலம் பேணி
எனையே மறந்திருக்கிறேன்...

விருந்துண்ண
எனை அழைப்பர்...பல நேரம்...
இருந்துண்ண
நேரமில்லை.... சில நேரம்...

பல நாட்கள் ...
வெளியூர் செல்ல
தயாராகும் போது...
பிணியால்... என்னை
செல்லவிடாது...
தடுத்திருக்கின்றனர்...

அப்போதெல்லாம்...
என் பிள்ளைகளின்
கோபத்திற்கு... ஆளாகி
இருக்கிறேன்...

என்றாலும்...
அக்கணங்களில்...
என்ன தொழில்?
என்ன வாழ்க்கை?
என எண்ணத் தோன்றும் ....
மறு கணமோ...
பிணியாளனின்
வலித் துடிப்பைப் பார்த்து ...

"என் பணி
பிணி நீக்கிக் கிடப்பதே"...
என நினைக்கையில் ...
வலிகள்
பனி போல் மறைந்துவிடும்.

என் லயிப்போ
தொழுகையில் ...
என் மகிழ்ச்சியோ
ஈகையில் ...
என் மரணமோ
இறை கையில் ...
எதுவுமில்லை
என் கையில்.

(சுமார் ... 20 ஆண்டுகளுக்கு முன்...நானே...என்னைப் பற்றி...எழுதி வைத்த வரிகள்... இன்று மீண்டும் நினைவுக்குள்).

மரு.ப. ஆதம் சேக் அலி
களக்காடு.

எழுதியவர் : PASALI (1-Jul-21, 5:04 pm)
சேர்த்தது : PASALI
Tanglish : naan oru maruthuvan
பார்வை : 54

மேலே