கடமை உணர்ந்து சீர்மையை ஏந்தி வருமாயின் அவ்வழி யாகும் அரசு - தகவு, தருமதீபிகை 852
நேரிசை வெண்பா
கடமை உணர்ந்து கருமம் புரிந்து
மடமை கடிந்து மதியாய்த் - திடமுடனே
எவ்வழியும் சீர்மையை ஏந்தி வருமாயின்
அவ்வழி யாகும் அரசு 852
- தகவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
தான் செய்யவுரிய கடமையை உணர்ந்து பருவம் தவறாமல் கருமங்கள் புரிந்து மடமை கடிந்து மதிமிகுந்து உள்ளத் துணிவுடன் எவ்வழியும் செவ்வையாய்ச் சீர்செய்து தேசத்தைப் பேணிவரின் அரசு பெருமகிமையாய்ப் பேர் பெற்று விளங்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
பிறந்த ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய நிலையில் உழைக்கவே ஈண்டு உருவாகி வந்திருக்கிறான். உழையாது நின்றால் அவ்வுயிர் வாழ்வு பிழையான பிரேத வாழ்வாம். உடல் உழைப்பால் உயிரின் பிழைப்பு உயர்வாய் உளவாகி வருகிறது.
மனித இனம் கூடி வாழும் இயல்புடையது; கூட்டம் கூட்டமாய் வாழ நேரவே அங்கங்கே ஒரு தலைவன் ஆள நேர்ந்தான்.
ஒரு வீடு, ஓர் ஊர், ஒரு நாடு, உலகம் என்பன உயிரினங்கள் வாழும் நிலையங்களாம். ஆகவே வீட்டுத் தலைவன், ஊர்த்தலைவன், நாட்டுத் தலைவன், உலகத் தலைவன் எனத் தலைவர்கள் உலாவ நேர்ந்தனர். ஒன்றை விட ஒன்று உயர்ந்து நிற்றலால் தலைமைகளின் நிலைமைகளையும் நீர்மைகளையும் நினைந்து கொள்ளலாம்.
தன்னைச் சார்ந்துள்ள மக்கள் ஆர்ந்த அமைதியோடு வாழ்ந்துவர ஓர்ந்து செய்து வருபவனே உயர்ந்த தலைவன் ஆகிறான். பிறர் நலமுற எவன் உரிமையோடு பேணுகின்றானோ அதிசய மகிமைகளை அவன் பெருமையோடு நேரே காணுகின்றான்.
தன்னலம் கருதாமல் மன்னுயிரைக் காத்து வருகின்ற மன்னனை வானவரும் மகிமையோடு நன்கு போற்றி வருகின்றனர்.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
கன்னியர்க்(கு) அமைவரும் கற்பின், மாநிலம்
தன்னையித் தகைதரத் தருமம் கைதர,
மன்னுயிர்க்(கு) உறுவதே செய்து வைகினேன்;
என்உயிர்க்(கு) உறுவதும் செய்ய எண்ணினேன். 14
- மந்திரப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்
தசரதன் நாட்டைக் காத்து வந்திருக்கும் நிலையை இது காட்டியிருக்கிறது. தரும நீதி தழுவி உயிர்களை அவன் பேணி, வந்திருக்கிறான். மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் என்பது உன்னி உணர வுரியது. மன்னன் இன்னவாறு ஒழுக வேண்டுமென அந்த விழுமிய வேந்தன் வாய்மொழி ஈண்டு வெளி செய்துள்ளது. ஆருயிர்களை ஆதரித்து வருவதே அரசனது குல தருமமாம். அதனைச் செவ்வையாய்ச் செய்து வருகின்றவன் எவ்வழியும் திவ்விய மகிமையை எய்தி மகிழ்கின்றான்.
தன் கிரணங்களால் கடல் நீரைச் சிறிது சிறிதாக மேல் இழுத்துப் பின்பு இனிய மழையாக உலகம் எங்கும் பெய்தருளுகிற சூரியன் போலக் குடிகளிடம் கொஞ்சம் வரிகளை வாங்கி நாடு முழுதும் நலமடைய அரசன் நாடிச் செய்கிறான். மனித சமுதாயம் இனிது வாழ உதவி செய்வதே மன்னவன் கடமையாம். தன் உரிமையைப் புரிவது தருமமாய் வருகிறது.
தலைமுறையாய் வந்த தன் குலமுறையை நலமாய்ச் செய்து வருகிற அரசன் தருமவானாயுயர்ந்து இருமையும் பெருமை பெறுகிறான்; அங்ஙனம் செய்யாது விடின் பழிபடிந்து இழிவுறுகிறான்; உயர்வும் இழிவும் அவன் செயலால் விளைகின்றன;.
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
ஆவையும் பாவையும் மற்றற வோரையுந்
தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன் காவா தொழிவனேல்
மேவும் மறுமைக்கு மீளா நரகமே! 6
திறந்தரு முத்தியுஞ் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலஞ் செய்தொழில் யாவும்
அறைந்திடில் வேந்தனுக் காறிலொன் றாமே! 7
- முதல் தந்திரம் 16 அரசாட்சி முறை, பத்தாம் திருமுறை, திருமந்திரம்
தன் கருமத்தை அரசன் கருதிச் செய்தவரின் பேரின்ப நிலையை அடைவன்; செய்யாதொழியின் மீளா நரகில் விழுவன் எனத் திருமூலர் இவ்வாறு குறித்திருக்கிறார். ஆட்சி புரிவதில் எவ்வளவு அபாயங்கள் நிறைந்திருக்கின்றன என்பதை இதனால் அறிந்து கொள்கிறோம். கருதி ஆள்வதே உறுதி சூழ்வதாம்.
ஆளுகின்றவன் நாளும் நாட்டின் நலனைக் கண்ணுான்றிக் கவனிக்க வேண்டும். மக்கள் யாண்டும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து வரும்படி ஓர்ந்து செய்வதே தேர்ந்த சிறந்த நல்ல ஆட்சியாம்.
That is the best government which desires to make the people happy, and knows how to make them happy - Macaulay
சனங்களின் சேம நலங்களை அறிந்து எவ்வழியும் அவர் சுகமாய் வாழ விரும்பி ஆளுகிற ஆட்சியே உத்தமமான உயர்ந்த ஆட்சியாம்' என ஆங்கில அறிஞரான மெக்காலே இவ்வாறு கூறியிருக்கிறார். மன்னன் அன்பு மக்களை இன்புறுத்தி வருகிறது;
தேச மக்கள் சிந்தை மகிழ்ந்து சிறந்து வருமாறு புரிந்து வருவதே அரசனின் தலைமையான கடமையாம்; அதனை உணர்ந்து செய்துவரின் உயர்ந்த மேன்மைகளை அவன் அடைந்து வருகிறான். மாந்தர் சுகமாய் வாழ்ந்து வருமளவு வேந்தன் மகிமையாய் உயர்ந்து யாண்டும் சிறந்து திகழ்கிறான்