மன்னவன் மந்திரியை ஆய்ந்துகொளின் தன்னரசு நலம்பலவும் காணும் - யூகி, தருமதீபிகை 842

நேரிசை வெண்பா

மன்னவன் என்ன மதியுடையன் ஆயினும்
அன்னவனோர் மந்திரியை ஆய்ந்துகொளின் - தன்னரசு
நன்னயமாய் ஓங்கி நலம்பலவும் காணுமே
பன்னரிய மேன்மை படிந்து! 842

- யூகி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அரசன் எவ்வளவு அறிவுடையனாயிருந்தாலும் நல்ல மந்திரி ஒருவனை உரிமைத் துணையாக ஆய்ந்து கொள்ள வேண்டும்; அவ்வாறு கொள்ளின் அந்த அரசு அரிய பல நலங்களையடைந்து பெரிய வளங்களோடு உயர்ந்து விளங்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

விரிந்து பரந்துள்ள தேசத்தைச் சிறந்த முறையில் பேணி வருவது அரசனுக்குக் காணியாய் அமைந்தது. அந்தப் பாதுகாப்புக்கு உரிமையான உறுதித் துணைவர்கள் மிகவும் தேவை. அரசியல் முறைகளை நன்கு தெரிந்த உயர்ந்த அறிவாளிகளே அதற்குக் தகுந்தவர்களாதலால் அவ்வாறான தகுதியாளரைத் தேர்ந்து எடுத்து வேந்தன் பகுதி தோறும் பண்பாற்றிவரின் அந்த அரசாட்சி எவ்வழியும் செவ்வையாய்ச் சிறந்து தேசு மிகுந்து வரும். உரிய வினையாளால் அரிய ஆளுகை நிகழ்கிறது.

அரசியல் அமைச்சனால் அரிய மேன்மையாய்ப் பரசிட வரும் அவன் பான்மை காணுக என்றதனால் ஆட்சிக்கும் அமைச்சுக்கும் உள்ள உறவுரிமை உணரலாம். மந்திரியின் தகைமையே மகிபதியின் மகிமையாம்.

ஒரு நாட்டின் ஆட்சி நலமாய் நடந்து வருவது அங்கே வாய்த்துள்ள மக்திரியின் மாட்சியாலேயாம்; அலைகடலில் ஓடுகின்ற தோணிக்குக் காற்று எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் நிலவுலகில் நிகழுகின்ற ஆட்சிக்கு மந்திரி; தோணியை இயக்குகின்றவன் சிறந்த திண்ணியனாயிருந்தாலும் உரிமையான காற்று வீசவில்லையானால் அது சரியாய் இயங்காமல் தத்தளித்து நிற்கும்; அதுபோல் அரசை நடத்துகிற மன்னன் வல்லவனாயிருந்தாலும் நல்ல அமைச்சன் இல்லையானால் அந்த ஆட்சி நன்கு செல்லாமல் அல்லல் அடைந்து அலமந்து மயங்கும்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

தண்ணிய தடத்தவே யெனினுந் தாமரை
1 விண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும்
புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும்
கண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே 116

மாலமர் நெடுங்கடன் மதலை மாசிலாக்
காலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே
நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல்
வேலவ ரொழுக்கமும் வேலை காணுமே 117

ஒன்றுநன் றெனஉணர்ந் தொருவன் கொள்ளுமே
லன்றதன் றொருவனுக் கறிவு தோன்றுமே
நின்றதொன் றுண்டினி நீதி நூலினோ
டொன்றிநின் றவருரை யுலக மொட்டுமே! 118

அந்தண ரொழுக்கமு 1மரைசர் வாழ்க்கையும்
மந்திர மில்லையேன் மலரு மாண்பில
இந்திர னிறைமையு மீரைஞ் ஞூற்றுவர்
தந்திரக் கிழவர்க டாங்கச் செல்லுமே! 119 இரதநூபுரச் சருக்கம், சூளாமணி

மந்திரிகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே நன்கு சிந்திக்கவுரியன. காயத்திரி முதலிய மந்திரங்களைச் செபித்து நெறியோடு ஒழுகி வரவில்லையானால் அந்தணர் அவலமாய் அழிந்து கெடுவர்; அரசியல் மருமங்களைத் தெளிவாய் அறிந்துள்ள மந்திரிகளோடு அளவளாவி ஆலோசனைகள் செய்யாது ஒழியின் அரச வாழ்வு பாழாம். பேரறிவுடைய இந்திரனும் ஆயிரம் மந்திரிகளைத் துணையாய்க் கொண்டு விண்ணுலக ஆட்சியை வியனாய் நடத்தி வருகிறான்; ஆதலால் மண்ணாளும் வேந்தர் சிறந்த மதிமாண்புடையராயினும் தகுந்த மந்திரிகளைத் தக்க துணையாகப் பக்கம் வைத்துப் பாராள வேண்டும்; அவ்வாறு ஆண்டபோதுதான் அரசு நீண்ட மகிமையோடு நிலவிவரும் என்பதை ஈண்டு நாம் உணர்ந்து கொள்கிறோம். மண் அரசோடு விண் அரசு மதிதெளிய வந்தது.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

ஆயிரம் கதிருடை அருக்கன் பாம்பினால்
ஆயிரம் கதிரொடும் அழுங்கக் கண்டுகொல்
ஆயிரம் கண்ணுடை அமரர் கோனுமோர்
ஆயிரம் அமைச்சர்சொல் வழியின் ஆயதே! – சாந்தி புராணம்

தேவராசனுக்கு ஆயிரம் மந்திரிகள் அமைந்திருந்தனர்; அவர் சொல்வழியே அவன் நல்வழியாய் ஒழுகி வந்தான் என இது உணர்த்தியுள்ளது. நீதிமுறைகளை நெறியே உணர்ந்த அறிவாளிகளாதலால் அமைச்சர் மொழி அரசனுக்கு ஒளி விழியாய் உறுதி பயந்து எவ்வழியும் தெளிவுகளை அருளுகிறது.

நல்ல குடியில் பிறந்து கலைகள் பல கற்று நிலை வழுவாமல் ஒழுகி வருகிற விழுமியோரையே அரசியல் முறையில் வேந்தன் தழுவி வரவேண்டும். அவ்வாறு வரின் அந்த ஆளுகை எந்த நாளும் .செவ்விய நிலையில் செழித்து எவ்வழியும் சிறந்து விளங்கிவரும். உரிய துணை அரிய மகிமைகளை அருளுகிறது.

பாஅல் புளிப்பினும் பகலி ருளினும்
அல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ 2 புறநானூறு

பால் புளித்தாலும் பகல் இருண்டாலும் வேதம் ஏதமாய் நிலை திரிந்தாலும் நீதிமுறை பிறழாத மந்திரச் சுற்றத்தோடு மருவி என்றும் நீ இனிது வாழுக எனச் சேர மன்னனை நோக்கி முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் பெருமான் இவ்வாறு வாழ்த்தியிருக்கிறார். உயர்ந்த அமைச்சர்களுடைய உண்மை நிலைகள் ஈண்டு உணர வந்துள்ளன. அரிய நீர்மைகள் அமையின் அங்கே அதிசய மேன்மைகள் துதி கொண்டு திகழ்கின்றன.

சிந்தனை உயரின் சீவன் சீருறும்;
தந்திரி உயரின் தானை தாருறும்;
மந்திரி உயரின் மன்னன் மாண்புறும்.

இவை இங்கே உன்னி உணர வுரியன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-21, 6:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே