காதலுக்காக மண்டியிடுகிறேன்
உனது நினைவுகளின் மொழியில்
நான் கற்ற பாடம் - உன்
பிரிவுகளின் வ்லியில்
என்னை துயரபடுத்துகிறது
பரவாயில்லை ...
"துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்
அவர்கள் ஆறுதலைடவார்கள்"
வாரத்தின் முதல் நாளில்
நீ கர்த்தருக்காய் மண்டியிடுகிறாய்...
வாரத்தின் எல்லா நாட்களிலும்
நான் காதலுக்காக மண்டியிடுகிறேன் ...
மண்டியிட்டு பெறுவது மரபல்ல - எனினும்
"கேளுங்கள் தரப்படும்" - என்பது
உனது மரபு என்பதால் ...
உனது எல்லா புத்தகங்களிலும்
முதல் பக்கத்தில் தவறாமல் எழுதப்படுகிற
வாசகம் -
"தட்டுங்கள் திறக்கப்படும் "
இனி எத்தனை முறை தட்டினாலும்
திறக்கவேப் படாத
இரும்பு இதயங்களை
உடைப்பது குறித்தும் ஒரு வரி சேர்த்து எழுது ...
ஒரு முறை
உன் தந்தை என்னை ஆசிர்வதித்து
அருளினார்... தேடுங்கள் கிடைக்கும் என்று
அவருக்கு எப்படி தெரியும்
ஒரு நொடிப் பொழுதில்
உனக்குள் என்னை தொலைத்து விட்டு,
வாழ்நாள் முழுவதும்
எனக்குள் உன்னை நான்
தேடிக்கொண்டிருப்பது...
அன்று நடந்த ஜெபக்கூட்டத்தில்
"நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை" - என
நீ -
உரக்கச் சொன்னதை,
எனக்கு சொன்னதாய்
நினைக்கச் சொல்கிறது - நெஞ்சம்
என்றாவது ஒரு நாள்
ஏதாவது ஒரு சிலுவையில்
அறையப்பட்டு,
என் காதலும் மரிக்கக்கூடும்...
அது-
மீண்டும் உயிர்த்தெழும் செய்தியை
உலகிற்கு
முன்னரிவுக்கும் விதமாக
ஒரே ஒரு முறை
புன்னகை செய்....