லொக் டவுணில் ஒரு கலியாணம் - பகுதி 05

5
"அண்ணோய்... அண்ணோய்..." - தரகர் வீதியில் நின்று குரல் வைத்தார்

"ஆ... லிங்கமே... உள்ள வா.... வா..." முற்றம் கூட்டிக்கொண்டு நின்ற நடராசா வரவேற்றார்.

"அட... சொன்ன மாதிரியே வந்திட்டீங்கள்... உள்ள வந்து இருங்கோ தம்பி..." - பவளம்

"இந்த விசயம் எல்லாம் சூட்டோட சூடா முடிச்சிடோனும் அக்கா... ஆறப்போடக்கூடாது..." - தரகர்

"அதென்றால் உண்மை தான்... போட்டோவை தாங்கோ பார்ப்போம்..." - பவளம்

பொண்ணின் போட்டோவை ஓரிரு நிமிடங்களாக பவளமும் கவியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்

"பொண்ணு நல்ல மூக்கும் முழியுமா வடிவா லட்சணமா தான் இருக்கு... ஆதிக்கு பொருத்தமாக தான் இருக்கும்... இஞ்சைப்பா... நீங்களும் ஒருக்கா பாருங்கோ..." என கணவனிடம் புகைப்படத்தை நீட்டினார்

"நான் சொன்னேன் தானே அக்கா.... உங்க குடும்பத்துக்கு ஏற்ற பிள்ளை... தம்பி ட போட்டோ என்னட்ட இருந்தது. அவங்களுக்கு காட்டினேன். அவங்களுக்கும் பிடிச்சிருக்கு..." - தரகர்

"தம்பி... பிள்ளை ட ஜாதகத்தையும் ஒருக்கா தாங்கோ... எங்கட குடும்ப சாஸ்திரி ஒருத்தர் இருக்கிறார்..."

"கேட்பீங்கள் என்று தெரிஞ்சு தான் கையோட கொண்டு வந்தனான் அக்கா... நீங்களும் ஒருக்கா பாருங்கோ... உங்களுக்கும் திருப்தியா இருக்கும் தானே..." தரகர்


********

சந்தைக்கு சென்று திரும்பிய ஆதி கேற்றை திறந்து கொண்டே
"அம்மா... தரகர் வந்தவரோ..."

"இல்லை... ஏதோ அவசர அலுவல் இருக்காம்... இரண்டு நாளாகும் என்றார் வர... இப்போ தான் போன் பண்ணி சொன்னார்..." - கவி கூறினாள்


ஆதியின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டாள்
"இப்போ டவுணுக்கு போறதைக் கண்டன். சிரிச்சுக்கொண்டு போறார். என்னட்டை ஒன்றும் சொல்லலையே..." - கவி

"அப்பாட்ட சொன்னதால உனக்கு சொல்லாமல் விட்டிருப்பாரோ என்னவோ... சரி விடு. ரெண்டு நாள் தானே..."

மரக்கறிகளை வாங்கிக் கொண்ட தாய்,
"உந்த மேசையில பொம்பளைட போட்டோ இருக்கு... வடிவா பார்த்திட்டு சொல்லு... பிடிச்சிருக்கா இல்லையா என்று... பிறகு அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லவேண்டாம்..."

கோபத்துடன் கவியை பார்த்தான்.

"நீ தானே உந்த பிள்ளை சரிவராது என்று காலையில சொன்னாய்... இப்ப என்ன என்னை பார்த்து முறைக்கிறாய்..." - கவி

புகைப்படத்தை கையில் எடுத்த ஆதி கிட்டவாக தூரவாக பக்கமாக ஆட்டி நிமித்தி சரித்து பார்த்தான்.

"டேய் அண்ணா... அப்பிடியே விழுங்கிற மாதிரி பார்க்கிறாய்... " - கவி

முகத்தில் ஒரு வெக்கம் படந்தது.

"உன்னை விட அழகா ஒருத்தி அண்ணியா வரப்போறது உனக்கு பிடிக்கலை. அதான் பொறாமை..." - என்றான் ஆதி

"என்னது... அண்ணியா... அப்போ உனக்கு பிடிச்சிருக்கா... மச்சம் எல்லாம் சாப்பிட ஏலாது. தெரியும் தானே..."

"இப்பிடி ஒருத்தி கிடைச்சால் நான் ஐயராக மாறவும் தயார்..."

"என்ன டா... இப்பிடி கவிழ்ந்திட்டாய்... அம்மா... போனை போட்டு சொல்லிவிடுங்கோ... எல்லோருக்கும் பிடிச்சிருக்கென்று..."

நடராசாவுக்கும் பவளத்துக்கும் மகிழ்ச்சி.

"உவள் சும்மா சொல்லுறாள் டா... அவங்க மச்சம் எல்லாம் சாப்பிடுவாங்கள். அதெல்லாம் பிரச்சனை இல்லை. நாங்களும் ஒருக்கா ஜாதகத்தை பார்ப்போம். பார்த்திட்டு பேந்து சொல்லுவோம்..." - பவளம்

**************************

ஓரிரு நாட்கள் கழித்து நடராசா, தரகருக்கு அழைப்பை எடுத்தார்.

"தம்பி... நான் நடா ண்ணே கதைக்கிறேன் டா ப்பன்..."

"ஓமோம் சொல்லுங்கோ ண்ணே..."

"அந்த பிள்ளையை எங்க எல்லோருக்கும் பிடிச்சிருக்கு... ஜாதகமும் பொருத்தமா இருக்கு... அவைக்கு சொல்லிவிடுறியே..."

"சந்தோசம் ண்ணே... சந்தோசம்... இப்பவே அவங்க கிட்ட கதைக்கிறன் ண்ணே... மற்றது, பிள்ளையை ஒருக்கா நேர்ல பார்க்கிறது நல்லது தானே ண்ணே... எப்போ வாறீங்கள் என்று சொன்னீங்கள் என்றால் அதையும் கதைச்சிட்டு வந்திடுவேன்..."

"ஓமோம்... இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கிறது நல்லது தான்... இப்பிடி செய்தால் என்ன... இன்னும் ரெண்டு நாள் ல எங்கட பிள்ளையார் கோயில் ல ஆயிரம் மோதகம் பூசை ஒன்று இருக்கு. அண்டைக்கு வர வசதிப்படுமோ என்று கேளு... கோயில்லயே வைச்சு பார்த்திடுவோம்..."

"என்னமோ தெரியலை... அந்த பிள்ளையும் கட்டினால் உங்க மகனை தான் கட்டுவேன் என்று நிற்குதாம்... அதனால கோயில்லயே வைச்சுக்குவோம்... ண்ணே.."

இருவீட்டார் சம்மதத்துடன் கோயிலில் வைத்து மாப்பிள்ளை பொம்பிளை பார்க்கும் சம்பிரதாயங்கள் இனிதே நடந்தேறியது.


(((கலியாண பேச்சு தொடரும்)))

எழுதியவர் : பெல்ழி (2-Aug-21, 10:09 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 117

மேலே