ஒரு கூடை
இன்னும் சில நாட்களில் முழுவதும் பழுத்துவிடும் மாங்காய்கள் கொத்து-கொத்தாய் மருதமுத்துவின் தோட்டத்தில். ஒரே மரம் என்றாலும், ருசியானக் கனிகளைக் கொடுக்க அம்மரம் தவறியதில்லை. மருதமுத்து மாம்பழங்களை ஊர் மக்களுக்கே கொடுத்து விடுவார். சிலவற்றை ஊருகாய் செய்து வைத்துக்கொள்வார். மருமகன் கொண்டுவந்த மாங்கய் கன்று.
ஆசையாக வளர்த்து வந்தார்.
இம்முறை அதிகமாகவே காய்த்திருந்தது. இதை கண்ட ஒருவர், மருதமுத்துவிடம் மொத்தமாக விலைபேச வந்து நின்றார் வாசலின் முன்னே.
"மருத.... மருதமுத்து,இருக்கிங்களா?".
ஆணியில் மாட்டிய துண்டை எடுத்துக் கொண்ட, "வந்துடேன்" என்று பதில் கூறியவாறு வெளியே வந்தார் மருதமுத்து.
"மரத்துல நல்ல காய் பிடிச்சுருக்கு. எவ்வள தாரீக?" என்று வியாபாரி கேட்டார்.
மருதமுத்து தயக்கத்துடன் " இல்ல அண்ண. அத வித்ததில்ல. இங்க உள்ள வீடுகளுக்கு கொடுத்துப் புடுவேன்".
வியாபாரி உடனே, " நல்ல ரேட்டு கொடுக்குறன் மருத. நானே பையனுங்கள வச்சு அறுத்துகுறேன். இனிக்கோ நாளைக்கோ பழுத்துடுதுனா சீக்கிரமே பூச்சு வச்சுரும்".
மருதயின் மனைவி, அடுப்பில் குழம்பை இறக்கி வைத்து விட்டு , விரைவாக இவர்களின் பேச்சில் கலந்தாள். ரேட்டு எனும் வார்த்தை அவளை இழுத்து வந்திருக்கலாம்.
வந்து நின்றவள், மருதமுத்துவின் காதை கடித்தார். " கொஞ்சம் காசு பாக்கலாம்லே?" என்று கூறி விட்டு, வந்த வியாபாரியிடம் என்ன ரேட்டுக்கு கொடுப்பிங்க என்று ஆசையுடன் கேட்டாள். மருதமுத்துவும் மனிவியின் ஆசைக்கு எதிர்ப்பு சொல்லவில்லை. தன் பதிலையும் இருவரும் எதிர்பார்க்கவில்லை.
"ஒரு ஏழு எட்டு கூட வரும்னு நெனைக்குரங்க. உடனே வித்துரனும். ஒரு கூடைக்கு 300 கொடுத்துரேன்" என பணத்தை வாயால் அடுக்கிட, மருதமுத்துவின் பதிலை எதிர்பார்க்காமல், ஆசையை அடக்கியவாரே , " இனிக்கே அறுத்துபுடுங்க" என்றாள் மனைவி.
" ஒரு கூடய மட்டும் கொடுத்துடுங்க. சில பேரு கேப்பாங்க" என ஏக்கமாகச் சொன்னவர் மனைவியை பரிதாபமாகப் பார்த்துவிட்டு வீட்டின் உள்ளே சென்று விட்டார். மாங்காய் கொடுத்த பணத்தில் ஆசை பட்டியலைத் தன் மண்டையில் ஓட விட்டிருந்தாள் மனைவி. வரும் பணத்தில், தன் பேரப் பிள்ளைகளுக்குத் துணி வாங்கவே பட்டியல் அமைந்தது.
மாம்பழங்கள் அறுக்க ஆரம்பித்ததும், மருதமுத்துவும் மரத்தின் அடியே நின்று அவர்களுடன் பழங்களைப் பொறுக்கி கூடையில் சேகரித்தார். நன்கு பழுத்த பழங்களை ஒரு கூடையில் தனக்கு எடுத்து கொண்டார். ஒன்பது கூடையும், இன்னும் சில பிஞ்சு காய்கள் அரை கூடையிலும் தன் வண்டியில் எடுத்து வைத்து விட்டு அந்த வியாபாரி ₹3000 ஆக கொடுத்தார். " பரவாயில்ல ணே, வச்சுகுங்க " என்று கூறி விடைபெற்றார். பணத்தை தன் இடுப்பில் பத்திரப் படுத்தி விட்டு தனக்கான மாம்பழ கூடையைச் சுமந்து கொண்டார். நன்றி உணர்வுடன் தன் மரத்தை ஒரு முறை பார்த்து விட்டு, நல்ல உரம் வாங்கி போடனும் என நினைத்து கொண்டே வீடு வந்தார். அந்தியில் தன் மகளும் மருமகனும் பிள்ளைகளுடன் வருவார்கள் என சமைத்த குழம்பும் , பொரித்த அப்பளமும் காத்திருந்தன. "தாத்தா " என பேரப்பிள்ளைகளின் அன்பு அழைப்பு வீட்டைத் தட்டிட, வாங்கடி செல்லங்களா என அவர்களை அனைத்தார் மாரிமுத்து. தன் மருமகன், மாம்பழக் கூடை ஒன்றை இறக்கினார். " ரொம்ப நாள் தேடி, இனிக்குதான் அதே மாங்கா கடச்சது. ஒரு கூடை ₹3000 மா!. அதுவும் ரொம்ப குறைக்க முடியல, கடைசி கூடை. உடனே வாங்கிடேன்" என்று தன் சாதனைக்கு மாமனாரின் பாராட்டை அவரின் முகத்தில் மருமகன் தேடிட, தான் பொருக்கியா சில மாங்காய்கள் தன் மருமகன் வாங்கிய கூடையில் இருந்து மருதமுத்துவைப் பார்த்தன.
தனக்கு லாபமா நஷ்டமா என குழம்பியவாரே, வாங்க சாப்பிடலாம் என அவர்களை அழைத்துவிட்டு கையை கழுவினார்.
மாலை வெயிலில் , தங்க நிறத்துடன் மாமர இலைகள் ஆங்காங்கே ஆடிக்கொண்டு சூரியனுக்கு இரவு வணக்கம் தெரிவிக்க, சிறு கூட்டங்களில் பறவைகள் வீடு திறும்பின.