காலை நிலா
காலை உணவுகளைத் தயார் செய்து சாலையோரம் மகளுடன் கடையைத் திறந்தாள் ஜனனி. விடியல் காலை முழுவதும் உணவைத் தயாரித்து விட்டு, ஓய்வின்றி அதை விற்க ஜனனிக்கு ஒரே துணை அவளின் மகள்.
பலகார வகைகள், அப்பம், இட்லி, தோசை, பூரி என பல வகைகள். காலையில் 7 மணிக்கே வியாபாரம் தொடங்க வேண்டும். சமைத்த உணவை எடுத்து வர வேண்டும். மேசை , குடை நாற்காலிக்கு ஒரு முறையும், உணவுக்கு ஒரு முறையும் வீட்டிற்கு நான்கு முறை ஒவ்வொரு நாளும் வந்து போக வேண்டும். அருகில் உள்ள பல தொழில்சாலைகளின் தொழிலாளர்களுக்கு, ஜனனியின் உணவு ஆறுதல் தரும். மழை மட்டுமே ஒரே எதிரி. பெரும்பாலான உணவுகள் காலை ஒன்பதுக்குள் விற்றுவிடும். காலை உணவில் அதிகமாக வியாபாரம் இருந்தாலும், விலை குறைவால் லாபமும் குறைவுதான். பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும், விலைகளில் அதிகமான மாற்றம் இருப்பதில்லை. விற்காத உணவை மீண்டும் மறுநாள் விற்க முடியாததால் , நேரம் அதிகரிக்க வருபவர்களுக்குக் கேட்டதைவிட அதிகமான உணவையும், விற்காத பலகாரங்களையும் இலவசமாகவே கொடுத்து விடுவாள் ஜனனி.
அவப்போது மழைக்குப் பின் காளான் போல் சிறு சிறு உணவு கடைகள் வந்து காணாமல் போகும். பெரும்பாலான காரணம் உதவிக்கு ஆட்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் போவதே. ஒரே ஆள் தொடர்ந்து எவ்வளவு நாள் தான் செய்வார்கள்?
முடிந்த வரை இரண்டு மாதம் கடந்து விட்டாள். வீட்டு கடன் தான் அதிகரிக்கிறது. மீண்டும் குறைந்த சம்பளத்தில் வேளை செய்ய போகலாமா என பல நேரம் யோசிப்பாள். ஆனால், நானே முதலாளி எனும் ஆசை அவளை ஒவ்வொருநாளும் நகர்த்துகிறது.
எந்த காரணம் கொண்டும் உணவின் அளவையும் விலையையும் மாற்ற மாட்டாள். வருவோரின் பசியைத், தன்னால் போக்க முடிவதில் ஒரு ஆனந்தம் அவளுக்கு. ஒருவகையில் சேவையாகவும் இத்தொழிலை என்னுவாள். சில நேரங்களில், வருவோர், வாகனத்தை விட்டு இறங்காது "drive-in" போல் உணவை வாங்கிச் செல்வர். தன் மகள் தான் ஓடி ஓடி கொடுத்து வருவாள். வருவோரை சிரித்தவாரே அக்கா அண்ணன் என அன்பாக அழைப்பாள். அவளிடன் சில வரிகள் பேசியவாரே தன் குடும்பத்திற்கான உணவை கையில் எடுத்துச் செல்வார்கள் பல அக்காக்கள். அவப்போது புதிய உணவு பட்டியலைச் செய்ய பணிப்பர். ஆர்வமாகக் கேட்டு அதையும் செய்வாள். இதை பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என கூறியவாரே, கடைசியாக எங்க பாட்டி செஞ்சது,அம்மா சமைச்சது என விரைவாக காலியாகும் அவளின் அவப்போது காட்சிதரும் புதிய பாட்டி கால உணவுவகைகள். கேழ்வரகு புட்டு, நெத்திலி மரவள்ளி கிழங்கு பிரட்டல், புளிசோறு என அவப்போது வீழாகால விளம்பர கதாநாயகிகள் போல் வந்து மறையும்.
நான், ஜனனி கிளம்பும் போது செல்வேன். மிச்சம் இருந்தால் , இதுதான் இருக்கு சிவா என எனக்காக பொட்டலம் கட்டுவாள். எடுத்துக்கோ என பொட்டலம் அதிகரிக்கும். "போதுமா சிவா" என தவறாமல் கேட்பாள்.
அவை எனக்கு மதிய உணவாகக் கூட மாறிவிடும். குறைந்த விலையில் விற்றும், சோர்வின்றி இன்முகத்துடன் இருக்கும் இவளைக் கண்டு வியப்பேன். என்றுமே அவளுக்கு நான் கொடுத்த பணம் எனக்கு குறைவாகவே பட்டது. ஒவ்வொரு நாளும், சாலையோரம் பசியோடு வருவோருக்கு உணவோடு காத்திருக்கும் இவள் எனக்கு மட்டும் அரசியாகவே காட்சியளித்தாள்.
சில மாதங்களில் அவளின் கடையும் காணமல் போனது. அடுத்த கடையைத் தேடியது பசியுடன் தொழிலாளர் கூட்டம். புதிய சில கடைகள் வந்து விட்டன. இவை இன்னும் எத்தனை நாளோ என ஏக்கத்துடன் கடையின் உணவுவகைளை நோட்டமிட்டேன். பிடித்ததை வாங்கிக் கொண்டு புத்தம் புதியா அந்நாளின் வானத்தைப் பார்த்தேன். அவப்போது காலையில் வரும் நிலா அன்று எங்கு தேடியும் வரவில்லை.
( சாலையோர உணவகங்களுக்கு என் கதை சமர்ப்பணம். உங்கள் உணவுக்கும் சேவைக்கும் என் நன்றி )
#siven19