கேட்காமல் கிடைத்தால்

மீண்டும் மழை அதிகமானது. காலையிலிருந்து, காதலியை இழந்தவனைப் போல் வானம் அழுதுகொண்டிருக்க.. எழுந்து சோம்பலை முறிதாள் கலைமதி.

தனியாகத்தான் தன் வாடகை வீட்டில் வசிக்கின்றாள். படித்து முடித்ததும் இங்கு ஒரு அலுவலகத்தில் கணக்காய்வாளராக வேலைக் கிட்டியது. போதுமான சம்பளம். விரைவில் புதிய இரு சக்கர ஊர்த்தி ஒன்றை வாங்க பணம் சேர்த்து வருகிறாள்.

நீர் கொதிக்க..குளம்பியுடன் கொக்கோவைக் கலந்தாள்.
மோக்கா, தனது விருப்பமான காலை பாணம். மழைநீரில் மரங்கள் யாவும் குளிர்ந்து செழிப்பாக இருந்தன. மதிய உணவுக்கு என்ன சமைக்கலாம் என யோசித்தவாறு ஜன்னல் வழியே மழையில் குளித்துக் கொண்டிருக்கும் தன் பட்டிணத்தைப் பார்வையிட்டாள்.

அம்மா அழைப்பேசியில் அழைக்க, அதை எடுத்து சொடுக்கினாள்.

" சொல்லுங்க மா" கலைமதி.

" எழுந்துட்டியா? அங்க மழையா? நல்லா சாப்பிடு. இந்த வாரம் வரியா? " என கேள்விகளுடன் அம்மா.

" இல்லமா. சின்ன வேல இருக்கு * என சொல்லிட...

" சரி, அப்பரம் 'call' பன்றேன், உடம்ப பாத்துக்கோ " என அழைப்பைத் துண்டித்தாள் அம்மா.

வீட்டின் அருகில் இருக்கும் பேரங்காடி ஒன்றுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள் கலைமதி. சமைப்பது விருப்பம். புதியதாக தன் விருப்பம் போல் சமைத்து உண்பாள். நன்றாக வந்துவிட்டாள் அண்டை வீட்டில் இருக்கும் ஈஸ்வரி அக்காவிடம் பகிர்வாள். இன்று வாழை இலையில் மடித்து மீன் பொரித்து பார்க்கலாம் என சின்னதாய் ஒரு 'idea'. வாழை இலைக்கு எங்கு போவது என நடந்து கொண்டே வீடுகளை நோட்டமிட்டாள்.

மீன்களையும் மற்ற பொருள்களையும் வாங்கிய கலைமதி மீண்டும் வாழை இலையைத் தேடும் வேட்டையில் இறங்கினாள். சில வீடுகளில் வாழைமரங்கள் இருந்தும், வீட்டில் யாரும் இல்லை. தன் வீடும் நெருங்கிவிட என்ன செய்வது என வீட்டை அடைந்தாள். பொருள்களை வீட்டில் வைத்து வீட்டு, மீண்டும் வேறு பக்கம் சென்று தேடலாம் என நடக்க ஆரம்பித்தாள்.

மழை பெய்ததால் வீட்டின் வெளியே யாரும் அதிகம் இருப்பதில்லை. குளிர்ந்த காற்று. அவப்போது காகம் கரைந்து கொண்டு அங்கும் இங்குமாய் பறந்துகொண்டிருந்தது. மீண்டும் மேகங்கள் ஒன்று கூடி, அடுத்த குளியலுக்குத் தயாராகக் காட்சியளிக்க, இனியும் அதிக தூரம் நடக்கமுடியாது என்று கருதி, வாழைமரங்கள் இருக்கும் ஒரு வீட்டை அடைந்தாள். உயரமான மரங்கள்.
"அக்கா.. அண்ணே...!! " என தன்னால் முயன்ற வரைச் சத்தமாக அழைத்தாள். வீட்டின் உள்ளே மின்விள்க்கும் மின்விசிரியும் இயங்கிகொண்டிருப்பதால், வீட்டில் கண்டிப்பாக யாராவது இருப்பார்கள் என நம்பி மீண்டும் அழைத்தாள். கதவும் திறக்க, ஒரு இளைஞன்.

" வாழ யில கடைக்குமா?" என கேட்டாள்.
சற்று யோசித்தவாறு எத்தனை என கையில் செய்கையோடு கேட்டான்.
" ஒன்னு போதும். பழுத்துருந்தாலும் பரவால " என சொன்னாள்.
வீட்டின் உள்ளே சென்றவன், கத்தியோடு வந்தான். நல்ல பச்சையான இரண்டு பெரிய இலையாகளாக வெட்டி வந்து கொடுத்தான்.
அவனை நன்றியோடு பார்த்தவள்
" Thanks " என்றால். சரி என கூறுவது போல் தலையாட்டிவிட்டு வீட்டின் உள்ளே சென்றான். மகிழ்ச்சியான முகத்தோடு வீடு திரும்பினாள்.
சிறு வயதில், கறிவேப்பிலைக்கும் , மா இலைக்கும் ஊரைச் சுற்றி எடுத்துவரும் சம்பவங்கள் நினைவுக்கு வந்ததன. சண்டைக்குச் செல்வது போல் அம்மா கத்தி ஒன்றை கொடுத்து அனுப்புவாள். வாழ இலைக்கு மட்டும் பலர் இவர்கள் வீட்டிற்கு வருவார்கள். இப்போது, வாழை இலைக்கு நாம் மற்றவர்களிடம் கேட்பது தனக்கு வேடிக்கையாகவும், வாழ்க்கையின் சுழற்சியும் புரிய வைத்தது. எப்படியாவது, கொஞ்சம் நிலத்துடன் வீடு வாங்க வேண்டும் என்பது கலைமதியின் ஆசை. எந்த காரணத்திலும் அடுக்குமாடி வீட்டில் இருக்கக் கூடாது என்பது சிறுவயது சபதம்.

வீடும் வந்தது.

" என்னமா சமையல்? வாழ இலையெல்லாம் பெருசா இருக்கு ?" என தன் தங்கி இருக்கும் அடுக்குமாடி வீட்டின் காவலாளி தாத்தா கேட்டார்.

" உங்களுக்கும் எடுத்து வரேன் தாத்தா" என அன்போடு சொன்னாள் கலைமதி.

மீண்டும் வானம் அழத் தொடங்கிட.. துவைத்த துணிகள் எப்போது காயும் என யோசித்தவாறே, வாழை இலையில் மடித்த பொரித்த மீன் ஒன்று அடுக்குமாடி காவல் அறைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

கேட்டதும் கிடைப்பது ஆனந்தம். கேட்பதற்கு மேல் கிடைத்தால்... பேரானந்தம்.
கேட்காமல் கிடைத்தால்...?

#siven19
கேட்காமல் கிடைத்தால் ?

எழுதியவர் : Siven19 (18-Aug-21, 5:38 pm)
சேர்த்தது : siven19
பார்வை : 143

மேலே