பேகன்தான் மெய்ப்புகழால் மண்மூடி வான்மூடி நின்றான் வளர்ந்து - உரம், தருமதீபிகை 875

நேரிசை வெண்பா

ஆடு மயிலுக்(கு) அருள்கூர்ந்து பேகன்தான்
மூடி யிருந்ததனை முன்பேர்த்து - நாடியதன்
மேன்மூடி மீண்டான்பின் மெய்ப்புகழால் மண்மூடி
வான்மூடி நின்றான் வளர்ந்து! 875

- உரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

காட்டில் ஆடிய ஒரு மயிலைக் கண்டு கருணை கூர்ந்து தனது அரிய சால்வையைப் பேகன் உரிமையோடு அதன்மேல் போர்த்திப் போயினான்; அதனால் வையகமும் வானகமும் அவனது கீர்த்தி வளர்ந்து விரிந்து பரந்து ஓங்கி யுள்ளது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனிதனுடைய மாண்பு மனத்தின் மாட்சியால் காட்சிக்கு வருகிறது. இனிய நீர்மைகள் உள்ளே சுரந்த பொழுது அரிய சீர்மைகள் வெளியே விரிந்து பரவுகின்றன. உயிர்களுக்கு இரங்கி உதவ நேர்ந்த அளவு அந்த மனிதன் தனிநிலையில் உயர்ந்து அதிசயமான துதி மொழிகளோடு விளங்குகின்றான்.

ஈகையாளருள் பாரியும் பேகனும் ஓரினமாய் உலாவி வருகின்றனர். தம்பால் வந்து இரந்தவருக்கு ஈந்ததோடு நில்லாமல் யாதும் கேளாமல் அயலே ஒதுங்கி நின்ற முல்லைக் கொடிக்கும் மயிலுக்கும் தேரும் போர்வையும் முறையே இவர் விரும்பித் தந்துள்ளனர். கருணை கனிந்துவந்த அந்த ஈகை ஒளிமிகுந்து நின்றது.

குளிர் காலத்தில் கானகத்தே ஒரு கலாப மயிலைப் பேகன் கண்டான்; இவனைக் கண்டதும் அது இயல்பாய்க் கூவியது. அதன் அழகிய நிறத்தையும் சாயலையும் தோகையையும் கண்டு மகிழ்ந்த இவன் அது குளிரால் தளரலாகாதே என்று இரங்கினான்: உடனே தான் போர்த்தியிருந்த உயர்ந்த இரத்தினக். கம்பளியை விரைந்து எடுத்து அதன் மேல் போர்த்தினான், விலை உயர்ந்த சால்வையோடு அது ஒய்யாரமாய் நடந்து போவதைப் பார்த்து மகிழ்ந்தான். அதிசயமான இந்தக் கொடைநிலையை அயலே நின்று பார்த்து வந்தவர் ஊராரிடம் பேரார்வத்தோடு உரைத்தார். அது பின்பு உலகம் எங்கும் பரவ நேர்ந்தது. புலவர் பலரும் இவனுடைய வள்ளன்மையை உள்ளம் உவந்து பாடினர்.

வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்,
பெருங்கல் நாடன், பேகன்! - சிறுபாணாற்றுப்படை

என இன்னவாறு நூலோரும் மேலோரும் இவன் மயிலுக்கு உதவியருளிய நீர்மையை வியந்து புகழ்ந்திருக்கின்றனர்.

கொடுத்தால் புண்ணியம் வரும் என்று கருதியோ, மறுமையில் தேவ போகங்களை அனுபவிக்கலாம் என்று எண்ணியோ இவன் கொடுக்கவில்லை. ஏழைகளுக்கு இரங்கியே தண்ணளியோடு எவ்வழியும் செவ்வையாய்க் கொடுத்திருக்கிறான். அந்த வண்மையின் உண்மையை நுண்மையாயறிந்து உயர்ந்தோர் யாவரும் இவனை உவந்து பாராட்டி உரிமை காட்டியுள்ளனர்.

எத்துணை யாயினு மீத்த னன்றென
மறுமை நோக்கின்றோ வன்றே
பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண்மையே! 141 புறநானூறு

பேகன் செய்து வந்த ஈகையின் இயல்பைப் பாணர் இங்ஙனம் நயமாய்க் குறித்திருக்கிறார், தனக்கு ஒரு மறுமை இன்பத்தை நோக்காமல் பிறருடைய வறுமைத் துன்பத்தை நீக்கவே கொடுத்திருக்கிறான் என்ற இதனால் இவனது உள்ளப் பண்பும் உயிர்களிடம் அன்பும் உபகார நிலைமையும் தெளிவாயுணர வந்தன. அதிசய ஈகை உலகம் துதி செய்ய ஓங்கியது.

வறுமையால் வாடித் தன்பால் வந்தவர்க்கு வழங்கியதை விடக் காட்டு மயிலுக்கு இவன் நீட்டி உதவியது நெடிய வியப்பை விளைத்து நின்றது. அதனால் ’கொடைமட முடையான்’ என ஒரு விருதுப் பெயரும் இவனை அடைந்தது. தரம் பாராமல் தந்து வந்தமையால் வரம்பறு வள்ளலாய் இவன் உரம் பெற்று நின்றான். பறவை இடமும் பரிவு ஓடியது

நேரிசை வெண்பா

கான மயிலுக்குக் காணரிய சால்வையை
வானம் மகிழ வழங்கினான் - தானம்
தருவார் தரம்பார்ப்பர் தண்ணளி யாளர்
தருவார் எவர்க்கும் தணிந்து! - கவிராஜ பண்டிதர்

பேகன் இங்ஙனம் தந்து வந்தமையால் ஈகையாளருள் இசை மிகப் பெற்றான். ஈதலால் புகழ் வருகிறது; புண்ணியம் விளைகிறது. அரிய புகழையும் பெரிய புண்ணியங்களையும் கொடையாளன் எளிதே அடைந்து கொள்கிறான். தன் உடல் மேல் மூடியிருந்த சால்வையை மயில் மேல் மூடி மீண்டான்; மீளவே புகழ் நீளமாய் நீண்டு வானையும் மண்ணையும் மூடி நின்றது. அந்தநிலை இவன் அடைந்துள்ள கீர்த்தியின் எல்லை தெரிய வந்தது. கொடையால் விளையும் புகழ் உலகில் ஒளி வீசுகிறது.

பிற உயிர்கள் உவகையுற உதவி புரிகிறவன் தன்னுயிர் இன்புற உயர்ந்து வருகிறான். அங்ஙனம் உதவாதவன் இழிந்து போகிறான். உண்மையான உயர்வு இழிவுகளை ஓர்ந்து உணராமையால் நல்ல மனிதன் பொல்லாத உலோபியாய்த் தாழ்ந்து நிற்கிறான். அரிய புகழை இழந்தவன் பெரிய பழியை அடைகிறான்.

To get by giving, and to lose by keeping, Is to be sad in mirth, and glad in weeping! - Christopher

கொடுப்பதால் உயர்வு பெறுகிறான்; கொடாமையால் அதனை இழந்து விடுகிறான்; இன்பம் பெறுவதில் வருத்தமும், துன்பம் அடைவதில் மகிழ்ச்சியும் மருவியிருப்பது வியப்பாம் என இது உணர்த்தியுள்ளது. அறிவு தெளியாமையால் வாழ்வு இழிகிறது

பொருள் குறைந்து போகுமே என்ற அச்சத்தாலும் கொடுத்துப் பழகாமையாலும் பலர் ஒன்றுக்கும் உதவாதவராய்ப் பொன்றி முடிகின்றார். உதவி நலனை ஓர்ந்து உணர்ந்தவர் யாவருக்கும் யாண்டும் இதமாய் ஈந்து இன்பம் பெறுகின்றார்.

உயிர்களின் துயர்களைக் தீர்ப்பதால் உபகாரியிடம் அதிசய மகிமைகள் தாமாகவே வந்து சேருகின்றன. அழிந்து படுகிற சில பொருள்களை நாட்டில் எளியவர்களுக்குக் கொடுத்தான்; கிழிந்து போகிற ஒரு போர்வையைக் காட்டில் ஒரு மயிலுக்குப் போர்த்தினான். அதனால் பேகன் உயர்ந்த கீர்த்திமானாய் ஒளி பெற்று யாரும் யாண்டும் நினைந்து மகிழ நின்றுள்ளான்.

இயன்றவரை எவர்க்கும் உதவி செய்; அது உன் உயிர்க்கு உயர்ந்த இன்பமாம். உண்மை தெளிந்து நன்மை பெறுக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Aug-21, 9:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே