தொடர்கிறது முடிவை நோக்கி

பாலைவனம் என்று அறிந்தும்
சோலையென நினைத்துப்
பாதங்களை பதிக்கிறேன் !
வீசும் வெப்பக் காற்றை
தென்றவாக கருதி அதில்
சுகம் காண்கிறேன் !

நலிவுற்ற உள்ளத்தால்
பொலிவிழந்த உடலுடன்
ஊர்ந்து செல்கிறேன் !
பழுதானது எனது நெஞ்சம்
சேதமடைந்த சாலை போல !

விழியிருந்தும் பார்வை தெரியாமல்
வழியறியா பாதையில் பயணம்
தொடர்கிறது முடிவை நோக்கி !

இடையில் வரும் இன்னல்கள்
இயற்கையின் செயல் எனினும்
வெளிப்படும் செயற்கை புன்னகை
உரைத்திடும் உண்மை நிலையை !

பலரின் நிலை இதுதான் இன்று
விதிவிலக்கா நான் மட்டும் ?
விதியின் சதியென புலம்பிடும்
மதியில்லா பிண்டமல்ல நான் !

பகுத்து அறிந்து வகுத்து வாழும்
சமுதாய சந்தையில் விலைபோகா
செந்தமிழர் படையில் ஒருவன் !


பழனி குமார்
31.08.2021

எழுதியவர் : பழனி குமார் (1-Sep-21, 2:36 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 283

மேலே