உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் – நல்வழி 12
நேரிசை வெண்பா
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்(கு) ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு. 12 நல்வழி
பொருளுரை:
ஆற்றின் கரையிலுள்ள மரமும், அரசன் அறியப் பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும் அழிந்து விடும் அல்லவா; ஆதலினால், உழுது பயிர்செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும்; அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்; வேறு வகையான தொழில் வாழ்க்கைக்கு எல்லாம் சிரமம் உண்டு.
விளக்கம்:
ஆற்றங்கரையில் உள்ள மரம், அரச வாழ்க்கை போகம் ஆகியவை நிலையில்லாமல் அழிந்து விடும்.
உழுதுண்டு வாழும் வாழ்வை விட மேலான வாழ்க்கை வேறு ஒன்று இங்கு இல்லை, மற்ற வேலை அனைத்தும் உழவை விட குறைவானவை தான்.
கருத்து:
உழுது பயிர்செய்து வாழும் வாழ்க்கையே சுதந்தர முடையதும், குற்றமற்றதும், அழிவில்லாததும் ஆகிய வாழ்க்கையாகும்.