ஊரெல்லாம் நோவ துடைத்து மூன்று – திரிகடுகம் 11

நேரிசை வெண்பா

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்
களியாதான் காவா துரையுந் - தெளியாதான்
கூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும்
ஊரெல்லாம் நோவ துடைத்து. 11 – திரிகடுகம்

பொருளுரை:

தன்னை அழையாதவன் கூத்தாட்டத்தைத் தான் சென்று பார்ப்பதும், தளர்ந்து விழும்படி மதுவுண்டு களியாதவனாயிருந்தும் நாவடக்கமின்றி வழுப்படச் சொல்லுதலும், தன்னை நம்பாதவன் வீட்டிற்குள் பலமுறை செல்லுதலும் ஆகிய இம்மூன்று செயல்களும் ஊரிலுள்ளோரெல்லாரும் துன்பப்படுங் குற்றத்தை உடையன.

கருத்துரை:

அழைக்கப்பெறாத ஆட்டத்தைக் காணப்போவதும், களியன்போல் காவாது உரைத்தலும், தன்னை நம்பாதவன் வீட்டிற் செல்லுதலும் வருந்தத்தக்க குற்றங்களாம்.

கூத்து – நாடகம், ஆட்டு – ஆடுதல்

"கூத்தாட் டவைக்குழாத் தற்றே" என்ற திருக்குறள் 332 இலும் கூத்தாட்டு, கூத்தாடுதல் என்னும் பொருளில் வந்துள்ளது. கூத்தாகிய ஆடல்,

களி - கள்ளுண்ணுதலால் ஏற்படும் வெறி; இதையுடையவன் களியெனப் படுவான்.

நோவது - நோவதற்கு ஏதுவானது;

விளியாதான். கூத்தாட்டுக் காண்டல் என்பதற்கு இனிமையாகப் பாடாதவன் கூத்தாட்டத்தைச் செய்தலும் என்றும் கூறலாம்.

விளித்தல் - ஒலித்தல், காண்டல் - செய்தல்; கூரை - வீட்டையுணர்த்திற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Sep-21, 4:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே