தத்தம் இயல்பின் அளவே எவர்க்கும் உலகில் உயர்வும் இழிவும் உணர் - தரம், தருமதீபிகை 870

நேரிசை வெண்பா

ஒத்த பிறப்பில் உதித்தும் பலரிழிந்து
செத்த சவமாய்த் திரிகின்றார் - தத்தம்
இயல்பின் அளவே எவர்க்கும் உலகில்
உயர்வும் இழிவும் உணர்! 870

- தரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனித மரபில் ஒரு நிகராய் உருவம் பிறந்திருந்தும் ஒத்த உரிமைகளை உணராமல் பலர் செத்த சவங்களாகவே திரிகின்றார்; அவரவருடைய செயல் இயல்களின் அளவே உயர்வும் தாழ்வும் உளவாம்; அந்த உண்மையை உணர்ந்து நன்மையை அடைக என்கிறார் கவிராஜ பண்டிதர். சிறப்பான தோற்றம் பிறப்பு என வந்தது.

உடல் உறுப்புக்களாலும், நடை உடை பாவனைகளாலும், பேச்சு வழக்காலும் மனிதர் ஒரு நிகராய்த் தோன்றினாலும் குண வகைகளால் மாறுபாடு மண்டி வேறுபட்டு விரிந்து பிரிந்து திரிந்து வருகின்றனர். உள்ளப்பண்பும் உணர்வு நலனும் உரிமையாய்ப் பெருகி வருமளவே மனிதன் பெருமையாய் மருவி வருகிறான்; அவ்வாறு வராவழி எவ்வாற்றானும் அவன் இழிந்தே போகிறான். இழிவுறாமல் எழுபவன் விழுமியனாகிறான்.

உயர்ந்த வாழ்வை அடைந்து சிறந்த சுக போகங்களை நுகர்ந்து மேன்மையாய் வாழ வேண்டும் என்றே மாந்தர் யாவரும் விரும்புகின்றனர். தாம் விரும்பிய நலங்களை விரும்பியபடியே அடையவுரிய கருமங்களைக் கருதிச் செய்யின் அவை தாமாகவே அவரிடம் வந்தடைகின்றன. உரிய வினைகளை உரிமையோடு ஊன்றிச் செய்யாதவர் ஒரு பலனையும் அடையாமல் ஊனமாயுழல்கின்றனர். இழிவு ஈனங்கள் எல்லாம் மடி, மடமைகளால் மருவி வருகின்றன. அகத்தே மூடம் ஏறப் புறத்தே பீடைகள் ஏறிப் பிழைபாடுகள் மீறுகின்றன.

மனித வாழ்வு பொருளால் இனிது நடந்து வருகிறது. அந்தப் பொருள் முயற்சியால் விளைகிறது. செல்வங்களை ஆக்கியருளுகிற முயற்சியையுடையவன் எவ்வழியும் உயர்ச்சிகளை அடைகிறான். அதனை இழந்து மடிந்திருப்பவன் வறியனாயிழிந்து கழிகிறான். வறுமை புகுந்தால் பெருமைகள் எல்லாம் ஒருங்கே ஒழிந்து போம்; சிறுமைகள் செறிந்து சீரழித்து விடும்.

இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்! 1042 நல்குரவு

வறுமையால் இருமையும் பாழாம் எனத் தேவர் இவ்வாறு மறுகி யுரைத்துள்ளார். சீவர்களைச் சித்திரவதை செய்யும்; அதன் தீமையை நினைந்து பாவி என்று அதனைக் கோபமாய் வைதது. இன்ப நுகர்வின்றித் துன்பமே தோய்ந்து வருதலால் இல்லாமை கொடிய பொல்லாமையாய் எவரும் அஞ்ச நேர்ந்தது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பொருளிலார்க்(கு) இன்பம் இல்லை; புண்ணியம் இல்லை; என்றும்
மருவிய கீர்த்தி இல்லை, மைந்தரில் பெருமை இல்லை;
கருதிய கருமம் இல்லை; கதிபெற வழியும் இல்லை;
பெருநிலம் தனில்சஞ் சாரப் பிரேதமாய்த் திரிகு வாரே! – விவேக சிந்தாமணி

பொருளில்லாத போது விளைகின்ற அல்லல்களையும் அவமானங்களையும் இதனால் அறிந்து கொள்ளுகிறோம். சஞ்சாரப் பிரேதம் என்றது. நடைப்பிணம் என்றவாறு, உயிரோடு செத்த சவம் என்றதனால் இன்மையின் ஈன இழிவு உய்த்துணர வந்தது.

மிடி புகுந்தபோது கொடிய துயரங்கள் எல்லாம் அங்கே கூடவே குடிபுகுகின்றன. யாசகம் முதலிய இழிநீசங்கள் பலவும் அதனால் நேர்கின்றன. இரப்பு இறப்பினும் இழி துயருடையது. மானத்தை மாய்த்து ஈனத்தை விளைத்து இடர்களைப் பெருக்கி வருகிற வறுமையைப் போல் மனிதனைச் சிறுமைப் படுத்திச் சிதைத்தழிப்பது வேறு யாதும் இல்லை.

Poverty is a great enemy to human happiness. - Johnson

மனிதனது இனிய வாழ்வுக்கு வறுமை கொடிய விரோதி என ஜான்சன் இவ்வாறு கூறியுள்ளார். வறுமைவரின் மன அமைதி குலைந்து போம்; கொடிய கவலைகள் நெடிதோங்கி வருமாதலால் அது துயரங்களுக்கெல்லாம் உறையுளாயது.

எவ்வழியும் இன்பமாய் வாழ விரும்புகிற மனிதன் துன்பமே மயமான மிடி தன் குடியை யாதும் அணுகாதபடி பாதுகாத்து முயன்று உயர்ந்து கொள்ள வேண்டும். கருதி முயல்பவன் உறுதி நலங்களை உரிமையாயடைந்து கொள்ளுகிறான்.

பொருளை ஈட்டிச் சுகமாய் வாழ்வதால் மட்டும் ஒருவன் பெரியவன் ஆக முடியாது. கரும சீலங்களைத் தழுவி ஒழுகிவரும் அளவே மனிதன் புனிதனாய் விழுமிய மேன்மைகளை அடைந்து வருகிறான். எண்ணரிய இன்பங்களைப் புண்ணியம் அருளுகிறது.

’மானிடம் பெறுதல் வானிடம் பெறுதலாம்’ என இன்னவாறு புகழ்ந்து போற்றப் பெற்ற உயர்ந்த மனிதப் பிறவியை அடைந்திருந்தும் இழிந்த மிருகங்களினும் கடையராய்ப் பலர் கழிந்து ஒழிந்து போகின்றனர். தாம் ஈனமாய்த் தாழ்ந்து கழிவதை உணராமல் மானமாய் வாழ்ந்து வருவதாக மனம் களித்துத் திரிவது ஞான சூனியமாய் விரிந்து வருகிறது. மடமைக் களிப்பு மனிதனைக் கடையனாக்கி யாண்டும் அவலப்படுத்தி எவ்வழியும் செழித்து நிற்கிறது. இழிகளி ஒழிவது தெளிவான ஒளியாம்.

பொய் பேசுவது புலை என்று யாரும் உணரவில்லை. நீசப் பொய்யை வாயில் வைத்து நாளும் நாசமடைந்து மடிகின்றார். பழி இழிவுகளை விழி திறந்து பாராமல் தழுவி வருவது அழி துயரங்களாய்ப் பெருகி வருகிறது. நல்ல நீர்மைகளை இழந்த அளவு தரம் கெட்ட மனிதராய்த் தாழ்ந்து தொலைகின்றார்.

இயல்பு என்னும் பண்புச்சொல் குணம் தகுதி சீலங்களை உணர்த்தி வரும். அவற்றை உரிமையாக வுடையவர் உயர்ந்த மனிதராய்ச் சிறந்து திகழ்கின்றார்; இழந்தவர் இழிந்தவராய்க் கழிந்து போகின்றார், தன்மை தழுவி ஒழுகி நன்மையுறுக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Sep-21, 9:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே