வள்ளல்கள் பேரோடு பண்பமைந்து எஞ்ஞான்றும் சீரோடு நிற்பர் சிறந்து - உரம், தருமதீபிகை 880
நேரிசை வெண்பா
உள்ளம் இனிக்க உரைஇனிக்க ஓதிய,நா
தெள்ளமுதம் என்னத் தினமினிக்க - வள்ளல்கள்
பாரோடு பேரோடு பண்பமைந்(து) எஞ்ஞான்றும்
சீரோடு நிற்பர் சிறந்து! 880
- உரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
எல்லாருடைய உள்ளங்களும் உரைகளும் எவ்வழியும் விழைந்து மகிழ்ந்து புகழ்ந்து வர வள்ளல்கள் வாழ்ந்து வந்து இவ்வுலகத்தில் என்றும் நிலையான கீர்த்திகளோடு நிலவி நிற்கின்றனர்; அவரது தலைமை தனிமகிமை யுடையது என்கிறார் கவிராஜ பண்டிதர்.
சுயநலம் கருதலும், தன்பெருமை கூறலும் சீவ சுபாவங்களாய் மேவி வந்துள்ளன. தன்னை வீணே உயர்வாய் எண்ண நேர்ந்த போது பிறரை மதியாமல் மனிதன் பிழையாய் இழிவுறுகின்றான். செருக்கு இறுமாப்பு என்னும் மொழிகள் மனிதனுடைய மயலான செயல்களை நோக்கி வெளி வந்திருக்கின்றன. பெரும்பாலும் இவ்வாறு மனத்திமிர் மண்டியுள்ள மனித சமுதாயத்தில் ஒருவன் தனியே இனிய புகழைப் பெறுவது மிகவும் அரிதாம்; இந்த அரிய புகழை உபகாரி எளிதே பெற்றுக் கொள்ளுகிறான். செய்யும் உதவிகள் தெய்வீக நிலைகளை அருளுகின்றன.
உள்ளத்தில் மாறுபாடு மருவியுள்ளவர்களும் வள்ளல்களை உரிமையோடு உவந்து புகழ்ந்து பெருமையாய்ப் பேசுகின்றனர். உயிர்களுக்கு இதமாய் உபகாரம் புரிவதால் கொடையாளிகளை யாவரும் மரியாதையோடு மகிழ்ந்து போற்றுகின்றனர். பாவலரும் ஆவலாக அவரைப் புகழ்ந்து பாடுகின்றனர்.
வெண்டளை பயிலும் எழுசீர் ஆசிரிய விருத்தம்
வாசம் கலந்த மரைநாள நூலின்
..வகைஎன்ப தென்னை? மழையென்(று)
ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல்
..சரராமன் வெண்ணெய் அணுகும்,
தேசம் கலந்த மறைவாணர், செஞ்சொல்
..அறிவாளர், என்றிம் முதலோர்
பாசம் கலந்த பசிபோல், அகன்ற
..பதகன் துரந்த உரகம்.263 நாகபாசப் படலம், யுத்த காண்டம், இராமாயணம்
வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலை அணுகினவருடைய பசித்துயரம் நீங்கியது போல் இலக்குவனைப் பிணித்திருந்த நாகபாசம் கருடனைக் கண்டதும் அடியோடு நீங்கிப் போயது என இது அவரது கொடையின் பாங்கோடு குறித்திருக்கிறது.
நேரிசை வெண்பா
வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்
தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி - கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி! 48
- கலிநீங்கு படலம், நளவெண்பா
சந்திரன் சுவர்க்கியைக் கண்ட பாவலர் பசி நீங்கியதுபோல் நளனைப் பிடித்திருந்த கலி நீங்கியது என இது காட்டியுள்ளது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
நாகையாப் புகழான் பெண்ணை
..நதிவளஞ் சுரக்கு நாடன்
வாகையாற் பொலிதிண் டோளான்
..மாகதக் கொங்கர் கோமான்
பாகையாட் கொண்டான் செங்கைப்
..பரிசுபெற் றவர்நெஞ் சென்ன
வோகையாற் செருக்கி மீண்டா
..ருதிட்டிரன் சேனை யுள்ளார்! 90
- பதினாறாம் போர்ச் சருக்கம், பாரதம்
வரபதியாட் கொண்டான் என்னும் வள்ளலிடமிருந்து பரிசு பெற்றவர்கள் உள்ளம் உவந்து மீண்டது போல் தருமன் சேனையில் உள்ளவர்கள் வெற்றிக் களிப்போடு மீண்டனர் என இது உரைத்துள்ளது. கம்பர், புகழேந்தி, வில்லியாழ்வார் இங்கே உள்ளமுவந்து வள்ளல்களைப் பாராட்டியிருக்கின்றனர். இவ்வாறு பாவலர் வாயால் பாடப் பெற்றமையால் கொடையாளிகள் பூவலயம் எங்கும் புகழ் ஓங்கிப் பொலிந்து நிற்கின்றனர்.
தம்மிடம் வந்து சிறிய உதவிகளைப் பெற்றுக் கொண்டு தமக்குப் பெரிய புகழைக் கொடுத்தலால் பாவலர்களை வள்ளல்கள் உள்ளம் உவந்து உயர்ந்த மரியாதைகளை விழைந்து செய்து உரிமையோடு தழுவிப் போற்றிக் கொள்ளுகின்றனர்.
நேரிசை வெண்பா
வள்ளியோர் எவ்வளவு வாய்ப்புற்(று) இருந்தாலும்
கொள்ளுவோர் இன்றெனில்சீர் கூடாதே - பிள்ளைதான்
உண்டோ மனைவி உறாவிடத்தே பேராண்மை
கொண்டவனே ஆனாலும் கூறு
வலிய ஆண்மையாளனே ஆயினும் உரிய மனைவி இல்லையெனின் அரிய மகன் அவனுக்கு இல்லையாம், வண்மையாளன் எவ்வளவு வளம் பெற்றிருந்தாலும் வாங்குவார் இல்லையானால் அவனுக்கு யாதொரு புகழும் உண்டாகாது என இது உணர்த்தியுள்ளது. ஒப்பிடலின் நுட்பங்களை உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும். எளிய வழியில் இறைஒளி தழுவி வருகிறது. –
தம்பால் ஏதேனும் வாங்க வருபவர் தமக்குப் பெரும் பொருள் தர வருபவராகச் செல்வர் கருத வேண்டும். ஏனெனின், அவராலேயே அவர்க்குப் புகழும் புண்ணியங்களும் உளவாகின்றன. இந்த மருமத்தை உணர்ந்தவர் மனமுவந்து கொடுத்து யாண்டும் தருமத்தை அடைந்து கொள்ளுகின்றனர்.
சிறந்த வள்ளலான காரி சீரிய பண்போடு யார்க்கும் உவந்து உதவி வந்தான். ஒருநாள் அவனிடம் ஒரு கவிஞர் வந்தார். நல்ல கல்விமானான அவர் வறுமையால் அல்லலுழந்து வந்துள்ளாரே என்று வருந்தினான். இனிமேல் யாரிடமும் செல்லாமல் அவர் நல்ல நிலையில் வாழவேண்டும் என்று கருதினான். உடனே இரண்டு குதிரைகள் பூட்டிய தேரைக் கொண்டு வரும்படி செய்தான்; புலவரை அதில் ஏற்றிப் பொருளை வாரிக் கொடுத்துப் போற்றி அனுப்பினான். அந்த அதிசய நிலையை ஊரும், நாடும் அறிந்து அவனது சீரிய வண்மையை வியந்து புகழ்ந்தது.
வாலுளைப் புரவியொடு வையகம், மருள,
ஈர நல்மொழி, இரவலர்க்(கு) ஈந்த,
அழல்திகழ்ந்(து) இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்,
கழல் தொடித் தடக்கை, காரி - சிறுபாணாற்றுப்படை
காரி வள்ளல் ஈர நன்மொழி கூறி இரவலர்க்கு ஈந்து வந்த இயல்பையும், உலகம் வியந்து மகிழப் புலவர்க்குப் புரவியும் தேரும் புகழ்ந்து உதவியுள்ள நிலையையும் இங்கே உணர்ந்து நிற்கிறோம். இனிய நீர்மைகள் தனி மகிமைகளை அருளுகின்றன;
நல்ல கொடையாளிகளைக் கருதுந்தோறும் எவரும் உவகையுறுகின்றனர்; உவந்து புகழ்கின்றனர்; அவரது பேரை யாண்டும் விழைந்து கேட்கின்றனர். உபகாரிகள் இனிய நீர்மையராதலால் அவருடைய புகழ் எவர்க்கும் இன்பம் தருகின்றது. நன்மையை நாடிச் செய்பவனை இம்மையும் மறுமையும் இனிமையாய் நாடி உரிமையோடு வருகின்றன.
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
பிறவுயிர் இன்புறப் பேணி வாழ்பவன்
அறவுயிர் அன்புயிர் அரிய நிதியின்
நிறவுயிர் நிருமலன் நேரில் நேர்கிற
உறவுயிர் உறுதியை உணர்க ஊன்றியே
இந்த உயிரின் கவியின் சுவையை ஓர்ந்து சிந்தனை செய்க என்கிறார் கவிராஜ பண்டிதர்