14 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 14
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

மனிதன் ஒரு பொருளை வெறுத்தபின்பு மீண்டும் அந்தப் பொருளை நாடுவது விரும்புவது அவனது அமைதியை அழிப்பதற்குச் சமம். இதனை அவன் ஆன்மீக அறிவு உணர்த்தினாலும் அவனது மனம் உணர்வதில்லை. அவ்வாறு உணர்ந்தாலும் அதனை ஏற்பதில்லை. நம்மை ஒருவர் வெறுத்து ஒதுக்கியபின்பு அவர்களை விட்டு நாமும் விலகி இருக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் வயதான முதியோர்களுக்கு இருப்பதில்லை. தான் பெற்ற மக்களே வெறுத்துத்தான் முதியோர் இல்லத்தில் தங்களை சேர்த்து இருக்கிறார்கள். அதனை அவர்கள் நன்கு புரிந்திருந்தாலும், குறையென்று தெரிந்திருந்தாலும், அவர்கள் அந்தக் குறையைப் பொருட்படுத்துவோ தங்கள் பிடிவாதத்தை மாற்றிக்கொள்வதோ இல்லை.

இதற்கு அவர்களது மனப்பக்குவமின்மையே ஒரு காரணம். மற்றொரு காரணம் அந்த முதியவர்கள் பந்தபாசத்தினால் வரக்கூடிய மகிழ்ச்சியை எளிதில் அப்போது இழப்பதற்கு அவர்கள் விரும்புவதில்லை. அதனால் அவர்கள் தங்களது வாழ்க்கையில் முதுமைக்காலத்தில் ஏற்படும் துன்பங்களை வெளியே சொல்லமுடியாமல் உடலாலும் உள்ளத்தாலும் அமைதியின்றி தவிக்கிறார்கள். அவர்கள் பந்தபாசத்திலிருந்து விடுபடமுடியாமல் அமைதியின்றி தவிக்கிறார்கள். முதியவர்கள் மனபக்குவம் பெற்று மனஅமைதி பெறுவதற்கு ஆன்மிகம் வழி காட்டுகிறது.

இதற்கு ஒரு கதை உண்டு. ஒரு தாய்க்கு குழந்தை பிறக்கிறது. தாய் கண் விழித்து பார்க்கும்போது உயிரை வாங்கும் எமதர்மன் பாசக்கயிற்றுடன் நிற்பது அவள் கண்ணுக்குத் தெரிகிறது. எமதர்மன் அவளிடம் ‘உன் குழந்தையின் உயிரைக் கவருதற்காக வந்திருக்கிறேன்“ என்று கூறுகிறான். அந்த தாய் “எமதர்மரே என்னோட குழந்தையின் மழலைமொழி நான் கேட்டு மகிழ்ந்த பிறகு என்னோட குழந்தையின் உயிரைக் கவர்ந்து செல்“ என்று வணங்கிக் கேட்டுக் கொள்கிறாள். எமதர்மன் அந்தத்தாயின் மீது இரக்கப்பட்டு குழந்தையின் உயிரைக் கவராமல் சென்று விடுகிறான்.

அந்த தாய் குழந்தையை தன்னோட மடியில் வைத்து மழலை மொழி கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கும்போது, எமதர்மன் மீண்டும் பாசக்கயிற்றுடன் அந்த தாயின் முன் நின்று “தாயே நீ உன் குழந்தையின் மழலை மொழி கேட்டு மகிழ்ந்து விட்டாயே நீ முன்பு என்னிடம் வாக்களித்தபடி குழந்தையின் உயிரைக் கவருவதற்கு வந்திருக்கிறேன்” என்றான். அதனைக் கேட்டவுடன் அந்தத் தாய் மாலைமாலையாகக் கண்ணீர் வடித்து “எமதர்மரே என்னோட குழந்தையின் பிஞ்சுக்கால்களின் அன்னநடையை நான் பார்த்து மகிழ்வதற்கு வேண்டாமா? குழந்தையின் பிஞ்சுக்கால்கள் நடக்கும் அழகை நான் பார்த்து மகிழ்ந்த பிறகு என்னோட குழந்தையின் உயிரைக் கவர்ந்து செல்” என்று வேண்டினாள். எமதர்மன் அந்த தாயின்மீது இரக்கப்பட்டு குழந்தையின் உயிரைக் கவராமல் சென்று விடுகிறான்.

அந்தத் தாய் தன்னோட குழந்தை அன்னநடை நடந்து வரும் அழகை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்கும்போது எமதர்மன் பாசக்கயிற்றுடன் அந்த தாயின் முன் நின்று “தாயே நீ உன் குழந்தையின் அன்னநடை நடந்து வரும் அழகை பார்த்து நீ மகிழ்ந்து விட்டாயே. நீ முன்பு என்னிடம் கூறியபடி உன் விருப்பம்போல் குழந்தையின் உயிரைக் கவருவதற்கு வந்திருக்கிறேன்” என்றான். அந்த தாய் கண்ணீர்விட்டு கதறி அழுதுகொண்டே “எமதர்மரே என் குழந்தை குருகுலம் சென்று கல்வி பயிலும் அழகை பார்த்து நான் மகிழ வேண்டாமா? கல்வி பயிலும் அழகை நான் பார்த்து கேட்டு மகிழ வேண்டும்.

அவ்வாறு நான் மகிழ்ந்த பிறகு குழந்தையின் உயிரைக் கவர்ந்து செல்” என்று எமதர்மன் காலில் விழுந்து மன்றாடினாள். எமதர்மன் அந்த தாயின்மீது இரக்கப்பட்டு இந்தமுறையும் குழந்தையின் உயிரைக் கவராமல் சென்று விடுகிறான். ஒவ்வொரு முறையும் எமதர்மன் குழந்தையின் உயிரைக் கவருவதற்கு வரும்போதெல்லாம் அந்தத் தாய் தன்னோட குழந்தையின் மீதுள்ள பாசத்தினால் எமதர்மனிடம் வேண்டி குழந்தையை காப்பாற்றிக் கொண்டே வந்தாள். அவள் குழந்தை சிறுவனாக வாலிபனாக வளர்ந்து அவளுக்கு முன்னால் திருமணக்கோலத்தில் நின்று கொண்டு இருந்தான்.

தன்னோட மகனின் திருமணக்கோலத்தில் நிற்கும் அழகை அந்த தாய் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது எமதர்மன் பாசக்கயிற்றுடன் அந்த தாயின் முன் வந்து நின்று “தாயே நீ விரும்பியபடியே உன்னோட மகனின் திருமணக்கோலம் நிற்கும் அழகை பார்த்து நீ மகிழ்ந்து விட்டாயே. நீ எனக்கு வாக்களித்தபடி உன் மகனின் உயிரைக் கவருவதற்கு வந்திருக்கிறேன்” என்றான். அந்த தாய் “எமதர்மரே என்னோட மகனின் பேரக்குழந்தையுடன் கொஞ்சி மகிழ வேண்டாமா“ என்று கூறிக்கொண்டு இருக்கும்போது, எமதர்மன் பதில் ஏதும் கூறாமல் அந்த தாயினுடைய மகன் உயிரைக் கவர்ந்து சென்று விடுகிறான்.

இந்நிகழ்வுக்கு பிறகு எமதர்மன் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை என்று கூறுவார்கள். தாய் மகன் என்ற பாசம்தான் எமதர்மனிடம் அவ்வாறு அந்த தாய் நடந்துகொள்ளும்படி செய்தது என்பதை இந்தக் கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த தாயைப்போன்றுதான் ஒவ்வொரு மனிதனும் பந்தபாசத்தில் இருந்து விடுபடுவதற்கு விரும்புவதில்லை. அதனால் அவன் மன அமைதியை இழக்கிறான். ஆன்மிகம் மனிதனுக்கு பந்தபாசம் கூடாது என்று கூறவில்லை. மனிதர்களுக்கு பந்தபாசம் இருக்கலாம். அது தாமரையிலைத் தண்ணீர்போல் இருக்க வேண்டும் என்று ஆன்மிகம் கூறுகிறது.

உலகில் மனபக்குவமின்மையே சிலரது அமைதியற்ற வாழ்க்கைக்கு காரணமாகும். சிலருக்கு இந்தப் பொருளை வாங்குவதால் அல்லது அடைவதால் நமக்கு நல்லதல்ல என்று தெரிந்திருந்தாலும், அந்தப்பொருளை வெறுப்பதில்லை. ஒரு பொருளை அடைவதன் மூலம் வரும் இன்பத்தில் துன்பம் கலந்து இருக்கிறது என்று குறைகள் அறிந்திருந்தாலும், அந்த இன்பத்தை அடையவே மனிதன் விரும்புகிறான். அந்தப் பொருளை அடைவதில் உள்ள குறைகள் துன்பம் கலந்த இன்பத்தில், பாதுகாப்பு இல்லாத இன்பத்தில் மனிதர்கள் சலிப்படையும்வரையில், அதில் அவர்கள் மனபக்குவம் அடையும் வரையில் உலகத்தில் உள்ள இன்பத்தினை அனுபவவித்துக் கொள்வதற்கு வேதம் அனுமதி அளிக்கிறது.

நம்மில் பலரிடம் மோட்சம் வேண்டுமா என்று கேட்டால், இப்போது எனக்கு மோட்சம் வேண்டாம் என்றுதான் கூறுவார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் பலவிதமான குற்றங்குறைகள் உள்ள இன்பமாக இருந்தாலும், அநித்தியமான இன்பமாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த இன்பத்தை தங்கள் மரணம் வரையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். இதுதான் இன்றைய உலகில் மனிதர்களின் இயல்பாக இருக்கிறது. இந்த இயல்பினை மாற்றுவதற்கு மனஅமைதி பெறுவதற்கும் ஆன்மிகம் வழி காட்டுகிறது.

நாம் மோட்சம் வீடுபேற்றினை அடைய வேண்டுமெனில் தானதர்மங்கள் செய்து புண்ணிய பலன்களை சேர்க்க வேண்டும். அவ்வாறு புண்ணியத்தை சேர்க்கும்போது ஒரு பொருளை அடையும்போது அதன் மூலம் கிடைக்கும் இன்பம் ஆனந்தம் நிரந்தரமாக இருக்க வேண்டும். அந்த இன்பம் குறைவில்லாத நிறைவான இன்பமாக மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அந்த இன்பம் மகிழ்ச்சி சுதந்திரமாக அதற்கு மனம் அடிமையாகாமல் இருக்க வேண்டும். ஒரு பொருளின் மூலம் வரும் இன்பத்தை மனிதன் தொடர்ந்து அடையவேண்டுமெனில் தர்ம நியதிப்படி எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் புண்ணியபலன்களை அவன் சேர்க்க வேண்டும். புண்ணியபலன்கள் வரவேண்டுமென்றால் உனது உலகக்கடமைகளை சாஸ்திரங்களில் தெரிவித்துள்ளபடி தர்ம நியதிப்படி ஆன்மீக வழியில் செயல்களில் ஈடுபடவேண்டும். அதற்கு ஞானத்துடன் கூடிய அறிவு தேவை.

எப்போதும் தர்ம சிந்தனையில் ஈடுபட்டு தியானத்தில் ஈடுபட்டால் தர்ம ஞானம் கிடைக்கும். அதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். எது தர்மச் செயல் எது பாவச்செயல் என்பதை அறிந்து செயல்படுவதற்கு அதற்கு அதர்ம ஞானம் வேண்டும். எனவே மனிதன் மோட்சத்தை அடைவதற்கு தர்மஞானம் அதர்மஞானம் இரண்டும் வேண்டும். மனிதனை விட்டு பாவச்செயல்கள் அகல்வதற்கு அதர்மஞானம்வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பாவச்செயல்கள் புண்ணியச்செயல்கள் எவை என்பதை அறிந்து, அதன்படி வாழ்ந்து ஆத்ம இன்பத்தை அடைந்து நித்தியமான பரமாத்மாவை அடைய முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் உனக்கு ஆன்மீக வழியில் அமைதியான நித்தியமான இன்பம், நாம் தேடிய மனஅமைதி கிடைக்கும். ஞானத்தின் மூலம் ஆன்மீக அறிவு கொண்டு அதனை அறிந்து கொள்ளமுடியும். இதற்கு ஆன்மீக வழியில் மனப்பயிற்சி மிகவும் தேவை.

ஆன்மீக அன்பர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். பயனுள்ள ஆன்மீக நூல்களை, தத்துவ நூல்களை தினமும் பயில வேண்டும். கோவில்களில் நடத்தப்படும் ஆன்மீக சொற்பொழிவுகளை பொறுமையாக முழுமன ஈடுபாட்டுடன் கேட்க வேண்டும். நம் மனதில் குழப்பங்கள் துன்பங்கள் மனஅழுத்தம் போன்றவை ஏற்படும்போது இனிய பக்திப்பாடல்கள், ஆன்மீக சொற்பொழிவுகள் ஆகியவற்றினை ஆடியோ, வீடியோக்கள் மூலம் கேட்டு மனதினை மென்மையாக்கி, நாம் வாழ்வில் ஓரளவுக்கு மன அமைதி பெறமுடியும். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (6-Sep-21, 12:22 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 41

மேலே