செய்தீ வினையிருக்க எய்த வருமோ இருநிதியம் – நல்வழி 17

நேரிசை வெண்பா

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்(து)
அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க்(கு) இன்று
வெறும்பானை பொங்குமோ மேல். 17 நல்வழி

பொருளுரை:

பூமியிலே அறஞ்செய்தலினாலே பாவம் நீங்கும் என்று உணர்ந்து அக்காலத்திலே ஈயாதவருக்கு செய்த அப்பாவம் வறுமைக்கு வித்தாய் இருக்க இப்பொழுது கடவுளை வெறுத்தால் பெரிய திரவியம் பொருந்த வருமோ? வராது.

வெறும் பானை அடுப்பிலே வைத்து எரித்தால் மேலே பொங்குமோ; பொங்காது.

வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை

விளக்கம்:

வெறும் பானையை அடுப்பில் வைத்து தீ மூட்டி பொங்கு என்றால் பொங்குமா?

அது போல் செய்ய வேண்டிய காலத்தில் நல்லது செய்யாமல், அடுத்தவருக்கு கொடுத்து உதவாமல் இருந்து விட்டு, அதன் பலனாக இன்று வறுமை வந்த போது, கடவுளே இது சரியா, இது முறையா, நீ இருக்கிறாயா, இல்லையா? சங்க நிதி, பதும நிதி என்று கூறும் இரண்டு நிதி அளவுப் பணம் வருமா? என்று கடவுளை நொந்து கொள்வதால் என்ன பயன்?

நமக்கு நல்லது நடக்க வேண்டுமானால் பிறருக்கு நல்லது செய்யுங்கள், கடவுளை நொந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை.

வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Sep-21, 12:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 144

மேலே