இருமைக்கும் ஏமம் பயவாதனவே தருமத்துப் போலிகள் தாம் - அறநெறிச்சாரம் 9

நேரிசை வெண்பா

ஆவட்டை போன்றறியா தாரை மயக்குறுத்திப்
பாவிட்டார்க் கெல்லாம் படுகுழியாய்க் - காவிட்(டு)
இருமைக்கும் ஏமம் பயவா தனவே
தருமத்துப் போலிகள் தாம் 9

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

மரணமடையும் நிலையிலிருப்பார் போன்று அறிவில்லாதவர்களை மயக்கி விரும்பினவர்களுக்கு எல்லாம் மிக்க துன்பம் பயப்பவாய் துன்பம் உற்றபொழுது உதவுதலின்றி இம்மை மறுமைகளுக்கு உறுதி பயவாதவை யாவை அவை அறநூல்கள் போன்றிருப்பினும் அறநூல்கள் ஆகாது.

குறிப்பு: மரண நிலையிலிருப்போர் தன்மையைக் குறித்து 'ஆவட்டை கோவட்டையாயிருக்கிறது' என்று சொல்வது சேர நாட்டிடை வழங்குவதொரு வழக்கு;

மரண நிலையிலிருப்பார் அறிவிலிகள். மனத்தில் குழப்பத்தினை யுண்டாக்குபவர் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது;

ஆவட்டை ஒரு பூண்டுமாம்;

துன்பம் உற்றபொழுது உதவுதலாவது சேற்றுநிலத்தில் இயங்குவார்க்கு ஊன்று கோல் போன்று உதவுதல்.

இம்மை மறுமைகட்கு உறுதிகளாவன புகழ் இன்பங்கள் 'பயவாவெனவே' என்பதும் பாடம்;

பொருந்தாமையை ஆராய்ந்தறிக. பாவிட்டார் - பாவிடு: பகுதி; இடு: துணை வினை. பாவி - கருது, விரும்பு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Sep-21, 8:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே