வழக்கோரஞ் சொன்னவர் மனை பாழ் – நல்வழி 23

நேரிசை வெண்பா

வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை. 23 - நல்வழி

பொருளுரை:

தருமசபையிலே ஓரஞ் சொன்னவருடைய வீட்டிலே பேய்கள் வந்து சேரும்;

வெள்ளெருக்கு முளைத்து மலரும்; பாதாளமூலி யென்னும் கொடி படரும்;

மூதேவியானவள் போய் நிலை பெற்றுவாழ்வாள்; பாம்புகள் குடியிருக்கும்.

பாதாளமூலி, s. A variety of the cyprus grass; (lit.) whose root descends to the abyss, ஓர்புல்; the creeper. 2. A kind of white ant, ஓர் கறையான்.

கருத்து:

நீதிமன்றத்திலே வழக்கோரஞ் சொன்னவர் குடும்பத்தோடு அழிவதுமன்றி, அவர் குடியிருந்த வீடும் பாழாம், ஓரம் - நடுவுநிலையின்மை.

விளக்கம்:

வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-21, 7:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

புதிய படைப்புகள்

மேலே