நீறில்லா நெற்றி பாழ் – நல்வழி 24

நேரிசை வெண்பா

நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி யில்லா மனை. 24 நல்வழி

பொருளுரை:

விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய்யில்லாத உணவு பாழாகும்; நதியில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; இல்லறத்திற்குத்தக்க கற்புடைய மனைவியில்லாத வீடு பாழேயாகும்.

கருத்து:

திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், நதியினாலே ஊரும், உடன்பிறப்பால் உடல்நலமும், கற்புடைய மனைவியினாலே வீடும் சிறப்படையும்.

விளக்கம்:

திருநீரோ, திருமண்ணோ இடாத நெற்றி வீணானதாகும்,

நெய்யில்லாமல் உண்ணும் உணவு வீணானதாகும்,

நீர் வளம் தரும் ஆறு இல்லாத ஊர் வீணானதாகும்,

ஒத்த கருத்து உடைய உடன்பிறப்பு இல்லாத உடம்பு வீணானதாகும்,

நல்ல குணங்கள் உள்ள மனைவி இல்லாத வீடு வீணானதாகும்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-21, 8:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 2561

மேலே