இம்மூவர் கைத்துண்ணார் கற்றறிந்தார் – திரிகடுகம் 25

இன்னிசை வெண்பா

செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற
அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் - நல்லவர்க்கு
வைத்த வறப்புறங் கொன்றானும் இம்மூவர்
கைத்துண்ணார் கற்றறிந் தார். 25 திரிகடுகம்

பொருளுரை:

பெரியோரை மதியாமல் இறுமாப்புடன் வாழ்கின்ற அறிவில்லாதவனும்,

படத்தைப் போன்றதாய் விசாலமான நிதம்பத்தினை விற்கும் ஆராய்ந்தெடுத்த வளையலணிந்த வேசையும்,

துறவறத்தார்க்கு அமைத்த அறச்சாலையை அழித்தவனும் ஆகிய இம் மூவருடைய பொருளை புசியார் அற நூல்களைப் படித்து அதன் பொருளை உள்ளபடி அறிந்தவர்.

கருத்துரை:

மதிக்கத் தக்க பெரியாரை மதிக்காதவன், விலைமாது, நல்லவர் பொருட்டு ஏற்படுத்தப் பெற்ற அறச்சாலையை அழித்தவன் ஆகிய இம் மூவரிடமும் அறிஞர் உணவு கொள்ளல் ஆகாது என்பது.

செருக்கு: மதம், செல்வக் களிப்பு, சிறியவன் என்பதில் சிறுமை அறிவின் மேல் நின்றது.

கொல்லல் - அழித்தல்; பைத்து - பையையுடையது; பை - படம்;

கைத்து - கையிலுள்ளது:

"வஞ்சத்தாற் பல்கின்பங் காட்டும் பரத்தையும்" என்ற பாடங் கொள்வதும் உண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-21, 8:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே