வெட்டுகிளி

"டேய் வெட்டுகிளி..!!"
தன் தாத்தாவிடம் கேட்காது, அவரின் சைக்கிளை ஓட்டிவந்த அந்தப் பையன், வெட்டுகிளியை அழைத்தான். அழைத்தான் என்பதைவிட, தெருவே அதரும் படி அலரினான்.

"வரன் டா!!!" என காலுக்கு எட்டிய செருப்பை அவசர அவசரமாக மாட்டிக் கொண்டு வெட்டுகிளி ஓடிவந்தான்.

" யேன் டா கத்துர? அம்மா காதுல விழுந்தா அப்புரம் அடிக்கும் " என தன் நண்பன் செந்திலைக் கடிந்து கொண்டு வெட்டுகிளி, மிதிவண்டியில் ஏறிட , அவசர - அவசரமாக இடத்தை காலி செய்தனர்.

" சோமு இனிக்கு மாட்டுனான் டா, எத்தன தக்க வெச்சுருக்கே? " என செந்தில் வெட்டுகிளியைப் பார்க்க, தன் அரைக்கால் சாட்டை இரண்டு பக்கமும் தக்கைகள் நிறைந்து இருப்பதை உறுதி செய்தான் வெட்டுகிளி.

" சீக்கிரமா மிதி " என வெட்டுகிளி ஊக்கமளிக்க, மிதிவண்டி ஆலமரம் ஒன்றை நோக்கிப் பயணித்தது. சில வாரங்கள் மழை இல்லாததால், விண்வெளி ஏவுகணைப் போல், இவர்களின் பின் பெரும் புழுதி மூட்டம்.

மதிவாணன் என்ற அழகியப் பெயர் இருந்தாலும், பல முறை மாணவர்களின் மீது வெட்டுகிளியைப் பிடித்து போட்டதால் இந்த பெயர் இவனுக்கு. அவர்களின் பயம், இவனுக்கு ஆர்வம் கலந்த இன்பம். அதுவும், மஞ்சளும் இளம் பச்சை கலந்த சற்று பெரும் வகை வெட்டுகிளியைக் கண்டால் வகுப்பு மாணவிகள் அனைவரும் வெளியே ஓடிவிடுவார்கள். நன்றாக சிரித்து மகிழ்வான் மதிவாணன் எனும் வெட்டுகிளி.
அனைவரும் பயம் கொண்ட ஒன்றை, தன் கையால் தைரியமாகப் பிடித்துக் காட்டுவது ஆண்பிள்ளைகளுக்கே உண்டான சாகசம்.

ஆலமரத்தடியில் சில சிறுவர்கள் மும்முரமாகத் தக்கை விளையாடிக் கொண்டிருந்தனர்.
" out டு டா " , "கெளம்பு " என தக்கைகளைப் பொருக்கி பைகள் நிறையும் காட்சி எப்போதும் உண்டு. மூடிகள் அதிகம் வைத்திருக்கும் ஒருவன், வெற்றி கிண்ணம் போல் வலம் வருவான். நெளிந்த தக்கைகள் ஏற்றுக் கொள்ள மாட்டாது. அதை கண்காணிக்க, விளையாடும் போட்டியாளர்களின் நண்பர்கள் மேல்பார்வை செய்வார்கள்.
இம்முறை, எடுத்து வந்த அனைத்து மூடிகளும் சோமுவுக்கு. இருவருக்கும் தோல்வியை ஏற்க முடிய வில்லை. சோமு & Co வை சூடான சட்டியில் போட்ட மிள்காய்ச் சாந்து போல் கொத்தித்துத் துப்பினர்.
மன ஆறுதலுக்கு, மீன் பிடிக்க ஆற்றுப் பக்கம் சென்றனர். அருகில் இருக்கும் மூங்கிலை உடைத்து, உடன் எடுத்து வந்த நரம்பை கட்டிட, செந்தில் கற்களை நகர்த்தி மண்புழுக்களைத் தேடினான்.
சிக்கிய மீன்கள் பெரும்பாலும் மற்ற மாணவர்களிடம் விற்பனையாகும். அதில் கிடைக்கும் பணம், அதிகமான பணிகட்டிகளுடன் குளிர்பாணம் வாங்கி மகிழ்வர். இவர்களுக்காகவே மூடிகள் நெளியாது அதைத் திறந்து கொடுப்பார் கடைக்காரர்.
நெகிழி புட்டிகள் அதிகமாக, உலோக மூடிகள் அரிதாகின. நல்லெண்ணெய், விளக்கெண்ணை மூடிகளின் நடுவே துவாரம் இட்டுதான் கிடைக்கும்.
சிறுவர்களிடையே நெகிழி மூடிகள் பிரபலம் அடையவில்லை.

வீட்டுப்பாடங்களை இரவு நேரத்தில் தன் அக்காவிடம் கேட்டு கேட்டு செய்து முடித்திடுவான். ஆசிரியருக்கும் அம்மாவிற்கும் உறவு பலமாக இருப்பதால் , இருபக்கமும் மிருதங்கம் போல் அடி விழும். அக்காவும் பக்க வாத்தியமாகத் திகழ்வாள்.

எதற்கு படிக்கின்றோம், எதை படிக்கின்றோம் என்று தெரியாத மாணவ வாழ்க்கை. வீட்டுப் பாடங்கள் முடிக்க வேண்டும். சோதனைத் தாளில் ஈக்கள் வந்தால் விழும் அடிக்களைத் தாங்க வேண்டும். இதுவே பல மாணவர்களின் வாழ்க்கை லட்சியம். பள்ளி முடியும் நேரம் தொடங்கி, இரவு உறங்கும் வரை ஒவ்வொரு நாளும் அதற்கிடையில் என்ன செய்ய வேண்டும் என அன்று உண்ட உணவை மறந்து கனவில் பல சிறுவர்கள். இவர்கள் உறங்க, சிள் வண்டுகள் பாடி அனைவரையும் உறங்க வைக்கும்.

யாரும் பிடிக்கும் வரை அமைதியாக மரத்தண்டில் அசையாது வெட்டுகிளி ஒன்று.கூர்மையான பற்கள் கொண்ட கால்கள். பிடிப்பவரை வெட்டியவாறு அடுத்த மரத்தை நோக்கி பறந்தது வெட்டுகிளி ஒன்று.

நன்றி
siven19
வெட்டுகிளி

எழுதியவர் : Siven19 (17-Sep-21, 9:03 pm)
சேர்த்தது : siven19
பார்வை : 130

மேலே