ஏழைப்பங்காளன்
ஏழைப்பங்காளன்-சிறுகதை
******""********
"என்னப்பா..முகிலா.!..உனக்கு ஏது இவ்வளவு பணம்.!.."தலைமையாசிரியர் கேட்க...கையில் இருந்த கற்றை ரூபாய் நோட்டுகளையும் நெஞ்சோடு அணைத்தபடி தலை நிமிர்ந்து பார்த்தான்.
கண்களில் மிரட்சியும் ..பெருமிதமும் மாறி மாறி தாளமிட ..."அது ...வந்து சார்..நான் குப்பை பொறுக்கி விற்று அதுல சேமித்த பணம் சார்...நம்ம பள்ளிக்கூடத்துக்கு கழிவறை கட்டிடம் கட்ட கலெக்டர் ஐயாகிட்ட தரனும் சார்.!"என்றான்.
"அடேய்...என்னடா உலறுற...குப்பை பொறுக்கி வித்தியா...அதுல இவ்வளவு பணமா.?எங்களுக்கு காது குத்தறதுமில்லாம...கலெக்டர் ஐயா முன்னால பள்ளிக்கூடத்து பேரை கலங்கப்படுத்த பார்க்கறீயாடா களவாணிப்பயலே.."என்றபடி தனது கழுத்தில் மாட்டியிருந்த விசில் கோர்த்த நாடாவால் விலாசினார் 'பி.டி'வாத்தியார்.
பயந்து பின்வாங்கி சரிந்து விழுந்தான் அமுதன்.அவனது கையிலிருந்த ரூபாய் நோட்டுக்கள் சிதறிவிழ...."அட...விடுங்க சார்...விழா முடிந்ததும் சாவகாசமா விசாரிச்சுக்கலாம் ...எங்க போயிடப்போறான்...நம்ம பய தானே"என்று ஆதரவாக அணைத்தபடி ரூபாய் நோட்டுக்களை பொறுக்கினார் தமிழாசிரியர்.
இவற்றையெல்லாம் மேடையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த கலெக்டர் தனது உதவியாளருக்கு கண்ஜாடை காட்ட..."சார்...ஐயா கூப்பிடுறாங்க...அந்த பையனை மேடைக்கு அழைச்சிகிட்டு வாங்க..."என்று கலெக்டரின் உதவியாளர் அழைக்க விதிர்விதிர்த்த ஆசிரியர்கள்...பதற்றத்தை மறைத்துக்கொண்டு அமுதனுடன் மேடை ஏறினர்.
அமுதனை அருகில் அழைத்த கலெக்டர் ..."என்ன தம்பி..என்கிட்ட எதுவும் பேசனும்னு உன் வாத்தியாருங்ககிட்ட பர்மிஷன் கேட்டியோ.?..அவங்க தடுத்தாங்களே...என்ன நடந்தது"என்று கேட்க கண்ணீர் விழிகளில் ஊற்றெடுக்க தரையை பார்த்தபடி நின்றான் அவன்.
********"""""****
அது நல்லூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி.சுற்று வட்ட ஏழு எட்டு கிராமங்களை சேர்ந்த இருநூற்று சொச்சம் மாணாக்கர்கள் படிக்கும் பள்ளி.
போதிய இடவசதியின்றி புளியமரத்தடியிலும் ...இலுப்பை மரத்தடியிலுமாக வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் ...இப்பள்ளியில் படித்து இன்று நல்ல நிலைமையில் இருக்கும் முன்னால் மாணவர்களான இந்நாள் தொழிலதிபர்கள் இருவர் சேர்ந்து ...இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள் இரண்டைக்கட்டி தந்து...அதை திறந்து வைக்க மாவட்ட ஆட்சித்தலைவரையும் அழைத்து வந்திருந்தார்கள்.
புதிய கட்டிடங்களை திறந்துவைத்து உரையாற்றிய கலெக்டர்..."இந்த பள்ளி வெளிப்பார்வைக்கு ..புளிய மரத்து அடியிலும்,இலுப்பை மரத்து அடியிலும் இயங்கி வந்ததென்னவோ உண்மைதான்...ஆனாலும் இப்பள்ளி 'ஆலமரம்' என்பதற்கு சாட்சியாக இதோ சமுதாயத்தில் இன்று உயர்ந்த நிலையில் இருக்கும் இரண்டு விழுதுகள் புதிய வகுப்பறை கட்டிடங்களை கட்டி அளித்திருப்பதின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்"...
..."அவர்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்த நான் நெகிழ்ந்து போனேன்...இவ்வளவு காற்றோட்டமான சூழலில் வகுப்பறைகள்...பரந்த விளையாட்டுத்திடல்...குடிநீர் வசதி...அமைதியான சூழல் இப்படி அமைய மாணவர்களாகிய நீங்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும்"
"அனாலும் இருநூற்று சொச்சம் மாணவ,மாணவிகள் படிக்கிற பள்ளிக்கு நான்கே கழிவறைகள் மட்டும் இருப்பது அசௌகர்யமானது...துரதிஷ்டமானது...மேலும் நான்கைந்து கழிவறைகளையாவது கட்டவேண்டிய அவசரஅவசியம் இருக்கிறது...இதை இக்கிராமத்து புரவலர்கள் முன் கோரிக்கையாக வைக்கிறேன்.."
...."அதே போல இங்கே படிக்கிற பிள்ளைகள் பெரும்பாலானர்கள் ஏழைக்கூலித்தொழிலாளர்கள் வீட்டு பிள்ளைகள்...அதிகாலை எழுந்து காடு கழனிகளுக்கு வேலைக்கு செல்லும் சூழலில் பிள்ளைகளுக்கு காலை உணவை ஏற்பாடு செய்து தந்துவிட்டு செல்ல இயலாது...பெரும்பாலும் பட்டினியாகவே பள்ளிக்கு வந்து படிக்கும் நிலை இருக்கிறது...இங்கே காலை உணவு சாப்பிடாமல் வர்றவங்க கைதூக்குங்க..."என்றார் ஆட்சியர்.
அங்கொன்றும்...இங்கொன்றுமாக கைகள் மேலெழும்பியதிலேயே அறுபதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் காலை பட்டினி என்பது துலங்கியது.
"பார்த்தீங்களா...ஐயா...பெரும் நிலக்கிழார்களே...முன்னாள்,இந்நாள் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளே ஆன்றோர்களே...ஆசிரிய பெருமக்களே...நல்ல உள்ளங்கள் நான்குபேர் சேர்ந்து தினம் ஒருவர் இந்த பிள்ளைகளின் காலை ஆகாரத்துக்கு வகை செய்யுங்களேன்...எத்தனையோ கோரிக்கைகளை இறைவனிடம் வைக்கிறோம்...வெள்ளியில் வேல் சாத்தறேன்...தங்க அங்கி வாங்கி வழங்கறேன்னு...அதனால் நெகிழாத தெய்வம் கூட ...கல்விக்கண் திறக்க உதவுவீர்கள் ஆனால்....உங்கள் மீது கடைக்கண் திறக்கும் என்பதை நினைவுபடுத்த விழைகிறேன்"
..."ஆகவே...இப்படி நல்ல காரியங்களுக்கு உதவ முன்வரும் பெரியமனதுக்காரர்கள்...இந்த பள்ளியின் தலைமையாசிரியரை அனுகலாம்...இப்பள்ளிக்கான அரசு உதவிகள் விரைந்துகிடைக்க மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வேன் என்பதை உறுதியளிக்கிறேன்.."என்றார்.
*********""
"தம்பி !சொல்லுப்பா ...அதென்ன கையில பணம்..அது உன்னுடையது தானே..உங்க அப்பா,அம்மா தந்தாங்களா..?!கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்தார் ஆட்சியர்.
"இல்லீங்கய்யா...நான் குப்பைகளை சேகரித்து...விற்று சேமிச்ச காசுங்கய்யா...எங்க பள்ளிக்கு கழிவறை கட்டிடம் கட்ட நிதியாக தரனும்னு ஆசைப்படறேன்...ஆனா ஆசிரியர்கள் நான் எங்கேயோ திருடிட்டு வந்துட்டதா சந்தேகப்படறாங்க ஐயா...சத்தியமா இந்த பணம் நான் சம்பாதிச்சதுதான் ஐயா...நீங்களாவது என்னை நம்பி வாங்கிக்குங்க ஐயா ..."தேம்பித்தேம்பி அழத்தொடங்க...ஆசிரியர்கள் தர்மசங்கடமாக நெளியத்தொடங்கினர்.
"அழாதே தம்பி.!கொஞ்சம் விளக்கமா சொல்லு...உன் குடும்ப சூழல் எப்படி.?அம்மா அப்பா என்ன பண்றாங்க.?நீ ஏன் குப்பை,பாட்டில் எல்லாம் பொறுக்க பொறுக்குற...சொல்லுப்பா.!"ஆதரவாக ஆட்சியர் கேட்க...
"ஐயா...எங்க ஊருக்குள்ளாற 'சிப்காட்'தொழில்பேட்டை அமைக்க இடம் ஒதுக்கி போட்டிருக்காங்க...அந்த இடத்துல ராத்திரி நேரங்களில் பலபேர் குடிச்சிட்டு கலாட்டா பண்ணிகிட்டு திரிவாங்க...அதனால ராத்திரியில அந்த பக்கம் ஊர்காரங்க யாரும் போகமாட்டாங்க...ஆனா காலையில மாடு கன்னுகளை மேய்க்க...இயற்கை உபாதைகளை கழிக்கன்னு அங்க போவாங்க.."
'"ஒரு நாள் நானும் அங்க போனப்ப...ரெண்டு அண்ணன்ங்க...நின்னுகிட்டு கீழே இறைஞ்சி கிடந்த மதுபாட்டில்களை எடுத்து அங்கே நடப்பட்டிருந்த எல்லைக்கல்லுல 'மடேர்...மடேர்'ன்னு அடிச்சு உடைச்சிட்டு இருந்தாங்க..இன்னொரு அண்ணணோ 'இம் ...இது ஊசிவெடி...ஆங்..இது ஆனைவெடி'ன்னு பாட்டில் உடையுற சத்தத்துக்கு தகுந்த மாதிரி கவுன்டர் குடுத்துகிட்டு இருந்தாங்க..."
நான் "அண்ணே...இது பலபேரு நடமாடுற பாதை...நம்மூரு காரவங்க காடுகழனிக்கு கால்ல செறுப்பில்லாம தானே போறாங்க...இப்படி பாட்டிலை உடைக்கறீங்களே...பாவமில்லையா'ன்னு கேட்டேன்.
உடனே ஒரு அண்ணன் "வந்துட்டாருய்யா...வளரும் காந்தி"ன்னு சொல்லிகிட்டே என்னை பிடிச்சு கீழே தள்ளி ரெண்டு அடியும் அடிச்சுட்டாப்ல...முழங்கால் தேய்ஞ்சி எரிச்சல் எடுக்க ஆற்றாமையால அழுதுகிட்டே வீட்டு வந்துட்டேன்"
"அப்பதான் முடிவு செஞ்சேன்...ஊரு மக்கள் பொழுது விடிஞ்சிதானே அந்த பக்கம் போறாங்க...அந்த பாட்டில் உடைக்கிற அண்ணன்கள் வர்றதுக்கு முன்னாலயே போயி பாட்டில்களை அப்புறப்படுத்திட்டா ...அவங்களால உடைக்க முடியாதேன்னு...விடியகருக்கலில் எழுந்து போய் பாட்டில்களை பொறுக்கி மறைவான இடத்தில் வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்....
"இப்படியே ஒருவாரம் சேகரிச்ச பாட்டில்களை பார்த்து எனக்கே மலைப்பாக இருந்துச்சு...என்ன பண்றதுன்னே தெரியல....இந்த அம்பாரம் அந்த அண்ணன்க கண்ணுல மாட்டினா என்னாகுமோ என்கிற பீதி வேற வயித்தை கலக்குச்சு..."
"வீதியில கோலமாவு வித்துகிட்டு போன வியாபாரியை கூட்டிகிட்டு போய் காட்டினேன்..பாட்டில்களை வகை பிரிச்சு சாக்குல கட்டி வண்டியில ஏத்திகிட்டு கணிசமா பணமும் கொடுத்தார்"
...."கூடவே ...குப்பைகளை சேகரிச்சு ரகம் பிரிச்சி வச்சிட்டா...வாரம் ஒருதடவை அவரே எடுத்துகிட்டு பணம் தர்றதா சொன்னார்...காலையில பள்ளிக்கூடம் போறதுக்கு முன்னாடியும்...மாலையில இருட்டுறதுக்கு முன்னாடியும் இதுவே என் வேளையா மாறிடுச்சு..."
..."கிடைக்குற பணத்துல வீட்டுச்செலவுக்கு உண்டான தொகையை கொடுத்துட்டு...மிச்சத்தை போஸ்ட் ஆபீஸ்ல கணக்கு தொடங்கி சேமிச்சிகிட்டு வர்றேன்.
.....நேற்று ஊர் நாட்டாமைகிட்ட எங்க தலைமையாசிரியர் ஐயா "பள்ளிக்கூட விரிவாக்க பணிகளுக்கு நிதி அளிக்குறவங்க கலெக்டர் ஐயா முன்னிலையில அளிக்கலாம்'சொல்லிகிட்டிருந்ததை கேட்டேன்...உடனே மதியம் சாப்பிட போனப்போ போஸ்ட்ஆபீஸ்ல இருந்து மொத்த தொகையையும் எடுத்துகிட்டு வந்துட்டேன்..அதுதான் ஐயா உண்மை...இப்பவாவது இதை வாங்கிப்பீங்களா...ஐயா..."என்றான்.
இருக்கையிலிருந்து எழுந்த ஆட்சியர் ,,,"பெரியோர்களே...இந்த விழா மகிழ்வாய் தொடங்கி நெகிழ்வாய் நிறையாய் மாறிகிட்டிருக்கு...இதோ இந்த மாணவன்...கூலித்தொழிலாளியின் மகன்...தன் குடும்ப சூழலையும் தாண்டி...குப்பையிலிருந்து மறுசுழற்சிக்கு உகந்த பொருட்களை சேகரித்து விற்று பணமாக்கி...தன் பள்ளி மேம்படவேண்டுமென நிதியளிக்க விரும்புகிறான்"
"இவனைப்போன்ற நாளைய சமுதாய தூண்களை நாம் துன்பப்படுத்தி துருப்பிடிக்க விடலாமா...ஊக்கப்படுத்தி உறுதியாக்க வேண்டாமா.?...இவரின் எதிர்கால லட்சியம் என்ன...எப்படி எதிர் நீச்சல் போட்டு எதிர்கால கனவுகளை கட்டமைத்து இந்த சமுதாயத்துக்கு செழுமை சேர்க்க போகிறார்...கேட்போமே..!"ஒலிவாங்கியை நீட்டினார் ஆட்சியர்.
துக்கம் போல நெகிழ்வும் நெஞ்சுக்குழியிலிருந்து பந்தாக எழும்பி தொண்டைக்குழியை அடைக்க சமாளித்து பேச முற்பட்டான் அமுதன்.
*****"******
"எல்லோருக்கும் வணக்கம்...இவ்வளவு நாளா சுத்தம் சோறு போடும்னு சொன்னா குழம்பு யாரு ஊத்துவான்னு குதர்க்கம் பேசினவன் தான் நானும்....இப்படியே விட்டேந்தியா பேசிப்பேசியே ஆழிசூழ் உலகை நெகிழி சூழ் உலகமா மாத்திட்டு நிற்கதியா நிற்கறோம்....
தனக்கு வந்தா தானே தெரியும் தலைவலியும் திருகுவலியும் ....அந்த உண்மை உறைத்ததால தான் மதுபாட்டில்களை தேடித்தேடி பொறுக்கறேன்...எனக்கு விதிக்கப்பட்ட பிழைப்பு இல்லை...இது சமுதாயத்தால என்மேல திணிக்கப்பட்ட பிழைப்பு..
'குடி குடியை கெடுக்கும்'ங்கறது உண்மைதான் ..அதுக்கு என் குடும்பமே சாட்சி..மதுபுட்டிகளாகவே வாங்கி குடும்பத்தை சீரழித்த குடும்பத்தலைவன் எங்க அப்பா...அவரால தான் இன்னிக்கு பாட்டில் பொறுக்கி வயிறு வளர்க்கவேண்டிய நிலைக்கு என் குடும்பம் ஆளாகிடுச்சு...
எங்கப்பா மகா குடிகாரர்...அவரை எப்படியாவது குடிநோயிலிருந்து மீட்டுடனும்கறது அம்மாவோட வைராக்கியம்....அப்பாவோட அடங்காத குடிவெறி...இவைகளுக்கு இடையில பாவமூட்டைகளாக வந்து பிறந்த நானும்,என் தங்கச்சியும் ...எல்லாமும் சேர்ந்து வளர்ந்துகிட்டு இருந்தப்போ...
ஒருநாள் குடிவெறியில எங்கம்மாவை இழுத்துபோட்டு அடிச்சார் எங்கப்பா...நாங்க ஓடி அவரை பிடிச்சு இழுத்து திண்ணையில சாய்ச்சுட்டு அம்மாகிட்ட போனா...அவ அவங்க அப்பா அம்மாகிட்ட போயிட்டா...மேலே..."
"அழுதோம்...புரண்டோம்...யார் யாரோ ஆறுதல் சொன்னாங்க...இனி சாராயத்தை தொடமாட்டேன்னு எங்கம்மா பிணத்துமேல சத்தியம் பண்ணினார் அப்பா...நம்பினோம்...பேரப்பிள்ளைகள் அனாதையாகிட கூடாதேன்னு...அப்பாவோட அம்மா எங்களுக்கு ஆதரவா இருக்காங்க..."
"மீண்டும் குடும்பம் லேசா நிமிர...அப்பா விவசாய கூலியா போக ஆரம்பிச்சார்...கல்லடியில தம்பினாலும் கண்ணடியில தப்ப முடியாதுன்னு சொல்ற மாதிரி மனைவி மேல வச்சிருந்த உண்மையான அன்பாலதான் இவன் திருந்தி முழு மனுசனா ஆகிட்டான்னு ஊரே எங்கப்பாவை கொண்டாடி தீர்த்த கொஞ்ச நாள்ல...வேலைக்கு போன இடத்துல இருந்து கால்ல பெரிய கட்டோட நடைபிணமா திண்ணைக்கு கொண்டுவரப்பட்டார்
வயல்ல அண்டை வெட்டும்போது ...யாரோ ஒரு புண்ணியவான் எப்பவோ குடிச்சிட்டு வீசுன பாட்டில்..டிராக்டர் வீல்ல அடிபட்டு நொறுக்கி சேத்துல பதிஞ்சு கிடந்திருக்கு...அது கால்ல ஏறி நரம்புகளை சிதைச்சு ரெண்டுவருச காலமா ஆறாத ரணத்தோட வீட்டோட முடங்கவச்சிட்டுது..அதனால ஏற்பட்ட மனக்காயம்தான் நம்ம அப்பா மாதிரி யாரும் பாதிச்சுட கூடாதேன்னு பாட்டில்களை தேடித்தேடி பொறுக்குறேன்...
இதையே என்னால ஆன சமுதாய சேவையா நினைக்கிறேன்...எதிர் காலத்துல இன்னும் இந்த சமுதாயத்துக்கு சேவை செய்ய உங்களை மாதிரி கலெக்டர் ஆகனும்னு விரும்பறேன்..அதை உங்க முன்னால சொல்றதுல பெருமைப்படறேன்..இப்பவாவது என்னை நம்புவீங்களா சார்.!?"என்று ஆசிரியர்களை பார்த்து கேட்டான்
ஆட்சியர் எழுந்தார்..அன்பானவர்களே இந்த பையனோட கதையை கேட்டு என் பள்ளி நாட்களுக்கே போயிட்டேன்
இந்த மாணவனின் ஐஏஎஸ் கனவு அவனோட முயற்சியாலதான் சாத்தியம் ..ஆனா தூண்டுகோளா நாம இருந்தாதான் துலங்கும் விளக்காக அவன் பிரகாசிப்பான்"
பேச்சை நிறுத்திவிட்டு தனது உதவியாளரை பார்க்க...அவரோ விழா தொடக்கத்தில் கலெக்டருக்கு அணிவிக்கப்பட்ட சால்வை,சந்தனமாலையோடு வந்தார்.
சந்தன மாலையை அமுதனுக்கு அணிவித்த அவர்"எதிர்கால கலெக்கடருக்கு ஏதோ என்னால் ஆன கௌரவிப்பு...சமர்த்தா படிச்சி சாதிச்சு காட்டுப்பா""என்படி எல்லோரிடமும் விடைபெற்று புறப்பட்டார்.
விழா நிறைவுற்று வீடு திரும்பினான் அமுதன்.குப்பையில் கண்டெடுத்த குன்றுமணி பொக்கிஷப்பெட்டியில் இடம் பிடித்ததில் பூரிப்படையவில்லை...ஏனெனில் தன்னை சேர்ந்த அனேக குன்றுமணிகள் இன்னும் காலம் எனும் பல்லாங்குழியில் பகடைகளாக பந்தாடப்பட்டு பதம்பார்க்கப்படும்போது எப்படி பூரிக்கமுடியும்.
அப்படி எல்லோருக்கும் பொக்கிஷ பெட்டி புகலிடம் வாய்க்கும் வரை அவன் குப்பைமேட்டை நோக்கியே ஓடவேண்டும்...இதோ புத்தகப்பையை சுவற்று ஆணியில் மாட்டிவிட்டு கோணிச்சாக்கோடு நடக்கிறான்...நேற்று வரை சுழித்து கீழிறங்கி பழிப்பு காட்டிய உதடுகள்..இன்று மலர்ந்து மேலெழும்பி புன்னகைக்க...மலர்ச்சியோடு நடந்துகொண்டேயிருக்கிறான்...காலுக்கு கீழே நெறிபடும் குப்பைகள் எல்லாம் பூக்களாகும் காலத்தை நோக்கி...!♥