இனமொழியைக் காத்திடுவோம்
இனமொழியைக் காத்திடுவோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
மூவேந்தர் ஆட்சிசெய்த தமிழ நாட்டை
முச்சங்கம் தமிழ்வளர்த்த தமிழ நாட்டைப்
பாவேந்திக் கணியன்பூங் குன்றன் போன்றோர்
பாரறிய உயர்த்திட்ட தமிழ நாட்டைப்
பூவேந்தி அழைக்காமல் மெட்ராஸ் என்றே
புனைந்துபெயர் மாற்றியதை மீண்டும் நன்றாய்
நாவேந்தித் தமிழ்நாடாய் அழைப்ப தற்கே
நல்லாணை பேரறிஞர் அண்ணா தந்தார்!
பிறமொழியின் ஆதிக்கம் தமிழர் தம்மைப்
பிளவுசெய்து பண்பாட்டைக் குலையச் செய்து
நறவுதமிழ் தமிங்கிலமாய்க் கலப்பு செய்து
நாகரிகம் ஒழுக்கத்தைப் புதிதாய் மாற்றி
உறவுதந்த அருந்தாயை மம்மி யாக்கி
உறவுகளை ஆண்ட்டியங்கிள் டாடி யாக்கித்
துறவுகொண்ட தமிழ்ப்பண்பை மீண்டு மிங்கே
துலங்கிடவே செய்திடுவோம் தமிழாய் மாற்றி !
கல்வியினைத் தமிழ்செய்வோம் ! தெருவில் காணும்
கடைபெயரைத் தமிழ்செய்வோம் ! குழந்தை கட்கு
நல்லதமிழ்ப் பெயர்சூட்டி வீட்டி னுள்ளே
நற்றமிழில் பேசிஅம்மா என்ற ழைப்போம்
வெல்லுகின்ற குறள்சங்க நூல்கள் கற்று
வேட்டிசேலை கட்டியதன் வழிந டப்போம்
பொல்லாத கலப்பகற்றிப் பாவா ணர்போல்
பொலிந்திடவே தனித்தமிழாய் வளர்த்தெ டுப்போம் !
பாரிகாரி அதிகன்போல் நேயம் பேணிப்
பரிவுடனே யாதும்ஊர் கேளிர் என்றே
ஊரினுள்ளே சாதிமதப் பேத மின்றி
உளமிணைந்த களவுகற்பில் வாழ்வ மைத்து
ஏரிகுளம் காடுமலை இயற்கை யோடே
ஏற்றதமிழ் கலைகளுக்கே உயிர்கொ டுத்தும்
வேரினையே விழுதாக்கித் தாங்கும் ஆலாய்
வீறுடனே மொழியினத்தைக் காப்போம் வாரீர் !