அப்பு - அணலாற்றி - வருணன் போற்று - வெண்டுறை
நீரை நிரம்ப உண்டே நெடுங்காற் றினாலே
காரிருள் மேகமாய் மாறியே விண்ணில் தவழ்ந்து
மாரியாய் மாறியே பூமியில் எல்லாமும் வாழவே
வாரியே கொடுக்கும் புனலைத் துதி --- (1)
நிலத்திலே தேங்கியும் ஓடியும் எங்கும் வளத்தையே
பலவகை தன்மையில் தந்தே புவியின் இனங்கள்
பலமுடன் வாழவே பலனை எதிர்பார்க் காமல்
உலவும் நீரினை என்றுமே துதி --- (2)
குருதியாய் பாய்ந்து உயிர்கள் சிறந்து வாழவும்
உரந்தரும் கூழ்ம குவியலாய் பழங்களில் புகுந்தும்
வரம்பிலா சத்துடன் கீரையில் கரைசலாய் இருந்து
அரும்பணி ஆற்றும் புனலைப் போற்று --- (3)
உயிர்கள் தோற்றம் நீராம் இதற்கே உடலில்
உயர்வாய் குருதியின் ஓட்டம் குறையா நிலையில்
பயிர்கள் வளரவும் மண்ணை கரைத்து உருக்கவும்
வயமாய் வலம்வரும் புணரிப் போற்று. --- (4)
குளிர்வாய் கொதிப்பாய் பனியாய் கட்டியாய் எவ்வகை
தளத்தில் இருப்பினும் கங்கை அணைக்கும் நிலையில்
வளமாய் இருந்தே குளிர்வாய் பலந்தரும் நீராம்
அளறினை ஆயுள் முழுதும் தொழு ---- (5)
----- நன்னாடன்.