மலைத்தேன் சுவையும் ஈடாகாது இந்த சுவைக்கு முன்பு

குழந்தை பருவத்தில் தாயின் கொஞ்சல் தான் குழந்தைக்கு சுவை
பள்ளி பருவத்தில் மதிப்பெண்கள் அதிகம் பெற்றால் அதுவே சுவை
கல்லூரியில் சகமானவர்களிடம் கைத்தட்டு பெறுவது மிகவும் சுவை
வேலை கிடைத்தபின் மாதம் முதல் தேதியில் சம்பளம் பெறுவது சுவை
காதல் வயப்பட்டால் காதலியுடன் சேர்ந்திருக்கும் நேரம் சுவையோ சுவை
திருமணம் ஆகி தேனிலவு சென்று கொட்டமடிப்பது இளமையின் பல்சுவை
முதல் குழந்தை பிறந்து அப்பா அம்மா என்றழைப்பது ஒரு அலாதியான சுவை
பிள்ளை நன்கு படித்து மதிப்பெண்கள் பெறும்போது பெற்றோருக்கு அதி சுவை
அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் நாள், ஆஹா, அதன் சுவையே சுவை
மனைவி ஞாயிறு அன்று செய்திடும் சமையல் இருக்கிறதே அது ருசியான சுவை
அண்டை வீட்டுக்கு சமயத்தில் உதவி செய்து அவர்களின் பாராட்டை பெறுவது சுவை
பண்டிகைக்கு முன்பு குடும்பமாய் சென்று துணிமணிகள் எடுப்பது மகிழ்ச்சியான சுவை
வாரத்தில் ஒருமுறை வித விதமான ஹோட்டல் உணவை ரசித்து சுவைப்பது தனி சுவை
பண்டிகைகளின் போது வீட்டில் சிறப்பு சமையல் செய்து குடும்பத்துடன் உண்பது படு சுவை
நமக்கு பிடித்த பாடல்களை தனிமையில் கேட்டு ரசிக்கும் ஆனந்தம் மனதை வருடும் சுவை
ஆருயிர் நண்பனுடன் தோளில் கைபோட்டபடி அந்தரங்கங்களை பரிமாறிக்கொள்வது சுவை
இன்னும் இதுபோல எவ்வளவோ சுவைகள், சொல்லிக்கொண்டேபோகலாம், எல்லாமே சுவை
ஆனால் அந்நாளில் தொடங்கி இந்நாள் வரையில் எப்போதும் தித்திக்கும் தீஞ்சுவை ஒன்று உண்டு
அது என்னவெனில், நம் இன்பத்தை பன்மடங்கு கூட்டும் சுவை, நம் உற்சாகத்தை பெருக்கும் சுவை
கவலைகளை மறக்கவைக்கும், துன்பங்களை மறைய வைக்கும், நமக்கு சக்தியை கொடுக்கும் சுவை
வாசகர்களே, கேளுங்கள், அதுதான் அற்புதமான அபாரமான வயிறை குலுங்க செய்யும் நகைச்சுவை
கடுவன் பூனைகளையும் குதறும் நாய்களையும் இடிச்சபுளி முகங்களையும் சிரிக்கவைக்கும் நகைச்சுவை
வேறு எந்த சுவைகளையும் விட்டு தரலாம், ஆனால் ஒருபோதும் விட்டு தரக்கூடாதது இந்த நகைச்சுவை
மற்ற சுவைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும், ஆனால் எப்போதும் மாறாதது நகைச்சுவையே
கோபத்தை குறைக்க கவலையை மறக்க சுமைகளை தூக்க அருமருந்தாக செயல்படுவது நகைச்சுவையே
நகைச்சுவை உணர்வுள்ளவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள், பிரச்சினைகள் இருப்பினும்
பிரச்சினை இல்லாத பலர் கவலையுடன் வருந்துகின்றனர், ஏன்? நகைச்சுவை உணர்வு இல்லாததால்!!!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (11-Oct-21, 11:00 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 60

மேலே