தமரையில் லார்க்கு நகரமும் காடுபோன் றாங்கு - பழமொழி நானூறு 3

நேரிசை வெண்பா

கல்வியான் ஆய கழிநுட்பம் கல்லார்முன்
சொல்லிய நல்லவுந் தீயவாம் - எல்லாம்
இவர்வரை நாட! தமரையில் லார்க்கு
நகரமும் காடுபோன் றாங்கு. 3

- பழமொழி நானூறு

பொருளுரை:

எல்லாப் பொருள்களாலும் விரும்பப்படும் மலைநாட்டை உடையவனே!

முன்னர்ப் பெற்றிருந்து பின்னர் உறவினரை இல்லார்க்கு நகரமும் காட்டை ஒத்துத் துன்பம் பயத்தல்போல,

நூல்களைக் கற்றதனாலாய மிக்க நுண்பொருள்களுள் நூல்களைக் கல்லார் முன்பு கூறிய நல்லனவும் பொருளற்றனவாகத் தீயவாய் முடியும்.

கருத்து:

கல்லார் அவையின்கண் சிறந்த பொருள்களை கற்றார் கூறாதிருக்கக் கடவர்.

விளக்கம்:

தீயவாய் முடிதலாவது நுண்பொருள்கள் உள்ளன, அவையிலவாய் முடிதல்.ஆசிரியர் வள்ளுவனாரும்,

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல் 720 அவையறிதல்

என்று பயனற்றொழியும் என்பதையே குறித்தார்.

'தமரையில்லார்க்கு நகரமும் காடு போன்றாங்கு' என்பது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Oct-21, 9:56 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே