தோற்பன கொண்டு புகாஅர் அவை - பழமொழி நானூறு 4

நேரிசை வெண்பா

கேட்பாரை நாடிக் கிளக்கப் படும்பொருட்கண்
வேட்கை அறிந்துரைப்பர் வித்தகர் - வேட்கையால்
வண்டு வழிபடரும் வாட்கண்ணாய்! தோற்பன
கொண்டு புகாஅர் அவை. 4

- பழமொழி நானூறு

பொருளுரை:

காம விருப்பினால் அழகிய பெண்களின் கண்களை பெடை வண்டுகள் எனக் கருதி ஆண்வண்டுகள் பின் செல்கின்ற வாள்போன்ற கண்களையுடைய பெண்ணே!

அறிஞர் எனப்படுபவர் தாம் கூறும் பொருள்களைக் கேட்கத்தக்காரைத் தேடி தம்மால் கூறப்படும் பொருளில் அவர்களுக்கு விருப்பம் இருப்பதை அறிந்து சொல்லுவார்கள்.

மற்ற அறிஞர்கள் உள்ள பொது இடமாகிய சபையில் தோல்வியடைதற்கு உரியனவற்றைக் கொண்டு போக மாட்டார்கள்.

கருத்து:

கற்றார் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுவர்.

விளக்கம்:

'நாடி' என்றதனால் அறிவாரைத் தேடி உரைத்தல் வித்தகர்க்கு இயல்பு என்பது பெறப்பட்டது.

கேட்பாரையும், சொல்லப்படும் பொருளின் மேல் அவையோர்க்கு உள்ள வேட்கையையும் அறிந்து கூறுதலின் வித்தகர் என்றார்.

தோற்பன - அவையிலுள்ளார் விரும்பாத பொருள்கள்.

தாம் விரும்பினாலும், அப்பொருள்களை அவையிலுள்ளார் விரும்பாத தன்மையினால் தோற்பதற்கு உரிய ஆயின.

‘தோற்பன கொண்டு புகாஅர் அவை’ என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Oct-21, 10:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே