மன்னுயிரைக் காக்க மனமுவந்து சீமூதன் தன்னுயிரைத் தந்த தகைமை - வரம், தருமதீபிகை 890

நேரிசை வெண்பா

மன்னுயிரைக் காக்க மனமுவந்து சீமூதன்
தன்னுயிரைத் தந்த தகைமையை - உன்னியுன்னி
ஞாலம் வியந்து நயந்து புகழுமே
காலம் கடந்தும் கனிந்து. 890

- வரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பிறஉயிரைக் காக்கத் தன் உயிரைச் சீமூதவாகன் உவந்து தந்தான்; அந்த அரிய கருணை நிலையை எண்ணி என்றும் உலகம் வியந்து புகழ்ந்து அவனை உவந்து வருகிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சிறந்த நீர்மைகளால் மனிதன் உயர்ந்து வருகிறான். அரிய பண்பு பெரிய சீர்மைகளை அருளுகின்றன. தனக்கே சுகத்தை நாடுவதும் தன்னலமே கருதி விரைவதும் பெரும்பாலும் மக்களிடம் மருவியுள்ளன. பொதுவான இந்த நிலையைக் கடந்து பிற உயிர்களுக்கு இரங்கிப் பேரருள் புரிந்து தன்னலம் கருதாமல் உதவி செய்பவன் உன்னதமான உத்தமனாகிறான். ஆகவே புண்ணிய மூர்த்தி என்று உலகம் அவனை உவந்து போற்றுகிறது.

கருணை கனிந்த தருமவான்.

சீமூதவாகன் என்பவன் சிறந்த அரச குமாரன்; நல்ல அறிஞன்; எல்லாவுயிர்களிடத்தும் இரக்கம் உடையவன். மலையவதி என்னும் அழகிய மங்கையை மணந்து சுகமாய் வாழ்ந்து வந்தான். இனிய குளிர் பூஞ்சோலையில் ஒருநாள் தனியே உலாவினான். அவ்வாறு உலாவி வருங்கால் அதனையடுத்த மலைச்சாரலில் இருந்த ஒரு பெண் விம்மி அழுகிற ஒலி கேட்டது; அங்கே விரைந்து போய் அவளைக் கண்டு, ’அம்மா! ஏன் அழுகிறாய்? என்று இரங்கிக் கேட்டான். "ஐயா! நான் நாகசாதி மாது; எங்கள் நாட்டு வேந்தனுக்கும் கருட தேவனுக்கும் நேர்ந்த உடன்படிக்கையின்படி நாளும் வீட்டுக்கு ஒரு ஆளை அவனுக்குப் பலி கொடுத்து வரவேண்டும். இன்று என் முறை; எனக்கு ஒரே ஒரு மகன் சங்ககுடன் என்னும் பேரினன்; எனது கணவன் முன்னரே இறந்து போனான்; அருமை மகன் இன்று சாக நேர்ந்துள்ளான்; புத்திர வாஞ்சையான அந்தச் சோகம் என் உயிரைச் சித்திரவதை செய்கிறது; துயரம் பொறுக்கமாட்டாமல் அழுகிறேன்; இன்னும் இரண்டு நாழிகைக்குள் கருடன் வந்து விடுவான்; என் மகன் அதோ காளி கோவில் எதிரேயுள்ள பலி பீடத்தில் இருக்கிறான்’ என்று பரிதாபமாய் உரைத்தாள்.

அவ்வுரைகளைக் கேட்டதும் இவன் உள்ளம் உருகினான்; மறுகி அழுகிற அவளை இவன் ஆற்றித் தேற்றினான். 'தாயே! நான் உனக்கு மூத்த மகன்; நானே இன்று கருடனுக்கு இரையாவேன்; என் தம்பியை அழைத்துக் கொண்டு நீ ஊருக்குப் போ; யாருக்கும் இதை யாதும் சொல்லாதே; சீக்கிரம் போய்விடு' என்று சொல்லிப் பலிபீடத்தை நோக்கி நடந்தான். அந்த அன்னையும் மகனும் அதிசய பரவசராய்த் திகைத்துத் தடுத்தார்; இவன் அவரை வற்புறுத்தி அகற்றிவிட்டு அந்தப் பலிபீடத்தில் படுத்துக் கிடந்தான் கருடன் வந்து தசையைக் கொத்தித் தின்றான்; உடல் முழுதும் சதை தீர்ந்த பின் முகத்தை உற்றுப் பார்த்தான். மகிழ்ச்சியோடு பொலிந்து விளங்கியது; கருடன் கலங்கி பெரிய திகிலோடு பேசினான்.

கருடன்: நீ யார்? நாகனா?

சீமூதன்: யாராயிருந்தால் என்ன? உனக்கு வயிறு நிறைய வேண்டும்; இரை இன்னும் உள்ளது; விரைந்து உண். அதன் பின் பறந்து போ!
கருடன்: ஐயோ! நீ யார்? உண்மையைச் சொல்.
சீமூதன்: தசை முழுவதும் தின்றுவிட்டுப் போ; என் உடலில் இன்னும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது; உன் குடலில் அதைச் சேர்த்தருள்; வேறு வார்த்தை எதற்கு? விரைந்து உண்டு கொள்!

கருடன்: அந்தோ! கொடிய தீமையை இனம் தெரியாமல் செய்துவிட்டேன்; நீ வித்தியாதரன் போல் தெரிகிறது; ஒரு இராச குமாரனாயிருக்க வேண்டும்; நீசமான காரியம் மோசமாய் நேர்ந்து விட்டதே.

சீமூதன்: உனக்கும் இவ்வள்வு இரக்கம் இருக்கிறதா?

கருடன்: நான் கொடியவனா? எனக்கு இரக்கம் இல்லையா?

சீமுதன்:
நேரிசை வெண்பா

உள்ளம் துடிக்க உயிர்பதைக்க ஊனுடலை
அள்ளி விழுங்கும் அருளுடையாய்!—உள்ளிநீ
என்னை வினவி இடையாறி நிற்கின்றாய்
அன்னை அனையாய் அருந்து

இந்த உரையைக் கேட்டதும் கருடன் பதறினான்; யாரோ ஒரு தெய்வீகமான கருணையாளன் என்று அஞ்சினான். உறுதி மொழிகள் கூறினான். "இனிமேல் இந்தத் தீமையை நான் செய்யேன்; எனக்கு நல்ல உபதேசம் செய்த ஒரு ஞானகுரு என்றே உம்மை உண்மையாக எண்ணுகிறேன்” என்று சொல்லி விரைந்து பறந்து போனான். தரும தேவதை இவன்மேல் அமுத மழை பெய்தது; உடல் சுகமாயது. தங்கள் துயரை நீக்கி யருளிய குலதெய்வம் என்று நாகர் இவனைப் போற்றி வந்தனர்.

தயாவீரன் என்று உலகம் புகழ இவன் ஒளிபெற்று நிற்கின்றான். பிறஉயிர்களுக்கு இரங்கி யருளுகின்றவன் பெரிய தருமவானாய் அரிய நிலையில் உயர்ந்து இருமையும் பெரு மகிமைகளை அடைகிறான். சீவ தயை தெய்வீக நிலையை அருளுகிறது.

சுகுணதாமன் பரிவு.

ஏம கூடத்தின் வடபால் ஓர் எரிமலையில் தீக்குழம்பு பொங்கி எழுந்தது. அதன் அருகேயிருந்த நகரவாசிகள் அஞ்சி அலமந்தனர். ஒரு முதியவள் மேல் வனதேவதையின் ஆவேசம் தோன்றியது. இந்நாட்டில் உள்ள அரிய ஒரு பொருளை அம்மலைக் குகையில் போட்டால் இந்த ஆபத்து அடங்கி விடும் என்றாள். அவ்வாறே முத்து, வைரம் முதலிய அரிய விலையுடைய பொருள்களைத் தெய்வம் தொழுது பெய்து வந்தனர்; அபாயம் அடங்கவில்லை;

அந்த அதிசயத்தைக் கேள்வியுற்று அத்தேசத்து அரசகுமாரன் ஆன சுகுணதாமன் குதிரை மேல் ஏறி விரைந்து வந்தான்; ஊராரிடம் நிலைமையை உசாவி அறிந்தான்: ’இந்நாட்டின் அரிய பொருள் நானே என்னைத்தான் எரிமலை பலி கேட்கிறது' என்று சொல்லி பரியை விரைந்து செலுத்தி எரியின் குகையில் பாய்ந்தான்; பாயவே தீயின் குழம்பு மாயமாய் மறைந்தது. அக்கருணை வீரனைத் தொழுது யாவரும் அதிசயமாய்த் துதி செய்தனர். எல்லா உயிர்களும் சுகமாய் வாழத் தன்னுயிரைத் தனியே ஈந்த புண்ணிய மூர்த்தி என்று விண்ணும் மண்ணும் புகழ விமல சோதியாய் அவன் விளங்கி நின்றான். அவனது சீவிய சரிதம் அமர மொழியில் ஒரு காவியமாய் அமைந்துள்ளது. அதிசய ஆண்மை அகிலமும் துதி செய்ய நின்றது.

நேரிசை வெண்பா

பற்றி எரியும் படுதீக் குகையுள்ளே
வெற்றி யுறுவீரன் வேகமாய் - உற்ற
பரியோடு பாய்ந்தானே பல்லுயிரும் வாழ
அரியோ சிவனோ அவன்.

நேரிசை வெண்பா

மன்னுயிரைப் பேணும் மகிமை யுடையவன்
இன்னுயிரைக் காணும் இயல்பினனாய்த் - தன்னுயிரை
மேலான பேரின்ப மெய்நிலையில் உய்க்கின்றான்
வாலாய மாக வனைந்து

இவனுடைய புகழ் இவ்வாறு எவ்வழியும் ஒளி பெற்றுள்ளது. சீவ தயாபரன் என இக்கோமகனைத் தேவரும் புகழ்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Oct-21, 8:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே