வாருங்கள் இளைஞர்களே..!
எதையேனும் கவிதையாய்
எழுதிவிடவேண்டும் என்று
எழுதுகோலும் தாளுமாய் நான்..
எழுதப்போவது எதைப்பற்றி
என்று யோசித்தபோது..
ஊழலுக்கு எதிராக கோடிகளின் செலவில்
நடைபெறும் உண்ணாவிரதங்கள் குறித்து
எழுதவும் எனக்கு மனமில்லை..!
கறுப்புப் பணத்தை வெளியே
கொண்டுவரக்கூறி,செலவுக்கணக்கைக்கூட
காட்டாத யாத்திரைகள் குறித்து
எழுதவும் எனக்கு மனமில்லை..!
நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும்
விலைவாசி,மக்களின் நுகரும் ஆசையை
குறைக்கவில்லை என்பதால் அதுபற்றி
எழுதவும் எனக்கு மனமில்லை..!
ரத்தமில்லாத யுத்தங்களாய்
நடக்கும் அரசியல், சுயநலமிகளின்
போர்க்களங்களாய் மாறிப்போனதை
எழுதவும் எனக்கு மனமில்லை..!
தூக்குக் கயிறை நிரந்தரமாக
தூக்கிலிடும் ஒரு சட்டத்தை
சாதிக்கமுடியாத அரசின் சாதனைகளை
எழுதவும் எனக்கு மனமில்லை..!
ஆனால்..நிஜவாழ்வின் கொடூரங்கள்
சுடும் மனதிலிருந்து என்னை
தனிமைப் படுத்திக்கொள்ள முடியாதபோது
எனது எழுதுகோலும் போர்வாளாய்
பரிணமிக்க வேண்டிய அவசியம் புரிகிறது.!
வாருங்கள் இளைஞர்களே.!
கவிதைகள் என்பது அழகியலைப்
பாட மட்டுமல்ல..,
வாழ்வின் அவலங்களை போக்கவும்தான்.!
தாய்க்கொரு துயரென்றால்
தவிக்கும் நெஞ்சில்
நம்தாய்நாடு மட்டும் வேறென்ற
நினைப்பெதற்கு..?
மக்களை பலவழிகளிலும்
மாக்களாய் மாற்றவே துடிக்கும்
அரசியல்வாதிகள்..
அவர்களை நியாயப்படுத்தும்
அரசுகள்..என அம்பலப்படுத்தவேண்டிய
விஷயங்கள் இங்கே ஆயிரமுண்டு..
மக்களின் நலனுக்காக வழிகாட்டவும்
எதிரானதை முடக்கி வைக்கவும்
நம்மைத் தவிர நாட்டு மக்களுக்கு
இங்கே யாருண்டு..?
துப்பாக்கிகள் மட்டுமே துணையாக,
கொத்துக் குண்டுகளை எதிர்கொண்டு
இன்றுவரை விடுதலைக்காக போராடும்
வீரத் தமிழினத்தின் விடுதலைக்கும்
குரல் கொடுப்போம்.!
வளர்ந்துவிட்ட நாடுகளாய்
வாய்கிழியப்பேசும் அரசுகள்
இன்றுவரை பட்டினிபோட்டுள்ள
எத்தியோப்பிய பஞ்சம் குறித்தும் பாடுவோம்.!
கலை,கலாச்சாரம்,மொழி,இனம்,எதிலும்
பொதுவான மதமாய் உலகம் முழுவதும்
பரவிவரும் தீவிரவாதம் ஒடுங்கி நடுங்கிட
நமது பேனா முனைகளிலிருந்து
புறப்படும் எழுத்துக்களை ஆயதங்களாய்
மாற்றும் கடமைகள் நமக்கு உண்டு
வாருங்கள் இளைஞர்களே..!