பாரதி கண்ணம்மா

தூரத்து வானொலியில், இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன் பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது. பாரதியின் எண்ண அலைகள் எங்கோ சென்று, பாடல் காதில் விழுந்தும் கவனத்தில் இல்லை. இது தப்பு இல்லையா? நான் செய்றது துரோகம். யாருக்காச்சும் தெரிஞ்சா என் நிலைமை என்ன? இன்னைக்குப் பேசி எப்படியாவது ஒரு முடிவு எடுக்கணும். அந்தக் காலைப்பொழுது பாரதிக்குத் தடுமாற்றமானது. சில தினங்களாய் குழப்பத்தில் தவித்த பாரதி இன்று கண்ணம்மாவை சந்திக்க காத்திருக்கும் நேரத்தில் தூறல் மழை ஆரம்பித்தது. இவர்கள் இப்படி தனிமையில் வீட்டில் சந்திப்பது சகஜம்தான். இன்று பாரதியின் வீடு.

பாரதி பதற்றத்துடன் காத்திருக்க, மதியத்துக்கு முன்பே கண்ணம்மா சற்று நனைந்தே வந்தாள். மெல்ல தூரிய மழைச்சாரல்கள் அவளின் மென்மையான உடலின்மீது முத்து மணியாய் மின்னியது. பால் நிறத்துக் கண்ணம்மா குளிரில் நின்றபடி வீட்டின் உள்ளே வந்தாள். பாரதி அன்புடன் கண்ணம்மாவை துவட்டிவிட்டு, சூடாக தேநீர் தயார் செய்து, இருவரும் ஒன்றாக அமர்ந்தனர். கடும்மழையின் இருட்டு சூழ்ந்தது, ஆனால் சிறுதுளிகள் மட்டும், முன்னேவந்து பூமிக்கு செய்தி சொல்லியது. கொஞ்சம் குளிர்ந்த காற்று, கையில் சூடான தேநீர், கக்கத்தில் பாரதியின் கண்ணம்மா. இதுதானே சொர்க்கமென்றாலும், அடைமழை இனிமேல்தான் வெளுத்துவாங்கப் போகிறது. உள்ளேயும், வெளியேயும்.

அப்போ இது தப்பு இல்லேனு சொல்றியா, கண்ணம்மா? பாரதியின் கேள்வி கண்ணம்மாவுக்கு எரிச்சல் ஊட்டியது. இப்போ நீ சண்ட போடத்தான் வரச்சொன்னியா? நான் பேசாம கிளம்பறேன். கண்ணம்மா, சின்ன கோவத்துடன் பாரதியை பார்த்தாள். இவர்களிடையே சின்ன சின்ன சண்டை ஊடல்கள் சகஜம்தான். பெண்களின் காதலில் ஊடலும்-கோவமும் சக்கரை-உப்பைப் போல, அது வாழ்வை இன்னும் ருசி படுத்தும். கண்ணம்மா சற்று உப்பை அதிகம் ருசிப்பவள்.

கோவப்படாதேடி, அமைதியா சொல்லு. எனக்கு ரெண்டு நாளா தூக்கமே இல்ல. பயமா வேற இருக்கு. அதான் உன்கிட்ட இன்னைக்கு பேசி முடிவு பன்னிரெனும்னு வரச் சொன்னேன். நம்ப தப்பு பன்றோமோனு தோணுது. பாரதி குற்ற உணற்சியில் தவிக்க, கண்ணம்மாவின் கண்களில் தண்ணீர் தேங்கின. அவள் எதிர்ப்பார்ப்பது பாரதியின் முழு கரிசன அன்பைத்தான். இருவரும் நெருக்கமான உறவில் இருந்து பிரிந்து, வெறும் நண்பர்களாக மட்டும் வாழ வேண்டும் என்ற பாரதியின் கோரிக்கை, அவள் மனதுக்கு பாரமானது.

இரண்டாவது குழந்தைக்குப்பின், கண்ணம்மாவின் கணவர் ஒரே அறையில் கூட படுப்பதில்லை. குழந்தை தூங்க இடம் வேண்டுமென்று, அவர் பக்கத்து அறையில் படுத்துக்கொள்வார். கண்ணம்மாவுக்குத் தெரியும், அது வெறும் காரணம்தான் என்று. தன் கணவருக்கு மீது கொண்டக் காதல் குறைந்ததுப் போல, காமமும் தீர்ந்தது என்று. குழந்தைகளை எண்ணி அவள் சகித்து வாழப் பழகிக்கொண்டாள். பாரதியின் நெருக்கமான அன்பு மட்டும்தான் அவளுக்கு ஒரே ஆதரவு. பாரதியின் வாழ்விலோ, திகட்டாத காதல், தீராத காமம் என்று நிறைந்தது இன்பம். காமதேவனே பொறாமை படும் அளவுக்கு தாம்பத்தியம் சிறத்தது. கண்ணம்மாவின் உறவு அதை இன்னும் நிறை வழிய செய்தது.

இப்போ உனக்கு என்ன பிடிக்கலையா? கண்ணம்மா கேட்டாள். காலேஜ் படிக்கும்போது நம்ப இத விட இன்னும் நெருக்கமாய் இருந்தோமே. இப்போ என்ன திடீர்னு? கண்ணம்மா எதிர்பார்ப்புடன் கேள்விகளை வைத்தாள். அவளுக்கு பாரதியின் உறவு, பூமியில் ஒரு சொர்கம். காமத்திலும், காதலிலும் பாரதி இந்திரனே போற்றும் திறமைசாலி. அடர்த்த மழை வெளியில் அதிகம் பெய்ய, காற்று திசைமாறி அழுதது. கண்ணம்மாவின் கண்ணில் இருந்தோ ஒருசில துளிகள், மழையை விட ஆழமாக விழுந்தது.

கண்ணம்மா, நீ என் உயிர். நான் உன்ன ரொம்ப காதலிக்கிறேன், ஆனா இந்த ரகசிய உறவுதான் என்ன தடுமாற செய்து. பாரதி கண்ணம்மாவை மெல்ல அனைத்துப்பிடித்து, அவள் கண்களைத் துடைத்து, நெத்தியில் ஒரு முத்தமிட்டு ஆறுதல் செய்யும் நேரத்தில் திடீரென்ற ஒரு சத்தம். மணிக்கூண்டில் இருந்து ஒரு சின்னக் குருவி பறந்து வந்து, ஒரு மணி என்றுக் கூவிச்சென்றது. சற்று நேரம் அமைதியாக அணைத்து இருந்த பிறகு, கண்ணம்மா அடுத்த அதிற்சியைக் கொடுத்தாள், எனக்கு வேற period தள்ளிபோகுது, கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. அடுத்தக் குழந்தை பெக்க என் உடம்பில் சத்து இல்ல. கண்ணம்மாவின் வாழ்வின் சோர்வு அவள் குரலில் தெரிந்தது.
கண்டிப்பா என்னாலயா இருக்காது. அது மட்டும் நிச்சயம். பாரதி சிரித்து மழுப்ப, கண்ணம்மா தலையை ஆட்டி, தெரியும் தெரியும் என்று புன்னகைத்தாள். பேசாம நீயே என்ன கல்யாணம் பண்ணி இருக்கலாம், உள்மனதின் ஆசையை கிண்டலாக கண்ணம்மா சொன்னாள். எனக்கும் ஆசைதாண்டி, என்ன பண்றது, நம்ம விதி இப்படி ஆச்சி. அடுத்த ஜென்மத்துல பார்த்துக்கலாம். பாரதியின் போலி ஆசை வார்த்தைகள் கண்ணம்மாவை வெக்கப்பட வைத்தது.

பெண்ணுக்கும் உணர்ச்சி உண்டு என்று எப்போதுதான் ஆண்களுக்குப் புரியுமோ? கண்ணம்மா சலித்தாள். ஆணுக்கும் மனம் உண்டு என்று, எப்போது பெண்ணுக்குப் புரியுதோ, அப்பொழுது ஆணுக்கும் பெண்ணின் உணர்ச்சி புரியும். பாரதியின் பதில் கண்ணம்மாவை ஆச்சரியப்பட செய்தது. ஆண் மனதை பெண் புரிஞ்சிக்கலேன்னு சொல்றியா இல்ல பெண்ணுக்குm உணர்ச்சி வருவது தப்புன்னு சொல்றியா? குழப்பத்தில் கண்ணம்மா பாரதியைக் கேட்டாள்.

பெண்ணுக்கும் காம உணர்ச்சி வருவது சகஜம்தான், அவள் கல் இல்லையே. அது தப்பும் இல்ல, ஆனா ஆண் மனசு பெண்ணை எப்போதும் திருப்திப் படுத்தனும்னு பெண்கள் எதிர்பாக்கறதுதான் தப்பு. பெண்ணின் காமம் எப்படி ரகசியமானதோ, அதைப்போலதான் ஆணின் மன உணற்சிகளும். வெளிப்படையா காட்டி சொல்லமாட்டாங்க. ஆண்கள் பெண்ணின் உணற்சியைப் புரிந்து ரொம்ப நாளாச்சி, ஆனால் ஆண்களுக்கு சீக்கிரம் சலிப்புத் தட்டும் தன்மை உண்டு. அதனால்தான், கொஞ்சக்காலம் கழித்து மனைவியினிடம் கூட ஆணுக்கு ஆசை குறையுது. பாரதியின் பதில் கண்ணம்மாவை அவள் கணவனை நினைக்கச் செய்தது.

சரி, நீ ஏன் இப்போ திடீர்னு நம்ம உறவை நிறுத்த சொல்ற? உனக்கும் நான் சலிச்சி போய்ட்டேனா? கண்ணம்மா பாரதியை சீண்டிக் கேள்வி கேட்டாள். நான் இந்த உறவை நிறுத்த சொல்லல, புரிஞ்சுக்கோ கண்ணம்மா. நான் நமக்குள்ள இருக்கற ரகசிய உறவைதான் வேண்டாம்னு சொல்றேன். நம்ம எப்போதும்போல நெருங்கிய நண்பர்களா இருக்கலாம். அன்னைக்கு உன் கணவர் என்ன பார்த்து, "நீங்க ரெண்டுபேரும் எப்போதும் ஒன்னாதான் இருக்கீங்க, ரொம்ப close னு எல்லாரும் சொல்றாங்க" னு சொன்னபோது, என் மனசு ஒரு நிமிஷம் அப்படியே நின்னுருச்சி தெரியுமா. நம்ம நெருக்கமா எடுத்த படத்தை எல்லாம் மொதல்ல அழிக்கனும். வர வர எனக்கு ரொம்ப பயமா இருக்கு கண்ணம்மா. பாரதி கொட்டித் தீர்த்ததை பார்த்த கண்ணம்மா ஆழ்ந்த சிந்தனையில் அமைதியாக அமர்ந்தாள்.
ஒரு வேல நம் குழந்தைகளுக்கு இது தெரிய வந்தா, நான் என்ன செய்வேன்னு தெரியல. எனக்கு ரெண்டு மகள்கள் வேற. பெண்பிள்ளைய வச்சிக்கிட்டு இப்படி பண்றது எனக்கு ரொம்ப தப்பு மாதிரி தெரியுது. என்ன மன்னிச்சிரு கண்ணம்மா. பாரதியின் குமுறல் கண்ணம்மாவை இன்னும் அமைதியாக்கியது.

வெளியில் மழை குறைந்தது, கையில் இருந்த தேநீரும் தீர்ந்தது, கண்ணம்மாவின் சிறு கண்ணீர்துளிகள் அவள் கண்மையையும் அழித்தது. மழைக்குப்பின் ஒரு அமைதி, காற்று தென்றலாக மாறியது. கண்ணம்மாவின் மனதிலும் ஒரு அமைதி. தேநீரின் சக்கரை அவளின் மனதையும் இனிப்பாக மாற்றியது போல. புயல் அடிப்பது கடலை கடப்பதற்கு அல்ல, கரையை கடப்பதற்கு. ரகசிய காதலுக்கும் உணர்வு ஒன்றுதானே. இருவரின் சிறு அணைப்பு அவர்களின் பிரிய மனமில்லா உறவின் ஆழத்தைக் காட்டியது.

சற்றுநேர அமைதிக்குப் பிறகு, கண்ணம்மா மெல்ல எழுந்து பாரதியையும் எழுப்பினாள். இறுக்கமாக பாரதியை அணைத்து பிடித்து உதட்டில் ஒரு முத்தம் தந்து, சரி இனிமே நம்ப வெறும் நண்பர்களா மட்டும் இருப்போம், நான் எதுவும் கேக்க மாட்டேன். சும்மா இருந்த என்ன, நீதான் ஆசைகாட்டி இத பழக்கம் ஆக்கிவிட்ட, இப்போ திருந்திட்டேனு சொல்ற. சரி, நான் உன்ன தொந்தரவு செய்ய மாட்டேன். கவல படாத. நீ எவ்ளோ நாள் நான் இல்லாம இருக்கேன்னு நான் பாக்கறேன், என்று சொல்லி ஒரு சின்ன அசட்டு புன்னகையோடு நடந்தாள் கண்ணம்மா. கண்ணாடியின் அருகில் சென்று, அவள் கூந்தலை சரிசெய்துக் கொண்டாள். கண்ணம்மாவின் புன்னகைக்கு பாரதிக்கு அர்த்தம் புரிந்தது. இருவரும் மௌனப் புன்னகையை பரிமாறிக் கொண்டனர்.

சரி மழை நின்றுச்சி. நான் கிளம்பறேன், எனக்கும் time ஆச்சி. அடுத்த வாட்டி coffee shop ல meet பண்ணலாம் fren. கண்ணம்மாவின் கிண்டல் பேச்சு பாரதியை சிரிக்க வைத்தது. ஒரு ஆழ்ந்த காதல் பார்வையோடு பாரதி கண்ணம்மாவைப் பார்த்து, நீ எப்போதும் எனக்கு special தான்டி என்று சொல்லி முடிக்கும் முன்னே, நெருக்கமாக இருந்த கண்ணம்மா பாரதியின் உதட்டின் மேலே ஒரு விரல் வைத்து, ஷ்ஷ்ஷ்ஷ் என்றாள். ஒன்னும் பேச வேணா, அப்பறம் நான் கிளம்ப முடியாது. நீ என்ன செய்வேன்னு தெரியும். கண்ணம்மா பாரதியை நன்றாக புரிந்து காதல் பேச்சை நிறுத்தினாள். சரி உன்கிட்ட sanitary pad இருக்கா? இருந்தா ஒன்னு கொடு, நான் கொண்டுவர மறந்துட்டேன். கண்ணம்மாவின் கோரிக்கையை பூர்த்தி seithu பாரதி அவளை வழியனுப்பி வைத்தாள். கண்ணம்மா மெல்ல அந்த ஈர மணலில் நடந்தாள், தூரமாக செல்லும் அவளை, பாரதியின் மனம் பின்சென்று அணைத்து நனைந்தது. அந்த இரு தோழிகள் கண்ணில் பிரிந்து காதலில் இணைந்தனர்.


பாரதி கண்ணம்மா..... காதலும் காமமும் பாலினம் அறியாது....

எழுதியவர் : விஜயன் கோபால் (21-Oct-21, 1:17 pm)
சேர்த்தது : kalai chelvam
Tanglish : baarathi kannamma
பார்வை : 320

மேலே