டாக்சி டிரைவர்

டாக்சி டிரைவர்

மனைவியின் நகை, பத்து வருசம் வேலைக்கு போய் சம்பாரிச்சு சேத்து வச்சிருந்த பணம் எல்லாத்தையும் வச்சு ஒரு “செகண்ட் சேல்ஸ்”ல ஒரு காரை வாங்கி வாடகை வண்டியா பதிவு பண்ணி எங்க ஏரியா “கார் ஸ்டேண்ட்ல” உட்கார்ந்து இரண்டு மூணு மாசம் இருக்கும். ஒரு நாள் காலை ஆறு அல்லது ஆறரை இருக்கலாம்

டாக்சி ரயில்வே ஸ்டேசன் வரைக்கும் வருமா?
தலையை நிமிர்த்தி பார்த்தேன், வயதான ஜோடி, வயது இருவருக்குமே சுமார் எழுபது வரை இருக்கலாம். கையில் ஒரு பை
இருநூற்று ஐம்பது ரூபாய் ஆகும்
தம்பி ரொம்ப அதிகமா கேக்கறே
பெட்ரோல் விக்கிற விலை தெரியுங்களா? இங்கிருந்து போக இருபது கிலோமீட்டருக்கு மேல ஆகும், திரும்பி சவாரி இல்லாமத்தான் வரணும்.
நான் சொல்ல சொல்ல பெரியவர் என்ன நினைத்தாரோ வண்டியை சுற்றி சுற்றி வந்தார்,.
கமலா வா இந்த காருலயே போகலாம், மனைவியை அழைத்தார்.
ஏங்க வாடகை அதிகமா கேக்கறாரு, இருநூற்றைம்பது ரூபாய் இவருக்கே கொடுத்துட்டா, ரொம்ப சிரமமாயிடும்.
பெரியவர் முகம் வாட்டமடைந்து விட்டது, என்ன கமலா ஆசையா கேக்கறேன், இந்த கார்லயே போலாமுன்னு வேண்டாங்கறேயே.
எனக்கு வேடிக்கையாக இருந்தது, பெரியவரின் கெஞ்சலும், வீட்டம்மாளின் வாடிய முகமும், பாவம் அவர்கள் பணத்தை பற்றி கவலைப்படுகிறார்கள். இந்த மனுசனோ கார் சவாரிக்கு ஆசைப்படுகிறார்.
இருவரும் பத்து நிமிடம் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள், என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, சரிப்பா கார் வேண்டாம், சொல்லிவிட்டு நகர எனக்கு பரிதாபமாக இருந்தது, சரி பரவாயில்லை, இரு நூறு ரூபாய் கொடுங்க போதும். ஐம்பதை குறைத்தேன்.
மீண்டும் பெரியவருக்கு முகம் மலர்ந்து தன் மனைவியின் முகத்தை பார்த்தார். ஐம்பதை குறைத்தது, இந்த அம்மாளின் முகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, என்றாலும் பரிதாபமாய் கணவன் முகத்தை பார்த்தவள் சரி ஏறுங்கோ அவருக்கு வழி விட்டு ஒதுங்கினாள்.
ஹூஹூம் நீ முதல்ல எறு, அப்புறம் நான், அவர் மனைவியின் முகத்தை பார்க்க, உங்களை திருத்தவே முடியாது முணங்கிக்கொண்டே உள்ளே ஏறி உட்கார்ந்தார்.
கார் ஓடிக்கொண்டிருந்தது, பெரியவர் திடீரென்று பெட்ரோல் கிலோ மீட்டருக்கு எவ்வளவு கிடைக்குது?
பத்து கிலோ மீட்டர்தான் கிடைக்குது, பதில் சொன்னேன்
வண்டி கிளட்ச் கொஞ்சம் வேலை செய்யணுமே, அவர் சொல்லவும், மனைவி கொஞ்சம் பேசாம வரமாட்டீங்களா? சத்தமாய் சொன்னாள்.
இல்லே, வண்டியில் கொஞ்சம் வேலை செஞ்சா சரியாயிடும்னுதான் சொன்னேன், அமைதியாகி விட்டார்.
எனக்கு சுவாரசியமாகிவிட்டது, ஐயா எங்க போறீங்க?
இவர் ஏதோ வாயை திறக்க முயற்சிக்க, மனைவி சட்டென்று “மகளை” பார்க்க போறோம்,இவர் மனைவியை முறைத்து பார்த்தது, எனக்கு முன்னால் இருந்த கண்ணாடியில் தெரிந்தது.
கொஞ்ச நேரம் அமைதி, மீண்டும் பெரியவர் இந்த கார் லிட்டருக்கு பன்னெண்டாவது கொடுக்கணும்,
இல்லைங்க பத்து தான் வருது, நான் மீண்டும் சொன்னேன்.
அந்த அம்மாள் தம்பி இவர் இப்படித்தான், காரை பத்தியே பேசிகிட்டு இருப்பார், நீங்க பதில் பேசாம போங்க..
எனக்கு சங்கடமாக இருந்தது, பாவம் மனுசன், என்று நினைத்துக்கொண்டேன்.
ரயில் நிலையம் அருகில் வண்டியை நிறுத்தி அவர்கள் இறங்குவதற்கு உதவி செய்தேன். அந்த அம்மாள் தன் கையில் வைத்திருந்த பைக்குள் கையை விட்டு துழாவி சிறு பர்ஸை எடுத்தவள் அதை திறந்தார். அதில் இரண்டு அல்லது மூன்று நூறு ரூபாய் நோட்டுக்கள் இருந்தது, இரண்டு நோட்டை எடுத்து கொடுத்தார்..
ரூபாய் நோட்டுக்கள் சுருட்டி வைத்திருந்ததால் கசங்கி சுருண்டு கிடந்தது. வாங்கி சட்டை பைக்குள் வைத்துக்கொண்டவன், அவர்கள் இருவரிடமும் நான் வேணா உங்களை ஸ்டேனுக்குள்ள கொண்டு போய் விடட்டுமா?
அந்த அம்மாள் படபடப்பாக வேண்டாம், வேண்டாம், நாங்க போயிக்கறோம், சொன்னது எனக்கு புதிராக இருந்தது,
அம்மா இதிலொண்ணும் எனக்கு கஷ்டமில்லை, நீங்க எந்த ஊருக்கு போறீங்க?நான் இரயில் ஏத்தி விட்டுட்டே போறேன்.
தம்பி வேண்டாம்,அம்மாளின் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க, தடுமாறினார்
பெரியவர் நான் சொல்றேன், எங்களுக்கு எங்க போறதுன்னு தெரியலை, இப்படியே ஏதோ ஒரு டிரெயின்ல ஏறி எங்கே இறக்கி விடறானோ, அங்க இறங்கி போயிக்கறோம்
மனசு துக்கமாகிவிட்டது.
ஐயா என்ன சொல்றீங்க?
அந்த அம்மாள், கண்களை துடைத்துக்கொண்டு தம்பி என் பையன் எங்களை வீட்டை விட்டு போக சொல்லிட்டான், எங்க போறதுன்னு தெரியாமத்தான் போயிட்டிருந்தோம். அப்ப இந்த காரை பார்த்தோம், இந்த கார் இவர் பத்து வருசமா வச்சிருந்த கார், தினமும் துடைச்சு, பத்திரமா வச்சுக்குவாரு. எங்க போறாத காலம், இந்த பையனை நம்பி காரு, தோட்டம் எல்லாத்தையும் வித்து ஆளாக்கின பின்னால. இப்ப எங்களை இங்க இருக்க கூடாதுன்னு விரட்டிட்டான். இவருதான் என் கார்ல ஒரே ஒரு தரம் ஏறி பாத்துக்கறேன்னு சொல்லி அடம் புடிச்சாரு, அவர் ஆசைப்பட்டதுனால இங்க கொண்டு வந்து இறக்க சொன்னோம். ரொம்ப நன்றி தம்பி நீங்க போங்க, நாங்க மறுபடி மகன் வீட்டுலயே போய் நிக்கறோம்.கையில காலுல விழுந்து மறுபடி அங்க இருக்கலாமுன்னு பாக்கறோம்.
வண்டி எனக்கு தெரிந்த ஆதரவற்ரோர் முதியோர் இல்லத்தை நோக்கி போய் கொண்டிருந்தது.பின்னால் அந்த தம்பதியர் உட்கார்ந்திருந்தனர்.
நானும் ஏழைதான் சார். இந்த வண்டியை நம்பித்தான் என் வாழ்க்கையும்! இருந்தாலும், அவங்க கிட்ட வாங்கின இருநூறு ரூபாய்க்கு அவங்களை எங்கயாவது பத்திரமா வாழறதுக்கு வழி பண்ணி கொடுத்துடணுமில்லையா?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (21-Oct-21, 11:31 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 146

மேலே