செத்து மடியுமுன் பாழே கழித்துப் படுதுயர்க்கே ஆளாகி வாழல் கொடிய வசை - இருப்பு, தருமதீபிகை 914
நேரிசை வெண்பா
செத்து மடியுமுன்னே சீவனுக்(கு) ஓருறுதி
ஒத்துணர்ந்து கொள்ளாமல் ஊனமாய் - நித்தமும்
பாழே கழித்துப் படுதுயர்க்கே ஆளாகி
வாழல் கொடிய வசை. 914
- இருப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உடல் அழிந்து ஒழியுமுன் உயிர்க்குறுதியை உரிமையுடன் அடைந்து கொள்ள வேண்டும்; அங்ஙனம் அடையாமல் நாளை வீணே கழித்து வெய்ய துயர்க்காளாகி வாழ்வது கொடிய வசையாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
ஆன்ம நலனை அடைவதே பிறவியின் மேன்மையான பலன்; விழுமிய அதனைப் பெறவில்லையானால் இழிவான பழியுடையதாய் வாழ்வு தாழ்வாம். மிருகம், பறவை முதலிய இழி பிறவிகளில் உயர்வான பலன்களையடைய முடியாது, அருமையான இந்த மனிதப் பிறவிதான் இருமை நிலைகளையும் தெளிவாயறிந்து எவ்வழியும் இனிது முயன்று எளிதே உய்தி பெற வுரியது.
அரிய வழியில் அடைந்தது அவலமாய் இழிந்து போகாதபடி செய்து கொள்வதே தெளிந்த ஞானமாம். பெறலரியது; இறல் எளியது எனப் பிறவி அமைந்துள்ளது. நீர் மேல் குமிழி, வானிடு வில் என மானிட வாழ்வைக் கூறுவது காவிய மரபு. நிலையாத வாழ்வில் நிலையானதை நேர்வது தலையாய பயன்.
பிறந்து வாழ்ந்து வருகிற ஒவ்வொரு பிராணியின் தலையிலும் சாவு தலைமையாய்ச் சார்ந்திருக்கிறது. அந்த முடிவு நேரு முன்னரே முடிவான பயனை அடைந்து கொள்ள வேண்டும்.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். 335 நிலையாமை
பேசமுடியாமல் நாவடங்கி விக்கிச் சிக்கிச் சாகுமுன்னமே உன்னுயிர்க்கு நல்லதைச் செய்து கொள்ளுக என வள்ளுவர் இவ்வாறு சீவர்களுக்குப் போதித்திருக்கிறார். இறந்து படுவோம் என்னும் உணர்ச்சி ஒருவனுக்குப் பிறந்த பயனை விரைந்து பெறச் செய்யுமாதலால் இறப்பு நிலை சிறப்பாய்க் குறித்து வந்தது. சாதலை உணர்வது ஆதலை அடைவதாம்.
சுடுகாடு மனிதனுக்கு மதிநலம் ஊட்டி முன்னெச்சரிக்கையாய் முடிவைக் காட்டுகிறது. அந்த உண்மையைக் கண்டு உணர்ந்தால் தனக்கு நன்மையை அவன் காண நேர்கின்றான். மயான வைராக்கியம் என்பது முதுமொழியாய் வந்துள்ளது. இறந்து பட்டுள்ள இழவுகளை விழியெதிரே விளக்கி மனிதனுக்கு ஒரு தெளிவை அது அருளி வருவதை இம்மொழியால் அறிந்து கொள்ளலாம். ஈம நினைவு சேம நலனை நேமமாய் அருளுகிறது.
நேரிசை ஆசிரியப்பா
களரி பரந்து கள்ளி போகிப்
பகலுங் கூவுங் கூகையொடு பேழ்வாய்
ஈம விளக்கிற் பேஎய் மகளிரொ
டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு
5.நெஞ்சமர் காதல ரழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீர் றவிப்ப
எல்லார் புறனுந் தான்கண் டுலகத்து
மன்பதைக் கெல்லாந் தானாய்த்
தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே. 356 புறநானூறு
ஒரு சுடுகாட்டை வரைந்து காட்டிக் கதையங் கண்ணனர் என்னும் சங்கப் புலவர் உலகத்துக்கு இங்ஙனம் உறுதிநலனை உணர்த்தியிருக்கிறார். உலகத்தில் பிறந்த மக்களுக்கெல்லாம் தான் ஒரு சிறந்த நிலையம் ஆகி எல்லாருடைய முடிவுகளையும் கண்டு தன் முடிவை யாரும் காணாதபடி அந்த மயானம் இருந்துள்ளது. களரி - காடு. ஈமவிளக்கு - பிணஞ்சுடு விறகில் பிறங்கிய தீ. ஆறறிவுடைய மனிதனே! ஓரறிவும் இல்லாத சுடுகாடும் உனக்குப் பேரறிவைக் காட்டியுள்ளது; அதன் உண்மை நிலையைக் கண்டு தெளிந்து நன்மையை நாடிக் கொள்ளுக. நீ பிணமாய் வீழுமுன் நல்ல மணமாய் உயருக; உயராமல் அயர்ந்து நின்றால் என்றும் கொடிய துயராம் எனக் கவி சுவையாய்க் குறித்துள்ளார்.
கலிநிலைத்துறை
(மா விளம் விளம் விளம் மா)
வெள்ளின் மாலையும் விரிந்தவெண் டலைகளுங் கரிந்த
கொள்ளி மலையுங் கொடிபடு கூறையு மகலும்
பள்ளி மாறிய பாடையு மெலும்புமே பரந்து
கள்ளி யாரிடைக் கலந்ததோர் தோற்றமுங் கடிதே. 30
காக்கை யார்ப்பன கழுதுதங் கிளையொடு கதறித்
தூக்க ளீர்ப்பன தொடர்ந்தபல் பிணங்களுந் தூங்கச்
சேக்கை கொள்வன செஞ்செவி யெருவையு மருவி
யாக்கை கொண்டவர்க் கணைதலுக் கரிதது பெரிதும். 31
- 1. தருமவுரைச் சுருக்கம், நீலகேசி
செத்த சவங்களுக்கு இடமான சுடுகாட்டை இவை வித்தக விநயமாய் விளக்கியுள்ளன. நீ சாகுமுன் உன் உயிர்க்கு ஆக வேண்டியதை விவேகமாய் ஆற்றிக் கொள்க என்னும் போதனைக் குறிப்புகள் இங்கே சாதனையோடு கூர்ந்து நோக்க வந்தன.
இறந்து போகவே பிறந்திருக்கின்ற மனிதன் இறப்பு நேருமுன் பிறப்பின் பயனைப் பெறுவது பெரிய கடமையாய் மருவியுளது. அதனை அடையவில்லையானால் அவனுடைய வாழ்வு மடமையாய் இழிந்து எவ்வழியும் வெய்ய துயரமாய் முடிகிறது.
நல்ல பழக்கங்களும், மேலான சிந்தனைகளும் மனிதனைப் புனிதனாக்கி உயர்த்துகின்றன. உள்ளம் நல்லதாய் உயர எல்லா மேன்மைகளும் எளிதே வருகின்றன. அவ்வரவால் பிறப்பும் இருப்பும் பெருமை மிகப்பெற்று இருமையும் இன்புறுகின்றன.