யாவும் நீ எதுவும் நீயே

யாவும் நீ எதுவும் நீயே
அகமும் நீ புறமும் நீயே
அன்பும் நீ பண்பும் நீயே
பணிவும் நீ துணிவும் நீயே
பரமேஸ்வரா...
எண்ணமும் நீ எல்லாமும் நீயே
வண்ணமும் நீ வளமும் நீயே
சொல்லும் நீ செயலும் நீயே
எழுத்தும் நீ ஏகாந்தமும் நீயே
சர்வேஸ்வரா...
மண்ணும் நீ மரமும் நீயே
மனமும் நீ குணமும் நீயே
பொறுமை நீ வெறுமையும் நீயே
தவிப்பு நீ தனிமையும் நீயே
தணிகேஸ்வரா...

இயற்கை நீ செயற்கையும் நீயே
இனிமை நீ இகழ்ச்சியும் நீயே
சிறுமை நீ பெருமையும் நீயே
சிரும் நீ பேரும் நீயே
சிதம்பரேஸ்வரா...

வெள்ளமும் நீ உள்ளமும் நீயே
கள்ளமும் நீ களிப்பும் நீயே
பள்ளமும் நீ பாதையும் நீயே
பக்தியும் நீ உக்தியும் நீயே
உமாமகேஸ்வரா....

உதவி நீ உயிரும் நீயே
பதவி நீ பாரும் நீயே (பார் -உலகம்)
செய்கை நீ பொய்கையும் நீயே
பொலிவு நீ பொதிகையும் நீயே
அரிகரனேஸ்வரா...

அன்னம் நீ அமிர்தமும் நீயே
கண்ணும் நீ கருத்தும் நீயே
உண்மை நீ உயர்வும் நீயே
உறுதி நீ மறதியும் நீயே
மாமலையீஸ்வரா...

கலக்கம் நீ கையிலையும் நீயே
ஏக்கம் நீ ஏற்றமும் நீயே
தயக்கம் நீ தைரியம் நீயே
மயக்கம் நீ மந்திரமும் நீயே
ஜோதீஸ்வரா...

எதிரும் நீ புதிரும் நீயே
பரிவும் நீ பாசமும் நீயே
தளர்ச்சி நீ நெகிழ்ச்சியும் நீயே
அயர்ச்சி நீ அஞ்சாமை நீயே
ஜெகதீஸ்வரா....

இன்மை நீ மறுமையும் நீயே
இன்னல் நீ இன்பமும் நீயே
கன்னல் நீ தணிகையும் நீயே
அண்ணல் நீ அகிலமும் நீயே
அருணேஸ்வரா...

அடி நீ முடியும் நீயே
அடிமுடி காணா ஜோதியும் நீயே
அபயமென அடிபணிந்தோரை
உபயமென காத்தருள்வாய்
கருணகிரீஸ்வரா....

விண்ணில் நீ மண்ணில் நான்
என்னில் நீ உன்னுள் நான் ஓர் துகளாய் உணர்ந்தேன் உலகில்..
அருள்வாய் அரனே...

எழுதியவர் : பாளை பாண்டி (31-Oct-21, 8:22 am)
பார்வை : 340

மேலே