முல்லை நிலம்

முல்லை பூத்து மணக்கும் முல்லை
இல்லை அந்த அழுகுக்கு எல்லை !
வில்லை எடுத்து வேட்டை ஆட
கல்லும் அங்கே ஆயுத மாகும் !

ஐந்திணை தன்னில் ஒருதிணை முல்லை
பைந்தமிழ் பகன்ற நிலத்தின் எல்லை
காடும் காடு சார்ந்த நிலமும்
கூடிக் கிடந்தால் அதுவே முல்லை !

மாடும் ஆடும் மேய்த்திட உதவும்
பாடு பட்டால் பலவும் கிட்டும் .
வேடன் என்றும் ஆயர் என்றும்
ஆடவர் தன்னை அழைப்பர் அங்கு !

தச்சன் செய்த சிறுதேர் தன்னை
இச்சை கொண்டே இழுப்பர் சிறுவர்
செம்மண் நிலத்தில் கிணற்றைத் தோண்டி
அம்மண் வாழும் மக்கள் பருகுவர்

காட்டைத் திருத்தி கார்மழைக் கண்டு
மாட்டைக் கட்டி மண்ணை உழுது
வரகினை விதைத்து விளைவதை விற்பர்
எஞ்சிய விளைவை பொருளுக்கு விற்று

கரவை மாட்டை வாங்கி வளர்த்து
செல்வமாய் கொண்டு செழிப்பினில் வாழ்வர்

ஆட்டை மேய்ப்பர் மாட்டை மேய்ப்பர்
ஆட்டுக் கிடையின் அருகினில் படுப்பார்
தாக்கிட வந்திடும் நரிகளை விரட்ட
தீக்கடைக் கோலில் தீயினைக் கொளுத்தி
நாக்கினைச் சுழற்றி சீழ்க்கை அடிப்பர்!

பறவை எழுமுன் எழுந்திடும் பெண்கள்
வரவைத் தேடி கூடை மோரைத்
தலையில் சுமந்து தளுக்குடன் நடந்து
ஊர்பல சென்று பொருளுக்கு விற்பர் !

பொருளுக்குப் பதிலாய் பொன்னைக் கொடுப்பினும்
மறுத்தே மகிழ்வர்! மனிதம் வளர்ப்பர் !
பால்தரும் பசுவை பார்த்தே வாங்கி
காலமும் அதனைப் பேணியே காப்பர் !

கால்நடை தனையே செல்வமாய் போற்றி
வாழ்க்கைத் தன்னை வளமுடன் வாழ்வர் !

மூங்கில் கூடை முறமும் பாயும்
ஆங்கு அவர்க்குத் தொழிலாய் ஆகும்!
கோரைப் பாயும் ஓலைப் பாயும்
முடைந்து விற்றே மகிழ்ந்து வாழ்வர் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (31-Oct-21, 1:34 pm)
பார்வை : 570

மேலே