நீர்பாய் மடையின்றி நீள்நெய்தல் வாடும் – நான்மணிக்கடிகை 42

இன்னிசை வெண்பா

போரின்றி 1வாடும் பொருநர்சீர்; கீழ்வீழ்ந்த
வேரின்றி வாடும் மரமெல்லாம்; - நீர்பாய்
மடையின்றி நீள்நெய்தல் வாடும்; படையின்றி
மன்னர்சீர் வாடி விடும் 42

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

போர்வீரரின் சிறப்பு போரில்லாவிடின் குன்றும்;

எல்லா மரங்களும் நிலத்துள் இறங்கிய வேர் அறுந்துவிடின் பட்டுப்போம்;

நீண்ட நெய்தல் மலர்கள் நீர்பாயும் மடையில் நீர் அற்று விட்டால் உலரும்;

அரசரது செல்வம் படையில்லாவிடின் அழிந்துபோம்.

கருத்து:

போரில்லாவிடின் வீரரின் சிறப்புக் கெடும்; வேரற்று விடின் மரங்கள் படும்; நீரற்றுவிடின் நெய்தல் உலரும்; படையில்லாவிடின் வேந்தனது சீர்மை அழியும்.

விளக்கவுரை:

மடை: நீரை நிறைத்து நிற்பது என்பது பொருள். மடையின்றி - மடைக்கண் நீரின்றி,

மன்னர்க்குச் சீரென்றது அவரது அரசாட்சிச் செல்வத்தையென்க.

பொருநர் சீர் என்பதையும் அவர்க்குரிய வீரச் சிறப்பென்றே யுரைத்துக்கொள்க.

மடை - வாய்க்கால்; குளமுமாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-21, 8:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

சிறந்த கட்டுரைகள்

மேலே