அரசியலும் நானும்

கட்சிக் கொடிகளை  மிகவும்
பிடிக்கும் எனக்கு
இருக்க இடமின்றி
உடுத்த ஆடையின்றி 
விரட்டப்படுகையில்
அவை ஒருவேளை
அரைநிர்வாணத்தை ஏதோவொரு வழிப்போக்கனுக்கு
மறைக்க கூடும்!!

அரசியல் திருவிழாக்களில்
மிகுந்த ஆர்வம் எனக்கு
ஏதோ சில வயதானவர்களுக்கு
ஒருவேளை உணவளிக்கும்
வேட்புமனு தாக்கல் வைபவத்தில்
அத்தனை மகிழ்ச்சி எனக்கு

ஆர்ப்பரிக்கும் அரசியல் ஊர்வலங்களில்
அத்தனை நாட்டம் எனக்கு
கொளுத்தும் வெயிலில்
கொளுத்திப் போடும்
சரவெடிகளின்  ஒலியில்
கோமாளியென  நாடக உடையை அணிந்து
ஊதிக்கொண்டும் மேளம் தட்டிக் கொண்டும் செல்லும்
எனது நான்கு சகோதரனுடைய
உழைப்புக்கு ஊதியம் அளிக்கப்படும் போது!!

பிரச்சார கோலாகலங்களில்
பித்தாகிப் போன குணம் எனக்கு
நூறுநாள் வேலையோடு ஒரு வேளை பிரியாணியை பரிசளித்து
என் சகோதரிகளின் முகத்தில்
மலர்ச்சியை அளிக்கும்போது!!

வாக்கெடுப்பு நாளென்பது
வாழ்க்கையின் வரமாகிப் போனது எனக்கு
வாழ்வைத் தேடி வெளியூர் சென்ற
தன் பிள்ளைகளை கண்ணார காண
வயோதிகருக்கு வாய்ப்பு அளிக்கும் போது??!!

கொண்டாட்டங்கள் ஓய்ந்து
குரல்வளையை பிடிக்கும் அந்த ஐந்தாண்டுக்கொருமுறை நடக்கும்
உற்சவங்களில் பின் உறக்கம் தொலைத்து
எம்மினம் தவிக்கப்போவதை
மறக்காமல் இருந்தாலும்
நானும் கொண்டாடுகிறேன்...
பின்வரும் திண்டாட்டங்களில்
கவனத்தை செலுத்த கவனமாய் மறுத்து...!!!
- இரா. மதிஒளி சரவணன்

எழுதியவர் : மதிஒளி (18-Nov-21, 7:44 pm)
சேர்த்தது : மதிஒளி சரவணன்
Tanglish : arasiyalum naanum
பார்வை : 2335

மேலே