வீரமுனை
வசந்த கால பனி போர்த்த
மெல்லிய பின்னிரவொன்றின்
தூக்கம் கலைத்து
அடங்கிப்போகிறது ஆட்காட்டியின் குரல்
சாளர இடுக்கின் வழியே
துப்பாக்கி கைகள் முகத்தில்
அடித்த மின் சூழின்
துயர வெளிச்சத்தில்
எஞ்சிய இரவு
ஒளிந்து கொள்கிறது.
நிலை அதிரத் தட்டும் சீருடை
கதவின் பின்னால் இரவை பற்றவைக்க சொல்லும் தருணத்தில்
உரசிய தீக்குச்சொன்று
குப்பி விளக்கை உயிர்ப்பிக்க
பயங்கள் மட்டுமே துணை இருக்க
கத்தியும் ஆண்மையும்
தங்களை கூர் பார்து நிமிர்த போது
இரத்த வேள்வியில்
உருக்குலைந்து கிடந்தது
தளிர் விட்ட
தலைமுறை ஒன்று.
வேள்வி முடிந்து
வீட்டுக்கு வைத்த தீ
தோற்றுப்போன விடியலுக்குள்
எரிந்து கொண்டிருந்தது
சாட்சிக்கு நின்ற இரவையும் சேர்த்து
பிணம் தின்ற கழுகும்
பாலூட்டிகளை
வேட்டையாடும் ஆந்தையும்
கூடு வைத்திருக்கும்
போதிமர கிளையின் கீழே
புத்தர் தியானித்துருப்பார்
ஞானத்தின் எச்சம் வேண்டி
கிழித்தெறிந்த பிள்ளையின்
இடுப்பில் இருந்த லாட
துண்டொன்று
கிணற்றில் ஆழ்ந்து கிடக்குறது
விடுதலை கனவோடு.