கரன்சியால் கற்பழிக்கப்பட்ட நகரம்

ஆள் அரவமற்ற சாலைகளை
உப்புநீர் முதலைகள்
ஆயாசமில்லாமல் புழங்கிக் கொண்டிருக்கின்றன..

மரணவாடையற்ற ஊரை நோக்கி..
பிளவுப்பட்ட மேகங்கள் நொண்டி நொண்டி நடந்து கொண்டிருக்கின்றன.

ஊதுதலை மரத்துப்போயிருந்த
அந்த ஆம்புலன்ஸில் மூன்று நாட்களாக
அல்லாடிக் கொண்டிருந்த
பிறழ் வொன்று இன்றைய திகதியில் பிறையைச் சேர்ந்து விட்டது..

உயர் மின் கோபுரங்களை ஒதுக்கி
தெருவிளக்கு கம்பங்களில் தனது ஒற்றைக் காலைத் தூக்கியபடி சிறுநீர் கழிக்கும்  நாய்களுக்கு எடுக்கப்பட்ட மாதிரிகள்  களவு போயிருக்கின்றன ...

அருகாமையில் மயானத்தின் உள்ளே விடாது எரியும் சடலங்களின்
சாம்பல் புகைகளை சேமித்து கொண்டிருக்கும் வெட்டியானின் நுரையீரல்...

ஈரல் வேண்டுமென அவசர அவசரமாய் இறைச்சிக் கடையை தேடி ஓடிக்கொண்டிருக்கிறான் குடல்சுருங்கிப்போன யுவனொருவன்

உருமாறுதல்களில் உருப்படியாக கல்லாக்கட்டிய அந்த தங்க ப்ரேம் கண்ணாடிக்காரர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்
மனிதம் துளைக்காத சுவர்களுக்குள்ளே....

அவர் வீட்டு வாசலின் வெளியே  காத்திருக்கும்  மரணத்திற்கு
மரபணு மாற்றம் செய்து சோதனை முயற்சிக்காக காத்திருக்கிறது
மூன்றாம் அலை!

நம்புங்கள் இது வாழ்க்கை நிரந்தரமில்லை என்று ஒத்து ஊதுவதற்கான பதிவல்ல...!
- மதிஒளி சரவணன்

எழுதியவர் : மதிஒளி சரவணன் (20-Nov-21, 12:54 pm)
சேர்த்தது : மதிஒளி சரவணன்
பார்வை : 597

மேலே