எடுத்த உடம்பிதை நீக்கி ஒழித்தோர் உடம்பை இடம்பெற நிற்றல் இறப்பு - இறப்பு, தருமதீபிகை 922

நேரிசை வெண்பா

உடுத்த உடையை ஒதுக்கி அயலே
அடுத்த உடையணியும் ஆறே - எடுத்த
உடம்பிதை நீக்கி ஒழித்தோர் உடம்பை
இடம்பெற நிற்றல் இறப்பு. 922

- இறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உடுத்தியிருந்த ஆடையைக் களைந்து நீக்கி வேறு ஒரு உடையைப் புனைந்து கொள்வது போல் எடுத்த உடம்பை இழந்து அடுத்த ஓர் உடலை அடைந்து கொள்வதே இறப்பாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இறப்பு இன்ன நிலையது என்பதை இது உணர்த்துகிறது.

உயிர் உடலை எடுத்து வந்துள்ளது. அந்த உடல் உடையை உடுத்தி நிற்கிறது. தான் அணிந்த ஆடையை அது மாறி மாறிக் களைந்து விடுகிறது; அது போலவே உயிரும் உடலை நீக்கிவிட்டு அயலே ஒன்றை மருவிக் கொள்கிறது. இயல்பாய் நிகழும் இந்த நீக்கத்தையே இறப்பு என்று நாம் குறித்து வருகிறோம். இறத்தல் என்னும் சொல் கடத்தல், கழிதல், முடிதல் என்னும் பொருள்களை'யுடையது. முடிவு தெரிவது விடிவு தெளிவதாம்.

பிறந்தன யாவும் இறந்து படுதல் இயற்கை நியமமாய்த் தொடர்ந்து வந்துள்ளது. தோன்றியபடியே நீண்டு நில்லாமல் சிலகாலம் மட்டும் நின்று பின்பு தோன்றாமல் எல்லாம் தொலைந்து போதலால் பிறவிகள் மாயத் தோற்றங்கள் என நேர்ந்தன. தோன்றலும் மறைதலும் தொடர்ந்து நிகழ்கின்றன.

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன
செயல்கொண் டிருப்ப னமுதல்
தேகங்கள் அத்தனையும் மோகங்கொள் பெளதிகம்
சென்மித்த ஆங்கி றக்கும். - தாயுமானவர்

உடலோடு தோன்றிய உயிரினங்கள் யாவும் பிறந்தபடியே இறந்துபோகும் எனத் தாயுமானவர் இவ்வாறு இறப்பு நிலையை விளக்கியிருக்கிறார். பிராணிகளுள் மனிதன் மாத்திரம் மரணத்தை எதிரே உணர்ந்திருத்தலால் அதனை எண்ணுந்தோறும் நெஞ்சம் அஞ்ச நேர்ந்தான்.

சாவுக்கு அஞ்சுதல் விவேகமற்ற செயல். சாவு ஒருவனுக்கு எப்பொழுது நேருமோ அப்பொழுதுதான் வரும்: அதற்குமுன் யாதும் அணுகாது; அது நேர்ந்தபோது யாராலும் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது; இந்த முடிவை முடிவாக அறிந்தவர் இறப்பை நினைந்து யாதும் வருந்தார்.

நேரிசை வெண்பா

சாரும்போ தன்றிநமன் சாரான்; தருபோகம்
நேரும்போ தன்றிவொன்றும் நேராதே - ஓரும்
உணர்வுடையார் யாதுறினும் உள்ளஞ்சார்; அஞ்சும்
உணர்வில் ஒருவன் உளம்.

தெளிந்த மேதைகள் சாவுக்கு அஞ்சார்; இழிந்த பேதைகளே அதற்கு அஞ்சுவர் என்று நெஞ்சு தெளிய இது குறித்தளது.

நேரிசை வெண்பா

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல். 13 நல்வழி

யாவும் ஊழின்படியே நேரும்; சாவை யாரும் தடுக்க முடியாது என ஒளவையார் இவ்வாறு குறித்திருக்கிறார்.

உறக்கமும் விழிப்பும் எவ்வாறு இயற்கையாய் நிகழ்கின்றனவோ அவ்வாறே இறப்பும் பிறப்பும் இயல்பாய்த் தொடர்ந்து தோன்றுகின்றன. நிகழ்ச்சிகள் எவ்வழியும் நியமங்களுடையன.

It is as natural to man to die, as to be born. (Васon)

பிறப்பது போலவே இறப்பதும் மனிதனுக்கு இயல்பாயுளது என்னும் இது இங்கு உயர்வாய் நன்கு உணர வுரியது.

உடல் தோன்றி மறைவதையே பிறப்பு, இறப்பு என உலகம் கூறி வருகிறது. உயிர் என்றும் அழியாதது; யாண்டும் அழியாத உயிர்க்கு எவ்வழியும் அழிகின்ற உடல் கூடாய் அமைகிறது. உடுத்த உடை அழுக்காய்க் கிழிதல்போல் அடுத்த உடல் கிழமாய் அழிகிறது. இந்த அழிவில் சிந்தை தளர்கிறது.

குழவி, பிள்ளை, பாலன், காளை, குமரன், கிழவன் என நிகழ்வன யாவும் இளமை கழிந்த இழவுகளேயாம். இளமை கழிவதும் மூப்பு வருவதும் சாவின் தனியான அடையாளங்களாம்.

பழைய ஆடை கிழிந்து போனால் புதிய ஆடை வருவது போல் மூத்த முதிர்ந்த உடல் இறந்து போனால் பின்பு இளமையான புதியவுடல் வளமையாய்ப் பிறந்து வருகிறது.

உயிர்க்கு உரிய இவ்வுடலில் இளமை, வாலிபம், மூப்பு தோன்றுதல் போல் தேகமும் நீங்கி வேறு ஒரு பிறப்பு உண்டாகிறது; இவ்வுண்மையை உணரும் தீரன் சாவில் யாதும் கலங்க மாட்டான் எனக் கண்ணன் விசயனிடம் கூறியுள்ளார். இறப்புக்கு அஞ்சாமையே சிறப்பான ஞானமாம்.

எடுத்த உடல் இறந்து படுமுன் எய்திய பிறவிப் பயனை அடைந்து கொள்ள வேண்டும்; அவ்வாறு அடைந்தவன் உயர்ந்து போகிறான்; அடையாதவன் கடையாயிழிந்து படுகிறான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

குழவியாய்ப் பாலன் ஆகிக்
..குமரனாய் வளர்ந்து மூத்துக்
கிழவனாய்த் தளர்ந்து நொந்து
..கிளையழச் சாக நேர்ந்தாய்!
அழகிதுன் வாழ்வை நோக்கி
..ஆருயிர்க்(கு) அமுதை ஆக்கிப்
பழகிய பிறவி நீங்கிப்
..பரகதி படரு வாயே.

தன்னை வந்து வணங்கிய ஒரு முதியவனை நோக்கி ஒரு முனிவன் கூறிய இவ்விழுமிய மொழியைக் கூர்ந்து ஓர்ந்து கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-21, 2:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே