அழியாத இன்பத்தைக் கருதி அடைந்தான் துயரம் ஒருவி எழுந்தான் - சிறப்பு, தருமதீபிகை 932

நேரிசை வெண்பா

பொன்றும் உடம்பு புகையாகு முன்னரே
என்றும் அழியாத இன்பத்தை - நன்று
கருதி அடைந்தான் கடுந்துயரம் எல்லாம்
ஒருவி எழுந்தான் உயர்ந்து. 932

- சிறப்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இறந்துபடும் உடம்பு எரிந்து புகை ஆகு முன்னமே என்றும் அழியாத சிறந்த நிலையை உணர்ந்து அடைக; அவ்வாறு அடையின் அல்லல் எல்லாம் நீங்கி உயர்ந்தாய் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அழியும் புலையையும் அழியாத ஆனந்த நிலையையும் விழி தெரிய விளக்கி விழுமிய வழியை இது நன்கு துலக்கியுள்ளது.

உடம்பு என்னும் சொல் உயிரோடு உடன்பிறந்து வந்தது என்னும் பொருளையுடையது; உடைந்து போகும் நிலையது என்பதையும் இது உணர்த்தி நின்றது. உயிர்க்கு நிலையமாய் உரிமை தோய்ந்து ஒன்றாய் நின்று வரினும் இடையே பிரிந்து அழிந்து போவதாதலால் பொன்றும் என ஒர் அடையை ஒன்றி வந்தது.

உயிர் நீங்கிய உடனே உடல் சவம் ஆகிறது; சாவை அடைந்ததாதலால் சவம் என நேர்ந்தது. இது வெளியே கிடந்தால் அழுகி நாறி உயிரினங்களுக்குத் துயர்களை விளைக்கும்; அவ்வாறு விளையாதபடி இதனை மண்ணில் புதைத்து மறைக்கின்றனர்; அல்லது நெருப்பில் இட்டு எரித்து நீறாக்கி விடுகின்றனர்.

பேரும் சீரும் பெருமையும் பெற்று ஆடையும் அணியும் சாந்தும் தோய்ந்து வாழ்ந்து வந்த உடல் நீறும் புகையுமாய் மாறி மறைகிறது. இந்த உடலுள் மருவியிருந்த உயிர் எங்கே போயது? யாரும் யாதும் தெரிய முடியாத அதிசய மருமமாய் அது அமைந்துள்ளது. சீவ இயக்கம் தெரிய அரிய நிலையில் மருவி வரினும் சீரிய சீவியம் தெய்வீகமாய்த் திகழ்கின்றது.

உடலோடு கூடி வாழுங்கால் உயிர் நன்மைகள் புரிந்திருந்தால் முடிவில் இன்ப உலகத்தை அடைகிறது; தீமைகள் செய்திருந்தால் துன்ப நிலையங்களைச் சேர்கிறது; இரண்டும் கலந்திருந்தால் இன்ப துன்பங்கள் நிறைந்த இந்த உலகத்திற்கு வருகிறது. இது கரும காண்டத்தின் நீணட முடிவாய் நிலைத்து நிற்கிறது. காரண காரியங்கள் பூரணமாய்க் கருதி யுணர வந்தன.

செய்த வினைகளின்படியே தேகங்களை எடுத்துப் போகங்களை நுகர்ந்து சீவர்கள் திரிந்து வருவது விரிந்த வியப்புகளை விளைத்து வாழ்வுகளின் சூழ்வுகளை வளமாய் விளக்கி வருகிறது.

பலவகையான உடல்களை மருவி அளவிடலரிய பிறவிகளில் ஓயாமல் உழந்து எவ்வழியும் பெருந் துயரங்களையே நுகர்ந்து வருதலால் பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுவது உயிரின் தாகமாய் ஓங்கி நின்றது. துக்கங்களால் பக்குவங்கள் படிகின்றன.

பொல்லாத ஆசைகளாலேயே புலையான பிறவிகள் பொங்கி வந்துள்ளன. அடர்ந்து படர்ந்து தொடர்ந்து மூண்டுள்ள அல்லல்கள் அறவே ஒழிய வேண்டுமானால் முதலில் அவாவை அடியோடு ஒழிக்க வேண்டும். நீண்டு படர்ந்து நெடிதோங்கியுள்ள மரம் நிலையாய் நிலைத்து நிற்பது மூலவேரின் பலத்தினாலேயாம்; அந்த அடிவேர் அழிந்தால் நெடிய மரம் விரைந்து வீழ்ந்துவிடும்; அதுபோல் ஆசை ஒழியின் பிறவி அப்பொழுதே நாசமாய் அழிந்து போகவே ஏகமான இன்பமாகும்.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும். 367 அவாவறுத்தல்

ஆசையை அறவே ஒருவன் அறுத்து ஒழித்தால் பின்பு அவன் கருதியபடி எல்லாம் உறுதி நலங்கள் பெருகி உயர் பேரின்பம் ஓங்கி வரும் என வள்ளுவர் இங்ஙனம் உணர்த்தியுள்ளார். இனிய சுகங்களே வேண்டும் என்று யாண்டும் எண்ணி வருகிற சீவர்கள் கொடிய துக்கங்களை அடைவதற்குக் காரணம் இங்கே பக்குவமாய்க் காட்டப்பட்டுள்ளது. காட்சியைக் கண்டு தெளிந்து மாட்சியை மருவிக்கொள்ள வேண்டும்.

உற்ற உடல் அழிந்து ஒழியுமுன் உயிர்க்குறுதியைப் பெற்றவனே பிறவிக் கடலைக் கடந்தவனாகிறான். யாதொரு அல்லலும் நேராமல் ஆன்மாவை மேன்மையாகப் பாதுகாத்துக் கொள்வதே நல்ல ஞானமாம். அந்த ஞானமே ஊனமான ஈன நிலைகளை உணர்த்தி உண்மையான பேரின்ப நலன்களைப் பெறச் செய்கிறது. தூய ஒளியால் மாய இருள் மறைகிறது.

உடம்பின் இழிவையும் உயிரின் உயர்வையும் பிறவித் துயரையும் தெளிவாய்த் தெரிய நேர்ந்தவன் எவ்வழியும் செவ்வையாய் இனிது முயன்று அரிய கதிகளை அடைய நேர்கின்றான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-21, 2:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே