இன்னா நாற்பது - ஓர் அறிமுகம்

நாற்பது என்னும் எண்தொகையால் குறிக்கப் பெறும் நான்கு நூல்கள் கீழ்க்கணக்கில் உள்ளன. அவற்றுள் கார்நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் என்னும் பொருள் பற்றிப் பாடப்பெற்றவை.

இன்னா நாற்பதும் இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ் இரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலுங்கூட, 'இன்னா', 'இனிதே'என்னும் சொற்கள் அமைந்துள்ளன.

இந்நூலுக்கு உரை எழுதிய உரைகாரர் இன்னா நாற்பதை முதலில் கூறி, அதன் பெயர்க்கு விளக்கம் கூறுதலின், இது இனியவை நாற்பதிற்கு முன்னர்த் தோன்றியது என்று கருதலாம்.

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள். ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளைக்கொண்டு நான்மணிக்கடிகையைப் போன்று இந் நூல் அமைந்த போதிலும், ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின், இது 'இன்னா நாற்பது' என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது.

சிற் சில பொருள்களை இவ்வாசிரியர் மீண்டும் எடுத்துக் கூறுதல் அந்த அறங்களை வலியுறுத்தி உணர்த்துதற் பொருட்டேயாதல் வேண்டும்.

இந் நூலை இயற்றியவர் கபில தேவர்.

தமிழுலகில் கபிலர் என்ற பெயருடையார் பலர் உள்ளனர். இவர்களில் முக்கியமாக ஐவரைக் குறிப்பிடலாம்.

முதலாமவராகக் கூறத்தக்கவர் சங்க காலத்தில் பாரிக்கு உற்ற நண்பராய் விளங்கிய அந்தணராகிய கபிலர்.

இவருக்குப்பின் கூறத்தக்கவர் இன்னா நாற்பது செய்த பிற்சான்றோராகிய கபிலர்.

அடுத்து, பதினோராந் திருமுறையில் வரும் கபிலதேவ நாயனார் என்பவரைக் குறிக்கலாம்.

பன்னிருபாட்டியல் என்னும் இலக்கண நூலில் கபிலர் பெயரால் அமைந்த சூத்திரங்கள் உள்ளன.

'கபிலர் அகவல்' என்னும் நூலை இயற்றிய கபிலர் ஒருவரும் உள்ளனர்.

இவர்களுள் பன்னிருபாட்டியலில் குறிக்கப் பெறுபவரையும், இன்னா நாற்பது செய்தவரையும் மொழியின் இயல்பைக் கொண்டு ஒருவராகத் துணியலாம் என்பர் சிலர்.

மேற் குறித்த ஒவ்வொருவரும் புகுந்துள்ள துறை வேறு வேறாக இருத்தலையும், அந்நூல்களின் காலம் குறித்து வெவ்வேறு கருத்துகள் ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுவதையும் பார்க்கும் பொழுது, ஐவரும் கபிலர் என்ற பெயரில் வேறு வேறு காலத்தில் வாழ்ந்த புலவர் எனக்கொள்வதே தகும்.

இன்னா நாற்பதின் ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால், இவர் சமயப் பொது நோக்கு உடையார் என்று எண்ண இடமுண்டு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-21, 10:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 436

சிறந்த கட்டுரைகள்

மேலே