ஞாபக மறதி
அதென்னமோ தெரியல்லே, எனக்கு ஞாபக மறதின்னா ஞாபகம் வரது absent minded professor தான். ஞாபக மறதி குறித்து ஏகப்பட்ட ஜோக்குகள் நமக்கெல்லாம் தெரியும்.
ஆனா இதெல்லாம் சமயத்துலே ஞாபகம் வராது..
ஞாபக சக்திங்கிறது ஒரு வரம்தான். சில பேருக்குத்தான் அந்த வரம் வாய்ச்சிருக்கு. எனக்குத்தெரிஞ்ச ஒரு அம்மாவுக்கு 1945 லே அவங்க செஞ்ச அவியல், அதை சாப்பிட்டவங்க எத்தனைபேர், யார்யார் அந்த அவியலைப்பத்தி என்ன என்ன சொன்னாங்க, எப்படி ஒருத்தர் அதிலே ஒரு முத்தலான கொத்தவரங்காய் கிடைச்சது போன்ற விவரங்களை நேத்து நடந்த மாதிரி சொல்வாங்க, நீங்க கேட்கலாம் அவங்க சொல்றது நிஜங்கிறதை எப்படி நம்பறதுன்னு, உங்களுக்கு அவங்களைப் பத்தித்தெரியாது. அதனாலேதான் அப்படிப்பேசறீங்க. நான் எப்படி நம்பறேன்னா ஒரு 5 வருஷத்துக்கு முன்னாடியும் இதையே கரெக்டா சொன்னாங்க. தப்பா சொல்லியிருந்தா அதே மாதிரி மறுபடியம் அத்தனை வருஷம் கழிச்சி அப்படியே சொல்லி இருக்க முடியுமா?
என் அப்பாவுக்கு என்ஸ்கூல் பேர், அதாவது ஸ்கூல்லே என்பேரு, அஃபிஷியல் பேரு மறந்தது உண்மையிலேயே ஒரு ஆச்சரியம்தான். அப்படித்தான் ஒரு நாள் என் ஸ்கூல் கிளாஸ் மேட் என் வீட்டுக்கு வந்து என்பேரைச்சொல்லி நான் இருக்கேனான்னு கேட்ட போது, அங்கே இருந்த என் அப்பா, அப்படி யாரும் இந்த வீட்டிலே கிடையாதுன்னு சொன்னார்.( என்க்கு வீட்டிலே ஒரு பேர், வெளியிலே, அதாவது ஸ்கூல், ஆபீசு மாதிரி வெளி இடங்களிலே முதல் பேருக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இன்னொரு பேரு- அது என்னன்னு தெரிஞ்சிக்கணுமா? தெரிஞ்சிகிட்டு என்ன பண்ணப்போறீங்க? ) நான் அப்போ வீட்டுக்குள்ளேதான் இருந்தேன். நான் வெளியே ஓடி வந்து “நான் இருக்கேன்” னு சொல்லி என்ஃப்ரெண்டோட பேச ஆரம்பித்தேன். அப்போ அப்பா என் அம்மாவிடம் இவனுக்கு இந்தப்பெயர் யார் வைத்தது என்று கேட்டார். இத்தனைக்கும் அப்போதைய என் S.S.L.C. புத்தகத்துலே முதல் பக்கத்துலே அந்த என்பெயர் கொட்டை கொட்டையாக எழுதியிருந்த அந்தப்பக்கத்ததிலே கையெழுத்துப்போட்டவர் என் அப்பாதான். என் அப்பாவின் ஞாபக சக்தியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். அதைப் பத்தி அதிகம் விளக்கத் தேவையில்லை என்று நம்புகிறேன்.
சாதாரணமா பல பேருக்கு பழைய விஷயங்களெல்லாம் நல்லா நினைவு இருக்கும். ஆனா நேத்து நடந்தது நினைவு இருக்காது. நான் தினமும் டைரி எழுதற வழக்கம் உண்டு. அது ஒரு மாதிரியான ஞாபக சக்திப் பயிற்சி, எக்சசைஸ். எனக்கு நேத்து காலையிலே என்ன பிரேக்.ஃபாஸ்ட் சாப்பிட்டேங்கறது நினைவுக்கே வராது. அவ்வளவு தூரம் போவானேன். இன்னிக்கு மத்தியானம் என்ன சாப்பிட்டேன்னு தெரியாது. அப்படி ஒரு ஞாபக சக்தி. யார்கிட்டேயாவது சொன்னா, உங்க வயசுக்கு நீங்க உங்க பேரை ஞாபகம் வெச்சிக்கிட்டு இருக்கிறதே பெரிய விஷயம்னு கிண்டலடிக்கிறாங்க.
ஆனால் இதை எல்லாம் தூக்கி அடிக்கிற அளவுக்கு ஒரு மறதி மன்னனை எனக்குத்தெரியும். அவர் எனக்குத் தெரிஞ்ச புரொபசர்,பேர் என்னன்னு மறந்து போச்சு, அவருக்கு ஞாபகமறதி ரொம்பவே அதிகம். அப்படி இருக்கும் போது காலேஜூலே பெரிய படிப்பெல்லாம் படிச்சி, டாக்டர் பட்டம் வாங்கி இத்தனை வருஷம் டீச்சிங்கிலே இருந்து புரொபசராகி ரிட்டையரும் ஆயிட்டார்னா எனக்கு ஆச்சரியமாத்தான் இருக்கு. இவருக்கு எப்பவுமே ஞாபக மறதி இருந்து இருக்க முடியாது. படிப்பெல்லாம் முடிச்சி வேலையிலே சேந்தப்புறம்தான் இவருக்கு ஞாபக மறதி வர ஆரம்பிச்சி இருக்கணும். அல்லது இவருக்குக்கல்யாணம் ஆன பிற்பாடு பெண்டாட்டி கிட்டே இருந்து தப்பிக்க மறதியை பிராக்டிஸ் பண்ணி இருக்கணும்.
இவர்பேரு மறந்து போச்சுன்னு சொன்னேனா? மகாதேவன்னு வெச்சிப்போம். ஏன்னா அவரை எல்லாரும் இப்ப மறதி மகாதேவன்னுதான் கூப்பிடறாங்க. இவரோட மனைவி இவ்வளவு மறதி மன்னனோடே எப்படி வாழ்ந்து குப்பை கொட்டினாங்கன்னே தெரியல்லே.அதைப்பத்தி நாம தெரிஞ்சிகிட்டா. நாளைக்கு நம்மளையும் பாத்து நாலு பேர் சிரிக்காத மாதிரி நாம நடந்துக்கலாம் பாருங்க. நல்லவங்க கிட்டே இருந்து நாலு கத்துகிட்டா, முட்டாள் கிட்டே இருந்து 30 கத்துக்கலாம்.
இவர் , யார் இந்த இவர், மறந்து போச்சே, ஓ இப்ப ஞாபகம் வந்துடுச்சு, இவர்தான் மறதி மகாதேவன். அவங்க வீட்டு அம்மா, அதாவது இவரோட வொய்ஃப், வெளியிலே போய் ஏதாவது பொருள் வாங்கணும்னா, இவருக்கு ஒரு துண்டுக்கடுதாசியில் தனக்கு வேண்டியதை எழுதிக் கொடுத்து விடுவார். ஒரு சமயம் அரை கிலோ வெல்லத்தையும், கால்கிலோ மிளகாயையும், 100 கிராம் கடுகையும் வாங்கி வரச்சொன்னா, இவர் அத்திரிபாக் கதையா வழியிலே யாரோ ஃப்ரண்டை மீட் பண்ணி பேசினதுலே என்ன வாங்கணுங்கிறதையே மறந்து போய் கடுகு 1 கிலோ, மிளகு ஒரு கிலோ, வெள்ளரிக்காய் ஒரு கிலோன்னு என்ன தோணிச்சோ அதை வாங்கிட்டு வந்துட்டார். ஒரு கிலோ கடுகைப் பாத்த உடனே அந்த அம்மா கடுகு வெடிக்கிற மாதிரி வெடிச்சித்தள்ளிட்டாங்க.
“இவ்வளவு கடுகை வெச்சி நான் என்ன பண்றதுன்னு நெனச்சீங்க? நான் கடுகு வியாபாரமா பண்ணப்போறேன். இனிமேல் இது தீரற வரையிலும் உங்களுக்குக் கடுகு சாதந்தான்” னு சொல்லிட்டாங்க. இவர் வெடிச்ச கடகு அடங்கற மாதிரி கப்புனு அடங்கிட்டார்.எழுதிக்கொடுத்தும் அந்த சீட்டு தன் பையிலே இருந்ததை மறந்து தொலைச்சதனாலே.
இந்த மாதிரி தப்புத்தப்பா வாங்கறது இது முதல்தரம் இல்லை. அஞ்சாந்தரம். அதுலே இருந்து ஒரு ஐடெமா இருந்தாலும் இவர்வொய்ஃப் இவரை கடைக்கு அனுப்பறதுக்கு முன்னாடி ஒரு சிட்லே என்ன வேணுங்கறதை எழுதிக் கொடுத்துடுவாங்க.
ராஜா ராணிங்கிற பழைய படத்துலை N.S.கிருஷ்ணன் மேடையிலை பேசப்பயந்து பேசவேண்டிய பேச்சை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி வைத்துக்கொண்டு அப்படி எழுதி பையிலே வெச்சிருந்த சீட்டை எடுத்துப் படிக்க ஆரம்பிச்ச உடனே கூடியிருந்த ஜனங்கள் எல்லாம் ஒரேயடியா சிரிக்க ஆரம பிச்சுடுவாங்க. ஏன்னா அவர் மேடையிலே பேசறதுக்கான சீட்டை மாத்தி பையிலே இருந்த லாண்டரிச்சீட்டைப்படிச்சதுதான் காரணம். அதே மாதிரி மகாதேவனும் அவங்க எழுதித்தந்த சீட்டை மறந்து, தன்பையிலிருந்த வேறே ஒரு சீட்டைஎடுத்துப் பாத்து, மளிகைக் கடைக் குப்பதிலா லாண்டரிக்கடைக்குப்போய், லாண்டரிவாலா கிட்டே போய்க்கேக்க , அந்த லாண்டரி ஓணர்
“ சீட்டை சரியாப் பாரு சார். இது அடுத்த வாரம்தான் கிடைக்கும். டேட் போட்டிருக்கில்லே. அதைப் பாக்காம என்கிட்டே வந்து ஏன் என் உசுரை வாங்கறே?சாவு கிராக்கி” அப்படின்னு மெர்ராஸுக்கே ்ஸ்பெஷலான வார்த்தையால அவரை அர்ச்சனை பண்ணி ஒரு வாங்கு வாங்கின உடனே இவருக்கு ஒண்ணும் புரியல்லை.
வீட்டுக்குப போய் பெண்டாட்டி கிட்டே கம்ப்ளெயின் பண்ண அவர்
“நான் சொன்னது என்ன, நீங்க செஞ்சது என்ன? மளிகைக் கடைக்குப் போகாம லாண்டரிக்கடைக்கு உங்களை யார் போகச்சொன்னது?”
என்று எகிற இவர் பேந்தப்பேந்த விழிக்க அந்த அம்மா இவர் சட்டைப்பையைத் துழாவி தான் எழுதிக்கொடுத்த சீட்டைக்காண்பிச்சி,
“ இது தான் நான் எழுதிக்கொடுத்த சீட். இதை மறந்துட்டு லாண்டரி ரசீதை உங்களை யார் உங்க பையிலே வெச்சிக்கச்சொன்னா?” என்று கூறி
அன்று முதல் தான் சீட் எழுதிக்கொடுத்து அவர் சட்டைப்பையில் இருக்கிற வேறே சீட்டுகளை எல்லாம் வெளியே எடுத்து, ஒண்ணுக்கு ரெண்டு தரமா விஷயத்தை விளக்கி அவரை கடைக்கு அனுப்பற வழக்கம் வந்தது.
********
அதேபோல ஒரு நாள் இவர் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயி இவரோட வொய்ஃப். ஒரு துண்டுச்சீட்டிலே எழுதிக் கொடுத்த ஐடத்தையெல்லாம் ஒரு ட்ராலியிலை எடுத்துப் போட்டுக்கொண்டு அதுக்கான கௌண்டர்லே போய் பில்லை எல்லாம் பேயோ, பிசாசோ பண்ணிட்டு வீட்டுக்கு எடுத்துட்டுப் போனார். போனா அந்த சாமான்களைப்பாத்த அவர் மனைவி, பேர் தெரியல்லே, சரோஜான்னு வெச்சிப்போமே, அவங்க ஆடின ஆட்டம் இருக்கே அதை என்னாலேயே மறக்க முடியாதுன்னா பாத்துக்குங்களேன். ஏன்னா, அவர் கொண்டு வந்த ஐடம்ஸ் ஒண்ணு கூட ரோஜா அம்மா எழுதிக்கொடுத்தது கிடையாது. வேறே யாரோ வாங்கின ஐடங்களா இருக்கு, டாய்லட் பேப்பர், சானிடரி நாப்கின், பேஸ் பௌடர் இப்படி இவருக்கு சம்பந்தமில்லாத இவர்வொய்ஃப் எழுதித்தராத விஷயங்கள் அத்தனையும். உடனே மேடம் அதை எல்லாம் கொண்டுபோய் கடையிலே திருப்பிக்கொடுத்துட்டு வரச்சொல்ல, வேறே வழியில்லாம லொங்கு லொங்குன்னு மறுபடியும் கடைக்குக்கொண்டு போய் ரிடர்ன் பண்ண அந்த மார்க்கெட்சேல்ஸ் மேனேஜர் இவரைக் காய்ச்சு காய்ச்சுன்னு காச்சி,
“நீங்க பாட்ட யாரோ எடுத்து வெச்சிருந்த சாமான்கள் டிராலியை எல்லாம் எடுத்துட்டுப் போயிட்டீங்கன்னு சொன்னா பரவா இல்லையே, கடத்திகிட்டு போயிட்டீங்க”ன்னு ஒரு குண்டைத்தூக்கி இவர் தலையில் போட்டார், பிறகு தொடர்ந்து “ . அந்த கஸ்டமர் அவரோட ட்ராலியைத்தேடோ தேடுன்னு தேடி மறுபடியும் அவருக்கு வேண்டியதை எல்லாம் பொறுக்கிப்போட்டுக்கிட்டு, “எந்த யூஸ்லெஸ் ஃபெலோவோ நான் முக்கால்மணிநேரமா தேடித்தேடி எடுத்து வெச்சிருந்த என் ட்ராலி சாமானையும் தூக்கிக்கிட்டு போயிட்டானே. இதனாலே எனக்கு எவ்வளவு டைம் வேஸ்ட் ஆயிட்டுது தெரியுமா”ன்னு உங்களை அரைமணி நேரம் திட்டித்தீர்த்தார். அவர் ஒரு கம்பெனி மானேஜராம். அவர் கம்பெனியிலே யாராவது கொஞ்சம் லேட்டா வந்தா கூட அவர் லேடஸ்ட் துர்வாசரா மாறிடுவாராம். அப்படி ஒரு டைம்கான்சியஸ் அதிகாரி அவர். அவரோட ப்ரஷஸ் டைம் வேஸ்ட் ஆச்சுன்னா விட்டுடுவாரா? அவர் சூப்பர் மார்க்கெட் மானேஜரை காச்சு காச்சுன்னு காச்சி நஷ்ட ஈடு வழக்கு போடப்போறதாக மிரட்டிட்டுப் போறார்.
“தென்ன மரத்துலே தேள் கொட்டினா பனமரத்துக்கு நெறி ஏறுற சமாச்சாரமா, நீங்க செஞ்ச தப்புக்கு நான் பதில் சொல்ல வேண்டியதா ஆயிட்டுது. ஏன்சார் நீங்க கவனமா பாத்து உங்க பொருள்களை எடுத்துட்டுப் போகமாட்டீங்களா? உங்களாலே அந்த கஸ்டமருக்கு எவ்வளவு கஷ்டம், ஏன் சார் இப்படி செய்யறீங்க? அவர் வழக்குப்போட்டு கோர்ட் நஷ்ட ஈடு கட்டணும்னு தீர்ப்பு கொடுத்ததுன்னாஅந்த நஷ்ட ஈட்டை நீங்கதான் தரணும்” என்று அவர் கத்த, அப்போது அங்கு வந்தவர் ஒருவர்
“சார், இவர் ஆர்ட்ஸ்காலேஜுலே புரபசர். அவருக்கு ஞாபக மறதி ஜாஸ்தி. அவரை மன்னிச்சுடுங்க” என்று சொல்லி அவருக்கு சப்போர்டுக்கு வரவே மேனேஜரும்
“ “சாரி. சார் இவர் புரபசரா? அது தெரியாம பேசிட்டேன். மன்னிச்சுடுங்க. இருந்தாலும் இன்னொரு கஸ்டமருக்கு சங்கடம் வரக்கூடாதில்லையா? புரொபசர்னாலே இப்படித்தான் இருப்பாங்களா? ” என்று எங்கேயோ அக்கடான்னு இருக்கிற அத்தனை புரொபசர்களையும் சதாய்ச்சார்.
அவருக்குத்தெரியல்லே. இந்த மாதிரி சில புரொபசர்கள் ரோடுலே நடந்து போய்க்கிட்டு இருக்கும்போதே ஸ்டூடன்ட கேட்ட கேள்விக்கு என்ன பதில சொல்லலாங்கிறதை எதிரிலை வர பஸ்ஸைக்கூடக் கவனிக்காம யோசிச்சிக்கிட்டு இருக்கும்போது அந்த பஸ் டிரைவர் “சாவு கிராக்கி. உன் உசிர விட வேறு இடம் கெட்க்கலையா?”ன்னு திட்டறவரையிலும் போய்க்கிட்டே இருப்பாங்க டிரைவர் சொன்னதை காதுலே வாங்கிக்காமலே.
புரபசரும் தனக்காகப்பரிந்து பேசியவரிடம்
“ ரொம்ப தேங்ஸ், உங்களை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே” என்று சொல்ல, அந்த மனிதர்
“ நான்தான் பத்து வருஷமா உங்க பக்கத்துவீட்டுலே இருக்கிற பரசுராமன்” என்றார்.
மேனேஜரும் விஷயத்தைப புரிந்துகொண்டு
“சரி சார், இனி மேலாவது கொஞ்சம்ஜாக்கிரதையா இருங்க சார். எதுக்கும் உங்க மறதிக்கு நீங்க ஒரு நல்ல டாக்டரைப் பாருங்க” என்று சொல்லி, அவரை அனுப்பினார்.
இவரைப் பற்றித்தெரிந்தவர் சொன்ன விஷயங்களைக்கேட்டால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள் .
ஒருநாள் இவர் புரபசர் ஆறதுக்குமுன்னாடியே இவர் பையன் LKG படிக்கும் போது அவனை ஸ்கூலிலிருந்து இவர் போய் அழைத்து வரவேண்டி இருந்தது. அப்போது இவர் ஸ்கூலுக்குப்போய் அங்கிருந்த ஒரு பையனைத் தூக்க, அவன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண, “கட்டாயம் இவ்வளவு ஆர்பாட்டம் பண்றவன் என்பையனாகத்தான் இருக்கணும்”னு உறுதியா தீர்மானிச்சி , அவனை அப்படியே ஆட்டோவில் அலாக்காக தூக்கி போட்டு வீட்டிற்கு தூக்கி வந்தார். அவன் வீட்டுக்குள் வராமல் அடம்பிடித்து அழ, அங்கு வந்த அவர்மனைவியிடம் இவர் கம்ப்ளெயிண்ட் செய்தார்.
“நீ வளத்தது சரியா இல்லே. இவன் ஏன் இப்படி அடம் பிடிக்கிறான்னே தெரியல்லே. அப்பவே பிடிச்சி ஒரே அழுகையா அழுது அடம் பிடிச்சி வரமாட்டேன்னு கத்திகிட்டு இருக்கான். ரெண்டு வெச்சேன்” என்றார்.
அவர் மனைவியோ “ என்னங்க நீங்க யார் குழந்தையையோ கடத்திக்கிட்டு வந்துட்டதும் இல்லாம அந்தக்குழந்தையை அடிச்சி வேறே அடிச்சி இருக்கீங்க. இவன்நம்ம பையனே இல்லை. இந்த லட்சணத்துலே நான் வளத்தது சரியா இல்லேன்னு எங்கிட்டேயே புகார்வேறே. இந்த குழந்தையோட அப்பா, அம்மாவுக்கு நீங்க அடிச்சது மாத்திரம் தெரிஞ்சா பெரிய ரகளையாயிடும்” என்று சொல்லி
“சரி நீங்கள் இவனை அழாமல்(!) பார்த்துக்கொள்ளுங்கள். முதல்லே நம்ம பையன் ஸ்கூல்லே எனக்காக காத்து காத்து, நான் வராம அழுதிட்டு இருப்பான். நான் உடனே ஸ்கூலுக்குப்போய் அவனை அழைச்சுகிட்டு வரேன்”
என்று ஸ்கூலுக்குப்போய் ரொம்ப நேரமாக அழுதுகொண்டிருந்த தன்மகனை சமாதானப்படுத்த, ஸ்கூல் வாட்ச்மேன்
“ஏம்மா இவ்வளவு லேட் பண்ணிட்டீங்க. பாவம். உங்க பையன் துடியா துடிச்சிப்போயிட்டான். இனிமேல் இவ்வளவு டிலே பண்ணாம காலாகாலத்துலே வந்து அழச்சுட்டுப்போங்க” என்ற அவன் அட்வைசை கேட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்து ஓவென்று அலறிக் கொண்டிருந்த அப்பா கண்காணிப்பில இருந்த அந்த இன்னொரு வீட்டுப் பையனிடம் சாக்லேட் கொடுத்து சமாதானப்படுத்தி விவரம் கேட்டு “ வீட்டிலே சொல்லாதே. அவர் அடிச்சதா. அப்படின்னா, உனக்கு நான் ரெண்டு கேட்பரீஸ் சாக்லேட் வாங்கித்தருவேன்னு சொன்னதுதான்தாமதம, கையிலே நாறு ரூபாய் திணிக்கப்பட்ட ஆபீஸ் பாய்போல அவன் அடங்கிட்டான், ஒரு விதமாக அவன்சமாதானம் ஆக அவனை அவன் ஒரிஜினல் அம்மாவிடம் இந்த டூப்ளிகேட் அம்மா ஒப்படைத்தாள்.
வீட்டுக்கு வந்து “உங்க கிட்டே சொன்ன பாவத்துக்கு ஒருவேலைக்கு எனக்கு ரெண்டு வேலையா வெச்சுட்டீங்க. பாவம். உங்க கிட்டே படிக்கிற பசங்க”.என்று பரிதாபப்பட்ட அனுபவத்தை அந்தத்தெருவே மறந்து இருக்காது.
ஒரு நாள் இவர் மறந்துபோய்தன் காலேஜூக்குப்போறதுக்குப்பதிலா வேறே காலேஜுக்குப்போய் எல்லாம் மாறி இருக்கே என்று பேந்தப்பேந்த விழித்தார். அங்கே ஒரு லேடி இவரைப்பார்த்து என்ன வேண்டும் என்று கேட்க இவர் “என்ன காலேஜே ரொம்பவும் மாறிப்போச்சே?” என்று நிற்க, அதற்குள் இவருக்குத் தெரிந்த வேறு ஒரு லேடி இவரைப்பார்த்து “சார், எங்கே இந்தக் காலேஜுக்கு வந்தீங்க?” என்று கேட்க
“இவர் இது எந்தக்காலேஜ்” என்று விசாரித்தார்.
“இது விமன்ஸ் ஆர்ட்ஸ் காலேஜ்” என்று அந்த அம்மையார் சொல்ல
“சாரி, சாரி” என்று அசடு வழிய இது தன் மனைவிக்குத்தெரிஞ்சா கடுகு சாதம்தான் இன்னிக்குக்கிடைக்கும்னு மனசுக்குள்ளே நெனச்சுகிட்டு தன்காலேஜைத் தேடிக்கிட்டு கிளம்பினார்.
இவர்காலேஜூலேயே ஒரு நாள் இவர் தப்பான கிளாசுக்குள் நுழஞ்சி ட்ரிகனாமெட்ரி டீச் பண்ண ஆரம்பிக்க, அங்கிருந்த மாணவர்களெல்லாம் “சார் இப்ப எங்களுக்கு இங்கிலீஷ் கிளாஸ் சார்” என கோரசாக சொல்ல இவருக்கு நிலைமை புரிய கொஞ்ச நேரம் ஆச்சு. அதனாலென்ன? டுரிகினாமெட்ரியையும் இங்கிலீஷ்லே தானே டீச் பண்ணப் போறேன் என்று மேடையிலே நிக்க, மாணவர்கள் பரீட்சையன்று முழிப்பதைப்போல என்ன செய்வதென்று தெரியாமல் திரு திரு வென்று முழிக்க, நல்லவேளையாக அந்த இங்கிலீஷ் லெக்சரர் வந்துவிடவே, மாணவர்,இங்கிலீஷ், ட்ரிகனோமெட்ரி எல்லாம் தப்பியது. “ஐ ஆம் சாரின்னு” சொல்லி அடுத்த ரூமுக்குப்போய் கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார். தர்மத்தின்தலைவன் ரஜினி ஞாபக மறதி ஆசிரியரா நடிப்பார் பாருங்க, அவர்கூட இவரைப்பார்த்துத்தான் நடிக்கக்கத்துக்கிட்டாரோ என்னவோ?
ஒரு சமயம் இவர் நண்பரைப் பார்க்க சைதாப்பேட்ட போனவர் அவருடைய நண்பனின் அட்ரஸை எங்கேயோ கோட்டை விட்டு விட்டார். அப்போதெல்லாம் செல்போன் கிடையாது. நண்பனின் போன் நம்பரும் அட்ரஸோடு காணாமற் போய்விட்டது. எப்படித்தான் அவனைக்கண்டுபிடிப்பது? காரணீசுவரர் கோயில் அருகில் வீடு என்று நண்பன் சொன்ன ஞாபகம். அங்கே போனால் முதல் தெருவா, ரெண்டாவது தெருவா என்று யாரைப்பார்த்தாலும் கேட்கிறார்கள். சரி என்று அந்தக் கோவிலைச் சுற்றியிருந்த அத்தனை தெருக்களிலும் இருந்த அத்தனை வீடுகளிலும் வீடு வீடாய் ஏறி இறங்கி விசாரிக்க ஆரம்பித்தார். “வீட்டு நம்பர் சொல்லுங்க” என்று பார்த்தவர்கள் எல்லோரும் சொன்னார்களே ஒழிய யாரும் வேறு எந்தத்தகவலையும் தரவில்லை. இவர் வீடுவீடாக ஏறி இறங்குவதைக்கவனித்த ஒரு அந்த ஏரியா உண்மை விளம்பி இதற்கு வழக்கம்போல் கண்காது மூக்கு எல்லாம் வைத்து தனக்குத்தெரிந்தவர்களிடமெல்லாம் ஒரு இன்கம் டாக்ஸ் ஆபீசர் ரகசியமாக வீடு வீடா ஏறி ஏதோ தகவல் தயாரிக்கிறார். “இந்த ஏரியாவிலே யாரோ கள்ளப்பணம் அடிப்பதாக புகார் வந்ததாம். ஜாக்கிரதை” என்று கிளப்பி விட்டார். எனவே பல வீடுகள் இவர் வருகையைப்பார்த்து கதவை மூடிக்கொண்டன. கதவைத்தட்டிப் பார்த்தும் திறப்பாரில்லை. இவர் நல்ல நேரம் அந்த நேரம் பார்த்து இவர் நண்பர் இவரை எதிர்பாராத விதமாக பார்த்து தன்வீட்டிற்குக் கூப்பிட்டுக் கொண்டு போனாரோ இவர் தப்பினார். அந்தத் தெருவில் இருந்த மற்றவர்களும் தப்பினார்கள்.
ஒருநாள் இவர் காலேஜில் தன்தனி அறையில் இருந்த போது இவருக்குக்கீழ் வேலை செய்யும் ஆசிரியர் ஒருவருடன் பாட சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்தார். ஒரு கால்மணி நேரம்ஆனது. அவர் அறைக்கதவை யாரோ மெல்லத்தட்டினார்கள். இவர் அசைந்து கொடுக்கவில்லை. கதவைத்தட்டியவர் கதவை இலேசாக திறந்து பார்த்து மறுபடியும் மூடினார். புரபசர் இதை்க் கவனித்தாரா இல்லையா என்று தெரியவில்லை. மறுபடியும் கதவை லேசாகத் திறந்து பார்த்து வெளியே இருந்தவர் மூடினார். இப்படி நாலைந்து தரம் அவர் செய்தும் புரபசர் கண்டு கொள்ளவே இல்லை. “யாரோ ஒருவர் உங்களைப்பார்க்க விரும்புகிறார் போலும், இதுவரையில் மூன்று நான்கு முறை கதவைத்திறதந்து மூடி இருக்கிறார்கள்” என்று அங்கிருந்த ஆசிரியர் சொல்லவும், புரபசரோ “ வெயிட் பண்ணட்டும். “ஆபீஸ் நேரத்துலே யார், வந்து நம்மை இப்படி டிஸ்டர்ப் பண்றது?” என்று சொன்னார். இப்படி அரை மணிக்குமேலாக இது தொடர்ந்தது. வந்தவரும் பொறுமை இழந்து கதவை பெரிதாகத்திறந்து “ சாரி ஃபார் டிஸ்டர்பிங் யூ” என்ற படியே உள்ளே நுழைந்தார்
புரொபசர் மகாதேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. “அடேடே, வாங்க மாமா, வாங்க மாமா, நீங்களா இத்தனை நேரமும் வெளியிலே காத்திருந்தது. நீங்க உடனே உள்ளே வந்திருக்கலாமே “ என்று அவரை உள்ளே கூப்பிட்டு அவரை ஒரு சேரில் உக்காரச்சொல்லி “ சாரி அங்கிள், சாரி” என்று அந்த சாரியை அரை டஜன் தடவை சொல்லி அவரை உட்கார வைத்துவிட்டு புறபட இருந்த பேசிக்கொண்டிருந்த ஆசிரியரையும்( அதாவது என்னையும்) உட்காரச்சொல்லி அவரிடம்” இவர்தான் என் அங்கிள்” என்று இன்ட்ரொட்யூஸ் பண்ணினார். வந்த அங்கிளும் நெளி நெளிந்து என்னவோ சொல்ல வந்தார். ஆனால் நம்ம பரொபசர் அவரை பேசவிடவில்லை.
புரபசர் “ நான் அங்கிளைப் பார்த்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. அதனால் சட்டென்று அடையாளம் தெரியவில்லை” என்று கூறி மறுபடியும் “சாரி, சாரி” என்று கூற, வந்த அங்கிள் சும்மா இருக்கக்கூடாதா?
”. என்பையன் அட்மிஷன் விஷயமாக உங்களைப்பார்க்கலாம் என்று வந்தேன்” என்றார்“ “என்ன அங்கிள்? . உங்களுக்குக்காலேஜுலே படிக்கிற வயசுலே பையன் இருக்கிறானா? எனக்குத்தெரியாதே. .நம்ம சொந்தக்காரங்க யாரும் இதை இதுவரையில் என்னிடம் இதை சொல்லவில்லையே. ஆமாம் பெரிய அங்கிள் ராமசாமி போன மாசம் தவறிட்டதாக கேள்விப்பட்டேன். இங்கே அட்மிஷன் டயம் ஆனதால் என்னால் போகமுடியலை.” என்றுசொன்னார். அதற்கு அந்த அங்கிள் உடலை நெளித்து முகத்தை சுளித்து பரிதாபமாக “ நான் உங்க அங்கிள் இல்லை” என்று சொல்லவே புரொபசர் முகம் ஒரு மாதிரி ஆகி எதிரில் இருந்த என்னிடம் “ நான் என் அங்கிளைப்பார்த்து பத்து வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. அதனால் அவர் முகம் மறந்து விட்டது. ஆனால் இவர் என் அங்கிள் ஜாடையிலேயே இருக்கார்” என்று ஒரு விதமாக சமாளிக்க,நானும, “சரி நீங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருங்கள். நான் புறப்படுகிறேன்” என்று வெளியே வந்து விழுந்து விழுந்து சிரித்தேன்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இவர் நண்பர்கள் இவரை ஒரு ஞாபக மறதியைப் போக்க நல்ல டாக்டராகப் பார்க்கச்சொன்னார்கள். இவர் மனைவியோ
“நானும் இதை எத்தனை நாளாக உங்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீங்க கேக்க மாட்டேங்கிறீங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் இத்தனை பேரும் சொன்ன பிறகாவது நீங்க நல்ல டாக்டராப்போய்ப்பாருங்க.” என்றார்.
இவர் டாக்டர்ரைப் பார்ப்பது என்று தீர்மானித்து அடுத்த தெருவில் இருந்த ஒரு பாலிகிளினிக்கில் டாக்டரைப் பார்க்கப்போனார். அங்கு வெகு நேரம் காத்திருந்து இவர் டர்ன் வரவே டாக்டரின் சேம்பருக்குள் நுழைந்தார்.
“என்ன உங்க ப்ராப்ளம்?” என்று கேட்டார் டாக்டர்
எந்த ப்ராப்ளம்? என்றார் இவர் கணக்கு புரொபசர் ஆனதால்.
உங்களுக்கு என்ன கோளாறு? என்று கேட்டார் டாக்டர்.
என்று கொஞ்சம் யோசித்து “டாக்டர் எனக்கு எனக்கு எனக்கு என்ன கோளாறு? என்றார் புரொபசர்
“எதற்காக என்னைப் பாக்க வந்தீங்க? “
“ஓ! அதுவா, அது என்ன சொல்வாங்க, ஊம், ஞாபக மறதி ஜாஸ்தி”
அதுக்கு நீங்க டாக்டர் ரமணனைப்பாக்கணும். நான் ENT ஸ்பெஷலிஸ்டு. அடுத்த சேம்பர்லே அவர் இருக்கார் அவரைப் போய்ப்பாருங்க என்றார்.
மறுபடியும் அந்த சேம்பரில் அரை மணி நேரத்துக்குமேல் வெயிட்டிங். பிறகு
டாக்டர் ரமணனைப்பார்த்தார். அவர் அவருடைய நாடி, இதயத்துடிப்பு, BP எல்லாவற்றையும் செக் செய்து விட்டு உங்கள் தலையில் பலமாக அடி கிடி ஏதாவது பட்டதா என்று கேட்டார். ஞாபகம் இல்லை என்றார். கூட யார் வந்திருக்கிறார்கள்? என்றார். யாரும் இல்லை என்றவுடன் “நீங்கள் கல்யாணம் ஆனவர்தானே”. என்றார். ஆமாம் என்றார் புரொபசர். “இதையாவது மறக்காமல் இருக்கீங்களே. அப்படியானால் உங்க வொய்ஃபை கூட்டிக்கிட்டு வாங்க நாளைக்கு” என்றார்.
மறுநாள் புரொபசர் தன் மனைவியுடன் வந்தார்.
டாக்டர்சார், இவருக்கு ஞாபக மறதி ரொம்ப ஜாஸ்தியாப்போச்சு. பெரிய காம்ப்ளிகேட்ட் ஈக்வேஷனை எல்லாம் ஞாபகம்பிசகாம சொல்ற இவர் என்பர்த் டேயை இந்தப்பத்து வருஷத்துலே ஒரு நாளாவது ஞாபகம் வச்சிருப்பாரா? கிடையாது
பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மறக்கறதுலே இவரை அடிச்சிக்க ஆளே கிடையாது. அதே பத்து வருஷத்துக,கு முன்னே செத்த இவர் புரண,டுக்கு, வருஷா வருஷம் பிறந்த நாள் வீழ்த்து சொல்றதை மறக்கிறதே கிடையாது, எவ்வளவு சொன்னாலும் எனக்கு ஞாபகம் இருக்கு என்பார்.
மூக்குக்கண்ணாடியை தலைக்குமேலே தூக்கி வச்சிக்கிட்டு மூக்குக்கண்ணடியைத் தேடறது பழைய ஜோக். இவர் கண்ணாடியை சரியாப்போட்டுக்கிட்டே அதைத்தேடிக்கிட்டு இருப்பாரு. நல்ல வேளையா ரஜினி தர்மத்தின் தலைவன்லே செஞ்ச மாதிரி வேறே எந்த வீட்டுலேயும் இவர் இது வரையிலும் நுழையல்லேன்னு நெனக்கிறேன்.
மாடிப்படியிலே ஏறும்போது பாதி வழியிலே சந்தேகம் வந்து தான் ஏறறேனா இல்லை இறங்கறேனான்னு சந்தேகம் வந்துடும். வேகவேகமா வருவார் என்னன்னு கேட்டா இப்ப நான் எதுக்காக இங்கே வந்தேன்னு என்னையே திரும்பிக் கேப்பார்.
ஒரு கல்யாணத்துக்குப் போய் அங்கே அந்த மண்டபத்துலே யாரும் இல்லாத போது அங்கிருந்த வாட்ச்மேனை விசாரிச்சா அவர் விசாரிச்ச அந்த கல்யாணம் நேத்தே நடந்து முடிஞ்சி போச்சுன்னு சொன்னார்.
இன்னொரு சமயம் எங்க சொந்தக்காரப்பையன் கல்யாணத்துக்குப்போறேன்னு சொல்லி பையனோட பேரையும் பெண்ணோட பேரையும் மறந்து போய், வேறு ஒரு கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணி அங்கே பிரேக்.ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு பையனுக்கு ஓதியிட்டுட்டு வெளியே வந்த பத்திரிகையைப் பார்த்த பிற்பாடுதான் தான் வேறே ஒரு அழைக்காத கல்யாணத்துக்குப் போனது தெரிஞ்சது. இப்படி ஒண்ணா ரெண்டா,
ஏதாவது நல்ல மருந்தாக கொடுங்க டாக்டர். என்றார். அவர் மனைவிக்கு அவர் கவலை. டாக்டரும் அவருடைய ஸ்கேன் ரிப்போர்டைப் பாரத்து விட்டு “இவருக்குத் தலையில் எதுவுமில்லை..”
“என்ன டாக்டர் சொல்றீங்க?”
“பிரச்சினை எதுவுமில்லைன்னு சொல்ல வந்தேன்”.
ஆயுர்வேதத்துலே இதுக்கு வல்லாரை சாப்பிட்டா ஞாபக சக்திக்கு நல்லதுன்னு சொல்றாங்களே.
“எனக்கு அதுபத்தி எதுவும் தெரியாது. நீங்க நான் கொடுக்கிற மருந்து மாத்திரையோட நீங்க அதை டிரை பண்றதனாலே பிராப்ளம் எதுவும் வராது. நான் கொடுக்கிற மருந்து மாத்தரைகளை தவிர யோகாசனம், த்யானம் எல்லாம் கூடவே செஞ்சிட்டு வந்தா பலன் கிடைக்கும்.நீங்க எவ்வளவு நம்பிக்கையோட செஞ்சிகிட்டு வரீங்கங்கறதைப் பொறுத்து இருக்கு இம்ப்ரரூவ்மெண்ட்” என்றார்.
அவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொண்டு இருவரும் புறப்பட்டனர். அவரை அவர் மனைவி மறக்காமல் மருந்து மாத்திரைகளை சாப்பிட வைக்க அவர் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்.
இவர் ஞாபக மறதிக்காக ஒரு டாக்டரைப் பார்த்த விஷயம் அவருடைய நண்பர்கள் எல்லோருக்கும்தெரிந்தது.
ஒரு நாள் அவருடைய நண்பர் ஒருவர் அவரைப்பார்க்க வந்தார். வந்தவர் தானும் தன் அப்பாவின் ஞாபக மறதிக்கு ஒரு டாக்டரிடம் தன் அப்பாவை அழைத்துச் செல்லலாம என்றிருந்தார். அதைப்பற்றித்தெரிந்து கொள்ளவே இந்த புரொபசரைப்பார்க்க வந்தார். “என்ன மகாதேவன், நீங்க இப்ப ஒரு டாக்டரை உங்க ஞாபக மறதிக்காக பார்க்கப்போனீங்கன்னு கேள்விப்பட்டேன். எங்க அப்பாவின் ஞாபகமறதியால் நாங்க படற அவஸ்தை சொல்லி முடியாது. ஒருநாள் அவர் ரோட்டிலை ஒரு ஓல்ட் பிரண்டைமீட் பண்ணி ஒரே சிரிப்பும் சந்தோஷமுமா ஒருத்தரை ஒருத்தர் ஹக் பண்ணிக்கிட்டு தங்களோட ஸ்கூல்டேஸ், காலேஜ் டேஸைப் பத்தி எல்லாம் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் பேசிட்டு
“சேஷூ, உன்னை இத்னை வருஷம் கழிச்சி மீட் பண்ணினதில் ரொம்ப சந்தோஷம்”னு சொல்லி கிளம்பும்போது “ என்னடா கோகுல்? என் பேரையே மாத்திட்டயேடா” என்று அவர்சொல்ல,இவர் “என்பேர் ராகவ்” என்று சொல்ல மறு விசாரணை ஆரம்பம் ஆச்சுன்னா இன்னுக்கு இந்த விவகாரம் முடியாதுன்னு, என் அப்பாவை அவரோட பிரண்ட் கிட்டே இருந்து பிரிச்சி வீட்டுக்குக கூட்டிககிட்டு போறதுக்குள்ளே நான் பட்ட பாடு ஒரு நாய்கூட பட்டு இருக்காது. போதும் போதும்னு ஆயிட்டுது. அதனாலே இவர் ஞாபக மறதிக்கு ஏதான உடனடியா செய்யல்லேன்னா இது எங்கே போய் முடியுமோன்னு பயந்துகிட்டு உங்களைப்பாக்க வந்தேன். அவரை உங்க டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டுப்போகலாம்னு இருக்கேன்.அது சம்பந்தமாத்தான் நான் உங்களைப்பார்க்க வந்தேன்.
“அப்படியா? சந்தோஷம். என்ன வேணும்உங்களுக்கு?”
“நீங்க போய்ப் பாத்தீங்களே அந்த டாக்டர் பேரும் அட்ரஸும் வேணும்”.
“டாக்டர் பேரும், அட்ரசுமா?”
யோசிக்கிறார், யோசிக்கிறார். யோசித்துக் கொண்டே இருக்கிறார்.
“அந்த டாக்டர் பேரு ரனாவுலே ஆரம்பிக்கும்”
“ரனாவா ராவன்னாவா?”
“இதுவோ, அதுவோதான்”.
“ஒரு செடி, அதுலே கூட முள்ளு நிறைய இருக்குமே?”
“கருவேலஞ்செடியா?”
“இல்லே. அதோட பூகூட செகப்பா இருக்கும், நல்ல வாசனையாவும் இருக்குமே”
“ரோஜாவா? ”
“ஆம் அதேதான். ரோஜா. ரோஜா”
“யாரு இந்த ரோஜா?”
“அவ என் ஒய்ப்தான்”
அவர்உள்ளிருந்து வருகிறார். “என்பேர்சரோஜா. பேர்நீளமா இருக்குன்னு இவர் ஃபீல் பண்ணி அதை சுருக்கி ரோஜான்னு கூப்பிடுவார்.அதையும் சில சமயம் மறந்து உன்னைத்தானேன்னு கத்துவார். அடியேன்னு எல்லாம் கூப்பிட மாட்டார். சரி எதுக்கு என்னை இப்ப கூப்பிட்டீங்க?”
“நான் உன்னைக்கூப்பிட்டேனா?”
“என்ன சார்? இப்பத்தான் கூப்பிட்டீங்க ரோஜான்னு, அதுக்குள்ளே மறந்துட்டீங்களா?”
“இல்லை. இல்லை. இவளை எதுக்குக் கூப்பிட்டேன்?”.
“நான் நீங்க போன டாக்டர் பேரைக்கேட்டேன். அப்பத்தான் இவரைக்கூப்பிட்டீங்க.”
“இப்ப ஞாபகம் வந்துடுத்து. என்ன ரோஜா நாம் அன்னிக்கு ஒரு டாக்டர் கிட்டே போனோமே நம்ம ஞாபக மறதிக்கு”
“உங்க ஞாபக மறதிக்கு”
“அதுக்குத்தான். அந்த டாக்டர் பேர் , அட்ரஸ் இவங்க கேக்கறாங்க”.
“அதுவா?”, என்று டாக்டர்பேரும் அட்ரசும் கொடுக்கிறார் ரோஜா.
“என்ன இவர் ஞாபக சக்தியே இம்ப்ரூவ் ஆகல்லே போல இருக்கே.டாக்டர் சுமார்தானா?”
“இப்பத்தானே ஒரு வாரம் ஆயிருக்கு. போகப்போக இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்னு டாக்டர் சொல்லி இருக்கார். ஆனால் இவர் மருந்து சாப்பிடறதை மறந்தது மாத்திரம் இல்லே. டாக்டர் சொன்ன மத்த விஷயங்களையும் பண்றதே இல்லை.மறந்துடறார்” .
“என்ன விஷயம் நான் பண்றதே இல்லை?”.
“அதான், யோகாசனம், தியானம்.”
“டாக்டர் எப்ப சொன்னார்?”
“இவராலே எனக்கே இப்ப ஞாபக மறதி ஜாஸ்தி ஆயிட்டுது”.
“சரி. நான் நம்பிக்கையோட வந்தேன்”.
“இவரை வெச்சி நீங்க அந்த டாக்டரை எடை போடாதீங்க.”
“சரி நான் போயிட்டு வரேன்”( புறப்படுகிறார்)
அவர் போனவுடன்
“இப்ப வந்துட்டுப்போறவர் உங்க ஃப்ரெண்டுன்னாரே?”
“இருக்கலாம். எங்கேயோ பாத்து இருக்கேன்”.
“அவர்பேர் என்ன? “
“நானும் அவன் வந்த நேரத்துலே இருந்து அதைத்தான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன். மறந்து போச்சு”
“ஐயையோ. நான் பாலை எரியற ஸ்டவ்மேலே வெச்சிட்டு நீங்க கூப்பிட்டீங்கன்னு வந்தேன். பால்பூராவும் பொங்கி அடுப்புலே போற தீஞ்ச வாசனை. உங்களோட பேசினா எனக்கும் உங்க ஞாபக மறதி ஒட்டினுட்டுதுன்னு நெனக்கிறேன்.”
ஒருநாள் பக்கத்து வீட்டுப் பரசுராமன் ஆபீஸிலிருந்து தன்வீடு திரும்பிய உடன் மறதி மகாதேவன் தன் வீட்டு வாசற்படியில் அமர்ந்துகொண்டு திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருப்பதைப்பார்த்தார். என்னவென்று விசாரிக்க இவர் வீட்டு லாக் நம்பரை மறந்து விட்டதாகவும் கதவை எப்படி திறப்பது என்று தெரியாமல் தவிப்பதாகவும் இவர் மனைவி தன் அம்மா ஊருக்குப் போயிருப்பதாகவும் அவளும் வீட்டு லாக் நம்பரை கிச்சன் அஞ்சறைப்பெட்டியில் பத்திரமாக வைத்து இருப்பதாகவும் அதை அவரிடம் கொடுக்க மறந்து விட்டதாகவும் போனில் சொல்ல என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த கதையை சொல்லி முடித்தார். பிறகு மனைவி வரும் வரையில் தன் நண்பர்வீட்டில் தங்கி இருப்பதாக ப்ளான் பண்ணினார்.. பிறகு மனைவி வர இன்னும் ஒரு வாரம் ஆகும் என்ற நிலையில் அவ்வளவு நாட்கள் தங்கி தன் நண்பனின் நட்பை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் மறுநாள் பூட்டை உடைப்பதில் கெட்டிக்காரனான முத்துவைக் கூப்பிட்டு உடைத்ததில் கதவு டேமேஜ் ஆகிவிட, வேறு புது கதவு போடவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் முத்துவின் கூலி நூறு ரூபாய்உட்பட புதுக்கதவை செய்து பொருத்த 1765 ரூபாய் சொச்சம்செலவாகவே ரோ்ஜா போனில் எனக்கு 100 ரூபாய்செலவு செய்ய நூறு கணக்குப்பார்ப்பீர்களே இப்ப உங்க மறதியாலே எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டு விட்டது பார்த்தீர்களா என்று தன் ஞாபக மறதியை மறைத்து இவரை கேட்க இவர் அந்தக் கதவு உடைந்தது போல் மனம் உடைந்து போனார்,
இவர் மறதியைப்பத்தி எழுத ஆரம்பிச்சா அது மகாபாரதம் மாதிரி போய்க்கிட்டே இருக்கும் நாம எல்லோருமேே மறதி மன்னர்களாக இல்லாவிட்டாலும் மறதிக்குடிமகன்கள்தான். குடிமகன் எற்றால் நான் அந்தக குடிமகன்களைப் பத்தி சொல்லல்லே.
இதற்கு இடையில் மறதி மகா தேவன் வயதான காலத்தில் அனாவசிய நடை குறைக்க இது வசதியாக இருக்குமே என்று கார் வாங்கினார், மனைவியின் முழுச்சம்மத,த்துடன். அவர் மனைவிக்கும் டிரைவிங் கற்றுக்கொடுத்தார்.ஒரு நாள் இவர் ஒரு மாலுக்குப் போனார். அங்கு அவர் மனைவி எழுதிக்கொடுத்த லிஸ்ட் பிரகாரம் பொருட்களை வாங்கிக்கொண்டு தான் கார் பார்க் செய்த இடத்துக்கு வந்தார். வந்தவர் அதிர்ச்சி அடைந்தார், தன் காரைக்காணவில்லை. இவர் காரைப் பார்க் செய்யும்போது காரின்கீயை காரின் இஞ்சினிலேயே விட்டு விடுவது வழக்கம். இதை அவர் மனைவி பல முறை கண்டித்தும் இவர்தான் மறதி மகாதேவன் ஆயிற்றே, காரிலேயே சாவியை விட்டுவிடுவதை வழக்கமாக க்கொண்டார். . எனவே இன்றைக்கும் அப்படித்தான் காரிலேயே காரின் சாவியை விட்டு விட்டபடியால் தன் காரை யாரோ அபேஸ் பண்ணி இருக்க வேண்டும். இது தன் மனைவிக்குத் தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவாள் என்று உடனடியாக போலீசுக்கு புகார் செய்து விட்டார்.
எதற்கும் தான் வீட்டுக்கு வர தாமதமாகும் என்பதால் தைரியத்தை வரவழைத்துக கொண்டு தன் மனைவியை போனில் கூப்பிட்டு “ ஹலோ, கமலா நான் தான் பேசுகிறேன்” என்று சொல்ல அது மறதி மகாதேவனிடமிருந்து வரும் போன்தான் என்பதை அறிந்து கொண்டு
“:நான்தான் ரோஜா பேசறேன். அதுக்குள்ளே என் பேர் மறந்து போச்சா?” என “ சரி அதை விடு. அதைவிட முக்கிய சமாசாரம். என்காரை இங்கே மாலில் பார்க் செஞ்சு வெச்சிருந்தேன். எவனோ திருட்டுப்பய காரை லவட்டிக்கிட்டு போயிட்டான். போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்து இருக்கேன்” என்றார்,
“என்னங்க இப்படிப்பண்ணிட்டீங்க?. இன்னிக்கு நான்தானே கார் டிரைவ் பண்ணி அந்த மால்லே உங்களை இறக்கிவிட்டு உடனே காரை எடுத்துக்கிட்டு வீட்டுக்குக்கிளம்பிட்டேன். இருங்க ஒரு நிமிஷம் லைன்லேயே இங்கே காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்குது என்று சொல்லி அந்த அம்மா கதவைத்தட்டுயது யார் என்று பார்க்க கதவைத் திறந்தபோது இரு ்போலீஸ்கார்ர்கள் நின்று கொண்டி இருந்தனர். இவர் என்ன என்று கேட்க.
“இங்க வாசல்லே நிக்கறதே அது யார் காருன்னு கேட்க,
“ஏன் எங்களது தான்” என்று சொல்ல ,
“இந்தக்கார் எப்படி இங்கே வந்தது?” என்று கேட்க,
“நான்தான் ஓட்டி வந்தேன்” என்றார்
“எங்களுக்கு ஒரு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு இந்தக கார் திருட்டுப் போயிட்டதாக. கம்ப்ளேயிண்ட் பண்ணினவர்பேர் prof மகாதேவன் . காரை நீஙகதான் அந்த மாலில் இருந்து ஓட்டி வந்ததாக சொல்றீங்க. எனவே உங்களை நாங்க அரெஸ்டு பண்ண வேண்டி இருக்கும்” என்று சொல்ல
“சார், அவர்வேறே யாரும் இல்லே. என்னோட ஹஸ்பெண்ட்தான்” என்றார்.
“ஒருநிமிஷம் வெயிட் பண்ணுங்க. நான் அவரோட தான், இப்ப பேசிக்கிட்டு இருந்தேன். அவர் இன்னும் லைன்லே வெயிட்பண்ணிக்கிட்டு இருக்காரு” ன்னு சொல்லி
“ என்னங்க? லைன்ல தானே இருக்கீங்க?. நீங்க கம்ப்ளையிண்ட் கொடுத்ததை வெச்சி ரெண்டு போலீஸ்காரங்க நம்ம வீட்டு வாசல்லே அந்த கார் நிக்கறதைப்பாத்துட்டு என்னை அரெஸ்ட் பண்ண வந்து இருக்காங்க. இதனாலே காரை எடுத்துக்கிட்டு அங,கே வந்து உங்களை பிக் அப் பண்றதுக்கு இவங்க அல்லவ் பண்ண மாட்டேங்கறாங்க. நீங்க சட்டுனு ஒரு ஆட்டோவோ டாக்ஸியோ புடிச்சி வீட்டுக்கு வாங்க.” என்று கூறி, போலீசிடம்.
“ அவர் இன்றும் 20 நிமிஷத்துலே வந்துடுவாரு”ன னு சொல்லி ஒரு விதமா நிலைமையை சமாளிச்சாங்க. மகாதேவனும் ஒரு ஆட்டோவிலே அவசர அவசரமா வந்து இறங்கி போலீசிடம் விவரமா நடந்ததைச்சொல்லி, கொடுத்த கம்ப்ளயிண்டை வாபஸ் வாங்கி நிலைமையை சமாளிச்சார்.
அடுத்த வாரமே காரும்வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்னு, அதை தொலைக்காம வித்துதொலைச்சாருன்னு நான் சொல்லணுமா என்ன?
இவரைப் பத்தி ரொம்ப முக்கியமான விஷயத்தை சொல்லணும்னு நெனச்சேன். மறந்துட்டுது. மன்னிச்சிடுங்க. எனக்கு ஞாபகம் வந்தால் அப்போ உங்க கிட்டே அந்த கதையை சொல்றேன். என்ன ஓகேயா? ( ஞாபக மறதி முற்றும். என்ன சொல்றீங்க?. நீங்க எழுதின இந்தக்கதையை படிச்சா, பிஞ்சா இருக்கிற எங்க ஞாபக மறதி முத்தும்னு சொல்றீகளா? அட பாவமே)