முண்டாசு கவிதையே
சாதி மத பேதத்தை எல்லாம்
சம்மட்டியால் அடித்தவனே!
கவிதை என்னும் ஆடை உடுத்தி
கம்பீரமாய் நடந்தவனே!
விடுதலை வேட்கை கொண்டு
வேங்கை என நின்றவனே!
வறுமையில் வாடிய பொழுதும்
மண்டியிட மறுத்தவனே!
கடவுளுடன் பேசி மகிழும்
பேராற்றல் பெற்றவனே!
செல்லம்மாவை மணக்கும் முன்பே
கண்ணம்மாவோடு கலந்தவனே!
வீழ்வேனென்று நினைத்தாயோ!- என
இன்று வரை நிலைப்பவனே!
தாய்மொழியின் பெருமை தனை
தரணி எங்கும் விதைத்தவனே!
ஆயுதம் ஏதுமின்றி
கவிதையால் ஜெயித்தவனே!
சுதந்திர தாகம் கொண்டு
சுயநலத்தை கொன்றவனே!
நீ பிறந்த நாள் இன்று -என
பிதற்றுகிறது உலகம்,
பிறப்பு இறப்பு எல்லாம்
சாமானியனுக்கு மட்டும் தானே?
சரித்திர புகழ் கொண்ட
உன்னை போன்ற மகாகவிக்கு அல்லவே!
இதை எப்படி சொல்லி
புரிய வைப்பேன் நான்?
மாவீரன் நீ !
மகாகவி நீ!
மாமலை நீ !
மகாஞானி நீ !
உன்னைப்போல் போராட ஆகாது எனினும்,
இன்றுவரை உன்னைப்போல்
நிலைத்திருக்க இயலாது எனினும்,
பேராசை எனக்கும் உண்டு
உன்னைப் போல் - ஒரு கவிதை
என் வாழ்நாளில் எழுதிவிட்டால்
அது போதும் எனக்கு,
ஆயிரமாயிரம் தமிழ் வணக்கங்களை
காணிக்கையாக்குறேன்
உன் திரு பாதங்களுக்கு.
ந.சத்யா