ஒருமைப்பாடு ஓங்க

வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்றிருக்கும் நாடு !
வெறுப்புதனை விதைத்துவிடின் என்றும்சுடு காடு !
மாற்றுமதம் என்பதெல்லாம் மனதினுக்குக் கேடு !
மானுடத்தின் மாண்புதனை எடுத்துநீயும் பாடு !
போற்றுகின்ற பண்புதனைக் கொண்டுவிடு நாளும் !
பகையெல்லாம் ஒழிந்துவிட மனிதஇனம் மீளும் !
ஆற்றிலோடும் தண்ணீரைப் பகிர்ந்துநாளும் தந்து
அன்புயெனும் பாசத்தாலே ஒன்றிணைந்து முந்து !

சாதியென்றும் மதமென்றும் பிரிப்பதனைத் தள்ளு
சரித்திரமாய் வாழ்ந்துநாளும் உலகினையே வெல்லு !
மோதியிங்கு மாளுகின்ற கொடுமைதனைக் கொல்லு !
மனிதகுணம் மறப்பவரை ஆக்கிவிடு புல்லு !
நீதிதனை அனைவருக்கும் பொதுவெனவே ஆக்கு !
நாட்டினிலே அவர்வாழ நல்லவழி தேக்கு !
ஊதிஊதி பகைவளர்ப்பார் உறவுதனை நீக்கு !
ஊறுகளால் தீயிடுவார் எண்ணமதைப் போக்கு !

நல்லிணக்கம் வளர்த்துவைக்க முயன்றிடுவாய் கண்ணு
நாடுசெழிக்க வேண்டுமென்று நெஞ்சத்திலே எண்ணு
தொல்லைதரும் சாதியினை தூரத்திலே தள்ளு !
இல்லையொரு இன்னலென்று இன்பத்திலே துள்ளு!
வல்லூறாய் வானத்திலே வட்டமிடும் பொய்மை
வலைபோட்டு அதைப்பிடித்துக் கணடிடுவாய் தூய்மை !
நல்லோர்கள் எந்நாளும் வல்லோராய் வாழின்
நலமெல்லாம் தேடிவந்து அமர்ந்துவிடும் தோளில் !

மதத்தாலே வேறுபட்டு மோதியிங்கு வாழும் !
மடமையினால் மானுடமே மண்மீதில் வீழும் !
உதவாத கொள்கையினால் ஊறுகளைச் செய்வார்
ஊருதனை இரண்டாக்கி வஞ்சகத்தால் வெல்வார்
மதமெல்லாம் ஒன்றாகும் மனதினிலே ஏற்பாய்
மானுடத்தைப் பிரிக்காமல் ஒன்றிணைக்கப் பார்ப்பாய்
அதர்மத்தை விதைக்காமல் அன்புவழி செல்வாய்
அடிமையென எண்ணாத உள்ளமதைக் கொள்வாய் !

பெரியாரின் பாதையினைப் பற்றோடு ஏற்று !
பாரெங்கும் யாவரையும் பண்போடு போற்று !
அறிவுனாலே யாவினையும் பகுத்தறிந்து பாரு !
அனைவருக்கும் கல்வியெனும் கொள்கையினைக் கூறு !
உரிமைகளைப் பறித்திடுவார் கூட்டமதைக் கண்டு
ஒதுங்காமல் அன்னவரை ஏற்றிடுவாய் கூண்டு !
நரித்தனத்தால் மானுடத்தைப் பிரித்தாள எண்ணும்
வஞ்சகத்தின் வேரினிலே நெருப்பதனைக் கொட்டு !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (26-Dec-21, 10:14 pm)
பார்வை : 51

மேலே