நிலைஉயர வேண்டும்

மதமென்னும் மதம்பிடித்த மாந்தர்
மனமெல்லாம் மடமைகொண்டு வீழ்வர்
உதவாத கொள்கையிலே வீழ்ந்து
ஊறுபல செய்வதிலே வல்லார்
இதமான இதயமதைக் கொள்ளார்
இல்லாமை இருள்தன்னப் போக்கார்
பதவிக்காய் பல்லிளித்து நிற்கும்
பாவிகளைக் கொண்டதுவே நாடு !

இறைவனையும் இருட்டறையில் வைத்து
அடிமையென மற்றவரைத் தூற்றும்
குறைகூறி கும்மாளம் போடும்
குணங்கெட்டார் கொள்கையினை ஓட்டி
மறைந்திருந்து வன்முறையைத் தூண்டும்
மாந்தரினை அடையாளம் கண்டு
நிறைகொண்ட மாந்தரென மாற்ற
நெஞ்சத்தில் சூளுரைத்து வெல்வோம்.

திண்டாடிக் கிடந்தவர்கள் வாழ
திட்டமெல்லாம் போட்டிடணும் இன்று
மண்ணெல்லாம உயிர்பெற்று மீளும்
மாந்தர்தம் தொற்றதுவும் ஓடும்
எண்ணமதில் நல்லுணர்வே பொங்க
இமயமென உயர்ந்திடலாம் ஓங்கி !
கண்மூடி வாழ்ந்தநிலைத் தேய
கொண்டாடி மகிழ்ந்திடலாம் இன்று !

பொல்லாதார் கைதனிலே நாடு
புழுவாகித் துடிப்பதனை மாற்றி
நல்லார்கள் கைதனிலே கொடுத்து
நலம்பலவும் பொங்கவைக்க வேண்டும்
வல்லரசாய் நாடுதனை என்றும்
வஞ்சகரும் ஏற்றிடவே வேண்டும்
இல்லாத பொருள்பலவும் இங்கே
இல்லையெனும் நிலைஉயர வேண்டும்
************03-10-2021 *******

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (26-Dec-21, 10:09 pm)
பார்வை : 58

மேலே