பேரூவகை கொடுக்குமன்றோ

பட்டுஉடல் பார்த்தாலே தொட்டுவிடத் தூண்டுதன்றோ ?
எட்டநின்று பார்த்தபோது ஏக்கமது தோன்றுதன்றோ ?
கிட்டத்தில் சென்றணைத்துக் கொஞ்சிடவே வைக்குதன்றோ
சிட்டாகிச் சிந்தனைகள் சிறகடித்துப் பறக்குதன்றோ ?

காற்றெனவே கைகள்வந்து கன்னமதைத் தொட்டபோது
நாற்றெனவே உடலதுவும் நெகிழ்ச்சியிலே குலுங்குதன்றோ ?
ஊற்றாக உதட்டினிலும் புன்னகைப் பூ பூக்குதன்றோ ?
மாற்றங்கள் தேடிவந்து மனதிலிடம் பிடிக்குதன்றோ ?

குழலினிது யாழினிது ! கொண்டாடும் குழவியதன்
மழலைமொழி அதனைவிட இனிதென்றே இருக்குதன்றோ ?
அழுதபோது சினந்திடினும் அடுத்தநொடி சினந்தணிந்து
தழுதழுக்க வைக்கின்ற தன்மையினைக் கொள்ளுதன்றோ ?

மழலையோடு மழலையாக மாறிவிட்டால் மகிழ்ந்திடலாம்
அழகுகொஞ்சும் வண்ணமயில் ஆட்டமதைக் கண்டிடலாம்
பழகுகின்ற மழலையாலே பரவசத்தை அடைந்திடலாம்
அளைவிவைக்கும் கூழதனை அமிர்தமென உண்டிடலாம்.

எட்டிஎட்டி உதைத்தாலும் உதைத்தகாலைக் கொஞ்சிடலாம்
வட்டியோடு வட்டிசேர்த்து வாரிவாரி அணைத்திடலாம்
ஒட்டிஒட்டி வந்துநின்று ஊறுசெய்த போதினிலும்
தட்டியதைக் கொட்டிடாமல் தழுவிடவே தூண்டுமன்றோ ?

விரும்புகின்ற பொருள்யாவும் வாங்கிடவே தோன்றுமன்றோ
அரும்பிவரும் போதினிலே ஆசைபல பெருகுமன்றோ ?
கரும்பதுதான் என்றாலும் கண்விழியில் சுழலுமன்றோ
இரும்புயொத்த கடுமனமும் இளகியங்கே ஓடுமன்றோ ?

குறும்பெல்லாம் செய்தாலும் கோபமின்றி பேசுகின்ற
பொறுமையினை உள்ளத்தில் பக்குவமாய் விதைக்குமன்றோ?
நறுமணத்தை நாசிதன்னில் நாளெல்லாம் வீசுமன்றோ ?
பெருமையுடன் பெற்றோர்க்கு பேரூவகை கொடுக்குமன்றோ?

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (26-Dec-21, 9:59 pm)
பார்வை : 15

மேலே