செய்கையால் உயர்ந்து நின்றாய்

எப்போது நீபிறந்தாய் என்பதுவும் தெரியவில்லை
அப்பதோது நீவாழ்ந்த உயர்ந்தநிலை புரியவில்லை
ஒப்பென்று சொல்லுதற்கோ உலகத்தார் ஆய்வில்லை
ஒருபோதும் உன்புகழை ஒழித்திடுவார் யாருமில்லை
இப்போதும் உனைஇகழ்வார் உறவினுக்கும் இடமில்லை
எதிர்காலம் உனைப்போற்றும் என்பதற்கும் தடையில்லை
நப்பாசை கொண்டோரும் நலிவுதர வாய்ப்பில்லை
நன்றாக தழைத்தென்றும் விண்போன்று வாழ்ந்திடுவாய் !

கடல்கடந்து சென்றிடவே கலம்பலவும் ஓடவைத்தாய்
கணக்கற்ற நாடுகளில் காலூன்றி நீவென்றாய்
அடங்காதார் தலைதட்டி அடங்கிடவும் செய்திட்டாய்
அவசியமாய் ஆனபொருள் அத்தனையும் விளைவித்தாய்
முடங்காமல் வாணிபத்தை முழுமூச்சாய் கொண்டிட்டாய்
மானுடத்தின் வளர்ச்சியினை மனதார நினைத்திட்டாய்
தடம்பதிக்கா இடமில்லை தமிழ்மணக்க வைத்திட்டாய்
தமிழ்மண்ணைத் தாயாக்கித் தாலாட்டுப் பாடிட்டாய் !

நாடுபல வென்றபோதும் நாடாள எண்ணவில்லை
நல்லபல செய்கையினால் நாணயத்தை விதைத்துவைத்தாய்
காடுதனைச் சீர்செய்து களனிகளாய் அதைமாற்றி
குளம்வெட்டி நீர்தேக்கி கால்வாயில் ஓடவிட்டாய்
மாடுகளை நீபழக்கி மணைதன்னை உழவைத்தாய்
மண்வளத்தால் விளைவாக்கி மானுடத்தை உண்ணவைத்தாய்
ஏடுகளும் உன்செயலை ஏற்றமுடன் பாடிவைக்க
எந்நாளும் உன்பெருமை ஏற்றமுடன் இருக்குதன்றோ !

வளமையுடன் வாழந்ததனால் வரலாற்றில் வாழ்கின்றாய்
வாழ்ந்த்தொரு பண்பாட்டை வரிதோறும் எடுத்துரைத்தாய்
அளவற்ற பொருளீட்டி அகிலமெல்லாம் வலம்வந்து
அரியனவாய் பலவற்றை அழகாக படைத்திருந்தாய்
உளத்தோடு உறவுகொண்டு ஊரோடு வாழ்ந்திருந்து
உயர்வான கலைபலவும் உழைப்பாலே தோன்றுவித்தாய்
களிப்போடு இன்றிங்கு கண்ணியமாய் வாழ்வுகொண்டு
காலத்தால் நிலைதென்றும் கடமைதனைச் செய்வீரே !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (26-Dec-21, 9:57 pm)
பார்வை : 72

மேலே