புன்னகையின் மந்திரம்
புன்னகையின் மந்திரம்
தீர்க்க இயலா பல வினைகளுக்கு
புன்னகை ஓர் சிறந்த தீர்வாகும்
நம்மை அறியாமலே
நம்மில் நிறைந்த புன்னகைகள் பல
நம் துயரம் தீர்த்த புன்னகைகள் பல
நம்மை அடையாளம் காணவும்
அடையாளம் கொள்ளவும்
ஓர் புன்னகை தேவை என்ற சூழலில்
வாழும் நமக்கு புன்னகையின் மந்திரம்
புரியாத புதிராகவே அமைகிறது
சில புன்னகைகளுக்கு விடையில்லை
சிலவற்றிக்கு வினாயில்லை
அவை உணர்த்தும் எதார்த்தம் பல
அதை கடப்பதும் அனுபவிப்பதும்
நம்மை பொருத்தே அமைகிறது
இதுவே இயற்கையின் நியதி எனலாம்
நம்மில் சில புன்னகை
நம் மனதில்
நீங்கா இடம் பிடிக்கும்
அது நம் பருவத்தை
காலம் கடந்தும் அதே
அழகியலோடு என்றும் காட்சிபடுத்தும்
முதல்முறை அம்மா என்றழைத்தபோது
பார்த்த தாயின் புன்னகை
நெஞ்சில் உதைத்தபோதும் சிரித்த
தந்தையின் புன்னகை
டேய் தம்பி பயலே என்றழைத்த உடன்பிறப்பின் புன்னகையும்
உடன்பிறவா புன்னகையும்
இன்றும் நம் நெஞ்சம் நிறைந்த ஒன்று
ஒவ்வொரு பருவத்திலும் ஓர்
புன்னகை என நம் வாழ்வியல் முழுதும்
பல புன்னகைகள் நிறைந்து கிடக்கின்றன
அவை ஏதோ ஓர் தாக்கத்தை
ஓர் நிறைவை
ஓர் அமைதியை இன்றும் நமக்கு
ஏற்படுத்திகொண்டே இருக்கும்
பள்ளிப்பருவத்தில் நம் அழுகையை
போக்க நம்முன் கோமாளியாக மாறிய
ஆசிரியரின் புன்னகை ஓர் மந்திரம் எனலாம்
சேட்டைகள் நிறைந்த நண்பனின் சிரிப்பும்
குறும்பு பார்வை கொண்ட
தோழியின் சிரிப்பும் காலம்
கடந்தும் இனிமையே
சில புன்னகைகள் நம்
இளமையை தூண்டச்செய்யும்
நம் உறக்கம் கெடுக்கும்
பருவ அலைகளை சூறைகாற்றோடு வீசும்
ஆம் முதல் வெட்கமும்
முதல் காதலும் புன்னகையின்
வெளிப்பாடு என்பதை யாரும்
மறுக்க இயலாது
சில புன்னகைகள் நம் வாழ்வில்
மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும்
தீரா சோகம் நெஞ்சம் நிறைந்து
தனிமையில் வாழ்வை தொலைத்துவிட்டோம் பருவம் இழந்துவிட்டோம்
எதிர்காலம் என்னாகும்
என்றெல்லாம் யோசித்தபடி பயணிக்கும்போது
முன்செல்லும் வண்டியில்
ஓர் குழந்த நம்மை பார்த்து
ஓர் புன்னகை செய்யும்
நம்மை மறந்து சில நிமிடம்
அதனோடே பயணிப்போம்
அத்தனை பாரமும் குறைந்து
மனசு லேசாகும் அந்த ஒற்றை சிரிப்பினில்
நம் வாழ்வை நம் ஆசைப்படி
வாழத்தூண்டும் ஓர்
தேவதையின் புன்னகைதான் அது
வழிப்போக்கனின் வாழ்வில்
இப்படி பல புன்னகைகள்
நிறைந்து கிடக்கின்றன
அவை அனைத்தும் ஏதோ ஓர்
வழியில் நம்துயர் துடைக்கும்
அதுதான் புன்னகையின் மந்திரம்
எழுத்து சே.இனியன்