என் பாட்டி
என் பாட்டி!
அம்மம்மா கேளடி தோழி
*அம்மம்மா* பெருமை சொல்வேன்
சொல்லுதற்கோ ஆயிரம் சேதி
மெல்லுதற்கே சுருங்கத் தந்தேன்
அம்மம்மா வேற்று பெயர் ஆச்சி
எம்மை காக்கும் மருத்துவச்சி
நான் அறிந்த பெயர் பாட்டி
நாட்டில் அதற்கு ஏது போட்டி
பொன் கைகள் இரண்டும்
முன்னிரவில் என் கட்டில்
முன் கால் இரண்டும்
என் குளியல் தொட்டில்
முகம் திருத்தி மையிட்டு
கன்னத்தில் திருஷ்டி பொட்டிட்டு
அகம் குளிர பார்த்து
சுகம் காணும் பாட்டி.
என் தாத்தாவுக்குப் பாட்டி தேவதை
எனக்கோ அன்பு நிறை தெய்வம்
என் தாத்தா பெற்ற பரிசம் - இப்போது
எனக்கு மட்டும் பரிச்சயம்
திண்ணை பள்ளியில் படித்தாள் - அறிவை
பனை அளவு வளர்த்தாள்
தன்னை அறிந்து உயர்ந்தாள்
தாத்தாவின் மந்திரி ஆனாள்
எங்கள் வீட்டு அவ்வை - அவள்
பொங்கு தமிழ் செவ்வை
அடுக்கு மொழியும் பழமொழியும்
மிடுக்காய் பழுத்த கொவ்வை
மிஞ்சிய அறிவின் பொலிவால்
கொஞ்சும் மொழியில் கதைகள்
பஞ்சதந்திர நீதிகள் சொல்லும்
வஞ்சம் இல் அன்பு அறம் பண்பு
துஞ்சல் இல் வீரம் செப்புவாள்.
அஞ்சறைப்பெட்டிக்குச் சொந்தக்காரி
கொஞ்சலால் பணிகள் முடிப்பாள்
ஆதிக்கம் அறியா அதிகாரி
வாதிக்க மறந்த அறிவாளி
அன்பைப் பொழிவதில் பூரணி
அண்டியவர்க்கே அன்னபூரணி
ஆசைகள் அடக்கிய சம்பூரணம்
ஆண்டவன் வழங்கிய வெகுமானம்

