மறந்தானும் தாமுடைய தாம்போற்றி னல்லால் இறந்தது பேர்த்தறிவார் இல் - பழமொழி நானூறு 43
இன்னிசை வெண்பா
மறந்தானும் தாமுடைய தாம்போற்றி னல்லால்
சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்
கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப!
இறந்தது பேர்த்தறிவார் இல். 43
- பழமொழி நானூறு
பொருளுரை:
ஒலிக்கின்ற நீரை உடைய உப்பங்கழிகள் அலைவீசுதற் கிடனாய கடற்கரைச் சோலையை உடைய அழகிய கடல் நாடனே!
தமது கையினின்றும் போய பொருளை மீட்டுத்தர அறிவார் இல்லையாதலால்,
தம்மிடத்துள்ள பொருளை தாம் காவல் செய்யாமல் தமக்குச் சிறந்தார் எனவும், உறவினர் எனவும் கருதி நம்பலாகாதார் கையில் ஒருகால் மறந்தும் வைத்தல் இலர் அறிவுடையார்.
கருத்து:
ஒவ்வொருவரும் தந்தம் பொருளைத் தாமே பாதுகாத்தல் வேண்டும்.
விளக்கம்:
போன பொருளை மீட்டும் பெறுதல் அரிதாகலான், உள்ள பொருள் கைவிட்டுப் போகாதபடி தாமே காவல் செய்தல் வேண்டும்.
'இறந்தது பேர்த்தறிவார் இல்' என்பது பழமொழி.